இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

ஜோதிடரீதியாக எதைக்கண்டு பயப்படுகிறார்களோ இல்லையோ சனிப் பெயர்ச்சி என்றால் பயப்படாதவர்கள் இருக்கவே மாட்டார்கள். குறிப்பிட்ட ராசிகளுக்கு சனி பகவான் நன்மைகளையே செய்தாலும் அவர் பெயர்ச்சியடைகிறார் என்றால் என்ன பலனை தரப்போகிறாரோ என்ற பயம் அனைவருக்கும் இருக்கும். திருக்கணித பஞ்சாங்கப்படி, இந்த ஆண்டு மார்ச் 29ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடந்திருக்கிறது. சனி பகவான் கும்ப ராசியின் பூரட்டாதி 3ஆம் பாதத்திலிருந்து மீன ராசியின் பூரட்டாதி 4ஆம் பாதத்திற்கு பெயர்ச்சி செய்திருக்கிறார். பெயர்ச்சி வரும்போது அவரவர் தன்னை வெளிப்படுத்தி காட்டிக்கொள்வதற்காக ஏதேனும் ஒன்றை செய்கிறார்கள். ‘சனி கொடுத்தால் எவர் தடுப்பார்’ என்று சொல்வதுண்டு. சனியை போன்று கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை. இது உலக மக்கள் அனைவரும் நன்கு அறிந்ததே. எந்த நிலையில் வாழ்கிறவர்களுக்கும் சனீஸ்வரர் என்றாலே ஒருவித பயம் இருக்கத்தான் செய்கிறது. இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி மூலம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்? எந்த ராசிக்காரர்கள் கவனமுடன் இருக்கவேண்டும்? என்று கூறுகிறார் ஜோதிடர் கே.ஆர் மகரிஷி மந்தராச்சலம்.

ஒவ்வொருவர் ராசிக்கும் சனீஸ்வரர் நல்லவரா கெட்டவரா என்பதை முதலில் பார்க்கவேண்டும். சனீஸ்வரர் நீங்கள் பிறந்தபொழுது வக்கிரமடைந்திருக்கிறாரா? திதி சூன்யமடைந்திருக்கிறாரா? அஸ்தமனமடைந்திருக்கிறாரா? வேறு ஏதாவது ஒரு நிலையில் வேறுபட்டிருக்கிறாரா? என்பது போன்றவற்றையும் பார்க்கவேண்டும்.

மேஷம்

சனீஸ்வரர் 12ஆம் இடத்திற்கு வருவதால் ஏழரை சனி ஆரம்பிக்கிறது. ஆனாலும் பயந்துவிட வேண்டாம். ஏனென்றால் இந்தியாவில் மட்டும் மேஷ ராசியில் 15 முதல் 20 கோடி மக்கள் இருக்கிறார்கள். அப்படி பார்க்கையில் மேஷ ராசிக்காரர்கள் எல்லாருக்கும் சனி பெயர்ச்சி பலன்கள் ஒன்றாக இருக்காது. சனி தசாபுத்தி அவதார பலன்கள் நடந்தால் சனீஸ்வரருக்கு முக்கியத்துவம் தரவேண்டும். வேறு கோள்களுடைய தசாபுத்தி நடந்தால் சனிப்பெயர்ச்சி பலன்களை முழுமையாக எடுத்துக்கொள்ள முடியாது. எந்த திதி, கிழமை, நாம யோகம், லக்னத்தில் பிறந்திருக்கிறார்கள் என்பதையும் பார்க்கவேண்டும். மேஷ ராசிக்காரர்களுக்கு சனீஸ்வரர் முழு பாவியாக இருப்பதால் 12ஆம் இடத்திற்கு வருவதில் மிகமிக பாதிப்பு இருக்கும். ஆனால் பிறந்த ஜனன ஜாதகத்தின்படி துவாதசி திதி, திரயோதசி திதி, பிரதமை திதி, சதுர்த்தி போன்ற ஒருசில திதிகளில் பிறந்திருந்தால் ஏழரை சனி முடிவதற்குள் ஒரு உயர்வான இடத்தை உறுதியாக தொட்டுவிட முடியும். இல்லாவிட்டால் மிகமிக கவனமாகத்தான் இருக்கவேண்டும். முதலில் தொழிலில் குழப்பம் வரும், மறதி வரும், சோம்பேறித்தனம் அதிகரிக்கும். சூரிய உதயத்திற்கு முன்னால் எழுந்திருக்க முடியாது. தொழிலில் சிந்தனைகள் போகாது. பலவிதமான குழப்பங்கள் ஏற்படும். நஷ்டங்கள் வரும். அலைச்சல்கள் இருக்கும், கெட்ட பெயர் உருவாகும். சிறுசிறு அவமானங்கள் ஏற்படும். வீண் விரயங்கள், வேண்டாத செலவுகள் ஏற்படும். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காது. ஒவ்வொருவரின் ஜாதகத்தின் தனித்துவத்தை பொருத்து இந்த பாதிப்புகள் மாறுபடும். எனவே ஆன்மிகத்தை அதிகரியுங்கள். காலை உணவாக முந்தைய நாள் செய்த உணவை சாப்பிடுங்கள். வீட்டுப் பிராணிகளுக்கு உணவளியுங்கள். காகங்கள், பறவைகளுக்கு உணவளியுங்கள். முடியாதவர்களுக்கு தானதர்மம் செய்யுங்கள். துர்க்கையை வணங்குங்கள். ராகு நேர வழிபாடு அவசியம். சர்ப்பங்களை வணங்குகள். மே 18க்கு பிறகு ராகு- கேது பெயர்ச்சி இருக்கிறது. ராகு பகவான் 11க்கு செல்வதால் நன்மையே செய்வார் சனீஸ்வரர்.


மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி ஆரம்பம் - ரிஷப ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிட்டும்

ரிஷபம்

மற்றவர்களுக்காக பாடுபட பிறந்தவர்கள். இவர்கள் அனுபவிக்க பிறந்தவர்கள் அல்ல. இவர்களுக்கு சனீஸ்வர பகவான் 11க்கு வருவது மிகமிக சிறப்பு. இதுவரை தொழிலில் இருந்த தடங்கல்கள், கல்வி, வியாபாரம், திருமணம், உடல்நலம், கடன் என அனைத்திலும் இருந்த பிரச்சினைகள் விலகி, நற்பலன்கள் ஏற்படும். சனிப்பெயர்ச்சியை மட்டும் வைத்து பார்க்கும்போது ரிஷப ராசிக்காரர்களுக்கு இது பொற்காலம். முயற்சிகள், ஆசைகள், எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். திருமணமாகாதவர்களுக்கு கைகூடி வரும். இதுவரை தொழிலில் தடுமாற்றம் இருந்தவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். உயர்வுகள் கிடைக்கும். புதிய தொழில்கள் அமையும். இதுவரை இருந்த பிரச்சினைகள் ஓரளவு தீரும்.

மிதுனம்

10ஆம் இடத்திற்கு சனீஸ்வரர் வருகிறார். 10இல் சனி இருப்பின் எட்டி பழம் பறிப்பான் என்ற ஒரு பழமொழி இருக்கிறது. பத்துக்கு சனி வருவது நல்லதுதான் என்றாலும், அவர் சிறப்பாக இயங்க உடன் ஒரு கோள் இருக்கவேண்டும். சிறுசிறு தடங்கல்கள், குழப்பங்கள் இருந்தாலும் அவைகளைத் தாண்டி, போராடியாவது தொழிலில் லட்சியத்தை அடைவீர்கள். பள்ளி, கல்லூரி வயதில் இருப்பவர்கள் கவனமாக செயல்படவேண்டும். வேண்டாத குற்றங்கள் உங்கள்மீது வரலாம். திருட்டுப்போவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அவப்பெயர்கள் வரவும் வாய்ப்புகள் இருக்கின்றன. நன்மையும், தீமையும் கலந்துதான் வரும். போராட்டங்களும் உயர்வுகளும் கலந்துதான் இருக்கிறது. வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.


மிதுன ராசியினர் போராடி லட்சியத்தை அடைவார்கள் - கடக ராசியினர் பிரச்சினை நீங்க வழி கிட்டும்

கடகம்

அஷ்டமத்தில் இருந்த சனி பகவான் ஒன்பதாம் இடத்திற்கு சென்றிருக்கிறார். இதுவரை இருந்த பிரச்சினைகளை சரிசெய்ய ஒரு வழி கிட்டும். ஒன்பதில் சனீஸ்வரர் இருக்கும் காலத்தில் எட்டில் ஏதாவது ஒரு கோள் இருந்தால் சனீஸ்வரர் ஏதாவது நன்மைகளை செய்வார் என்பது விதி. ஆனால் கடகத்திற்கு அவர் அஷ்டமாதிபதி. எட்டிலுள்ள ராகு பகவானால் தப்பிக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. ராகு, துர்கையை வழிபட்டு, ராகு பகவான் சார்ந்த தான தர்மங்கள் செய்துவந்தால் சனீஸ்வரர் ஒருசில நன்மைகளை செய்வார். மே 18க்கு பிறகு அடுத்த ஒன்றரை வருடங்களுக்கு ஒருசில சிறப்புகள் இருக்கும். பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

சிம்மம்

தர்மத்தை தர்மமாகக் கொண்டு இயங்கக்கூடியவர்களாகிய இவர்களுக்கு 8ஆம் இடத்தில் அஷ்டமத்திற்கு சனீஸ்வரர் போயிருக்கிறார். பிரதமை திதி, துவாதசி திதி, சதுர்த்தி திதியில் பிறந்தவர்களுக்கு இப்போதிருந்தே நல்ல பலன்கள் தெரியும். அஷ்டம சனி இவர்களை மிக உயரமான நிலைக்கு அழைத்துச்செல்லும். அற்புதமான பலன்களை வாரிவழங்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும். அந்த திதிகளில் பிறக்காவிட்டாலும் ஏழில் ஒரு கோள் இருந்தால் எட்டிலிருக்கும் சனி பகவான் தவறு செய்யமாட்டார். ஏழில் ராகு இருப்பதால் அடுத்த ஒன்றரை வருடங்கள் பொற்காலம்தான். இதுவரை நினைத்துக்கூட பார்க்காத இடத்தை தொட்டுப்பார்ப்பீர்கள். உடலில் சில மறைமுகமான தொந்தரவுகள் இருக்கும். எனவே உடல்நலத்தில் மட்டும் கவனமாக இருக்கவேண்டும். ஆனால் இதுவரை தடையான அத்தனையும் இறையருளால் முன்னேற்றத்தையே கொடுக்கும். எந்த சனியாக இருந்தாலும் சனி பகவான் வயதுக்கேற்றாற்போல், பாடம் கற்றுத்தருவார். அதை நல்ல நிலையில் கற்றுக்கொண்டால் இயற்கையாகவே சனீஸ்வரர் நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தி தருவார். எனவே 100% தைரியமாக இருங்கள். இதுவரை நடக்காத நல்லவை நடக்கும்.


சிம்மத்திற்கு வாழ்க்கைப்பாடம் கிட்டும் - கன்னிக்கு பிரச்சினைகளை தாண்டி பலன் கிடைக்கும்

கன்னி

7ஆம் இடத்திற்கு சனி வருகிறார். அதனால் சிறுசிறு தொந்தரவுகளுக்கு வாய்ப்பு இருப்பதால் கவனமாக செயல்பட வேண்டும். ஐந்துக்குரிய யோகி ஏழில் இருப்பதால் தவறான இடத்திற்கு கூட்டிச் செல்வார். சிந்தனை, செயல்கள், எண்ணங்கள் உட்பட அனைத்திலும் கவனம் தேவை. கண்டிப்பாக சூரிய உதயத்திற்கு முன்பு விழித்தெழ வேண்டும். உங்களுடைய வேலையை நீங்களே செய்யவேண்டும். ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 5லிருந்து 7 மணிக்குள் வீட்டிற்கு அருகிலிருக்கும் ஏதாவது ஒரு ஜீவசமாதிக்கு சென்று தியானம் செய்யுங்கள். அப்படி செல்லும்போது ரோஜா மாலை மற்றும் இனிப்பு கொண்டுசெல்ல வேண்டும். இதை அனைத்து ராசிக்காரர்களுமே செய்வது நல்லது. அந்த ஜீவசமாதியில் ஏதாவது ஒரு மகானுடைய பூத உடல் இருக்கவேண்டும். இதனால் மிகப்பெரிய யோகம் கிட்டும். பிரச்சினைகள், இன்னல்களைத் தாண்டி அற்புதமான பலன்கள் கிடைக்கும். உடல்நலம் சார்ந்த விஷயங்கள், புதிதாக வாங்கக்கூடிய கடன் போன்றவை வேண்டாம். புதிதாக எதையும் தொடங்கவேண்டாம். 6லிருக்கும் ராகு சனீஸ்வரர் தவறு செய்யாமல் கட்டுப்படுத்தும்.

துலாம்

யார் என்ன சொன்னாலும் நினைப்பதை செய்து முடிக்கக்கூடிய உங்களுக்கு 6இல் சனீஸ்வரர் இருக்கிறார். சனீஸ்வரர் நல்லதை செய்யக்கூடிய இடங்களே, 3, 6 மற்றும் 11 தான். நினைத்தது எல்லாம் நடக்கும். கட்டிடங்கள், நிலம், தொழில், திருமணம், உயர் கல்வி, புது வேலை, குழந்தைப்பேறு என அனைத்துமே அமையும். ஆனால் மே 16ஆம் தேதி குரு 9க்கு செல்வதால் நன்மையை செய்யலாம். அதேசமயம் 6இல் சனி பகவான் இருந்தால் 9இல் எந்தவொரு கோளும் இருக்கக்கூடாது. 9இல் உள்ள குரு 6இல் உள்ள சனியை முழுமையாக இயங்கவிடாமல் தடுக்கும். அதனால் இந்த ஒரு வருடம் குரு மிதுனத்தை கடக்கும்வரை துலாம் ராசிக்காரர்களுக்கு அமையக்கூடிய எதுவும் முழுமையாக அமையாது. இருந்தாலும் ஏதோ ஓரளவுக்கு குறைகள், தவறுகள் இல்லாமல் நடக்கும்.


துலாம் ராசிக்காரர்களுக்கு ஓரளவு குறைகள் இருக்காது - விருச்சிக ராசிக்காரர்களுக்கு சிறப்புகள் வரும்

விருச்சிகம்

எத்தனை சிறப்புகளை பெற்றாலும் கஷ்டப்படவே பிறந்தவர்கள் விருச்சிக ராசிக்காரர்கள். 4இல் இருந்த சனீஸ்வரர் 5க்கு போவதால் ஆரம்பத்தில் பலவிதமான குழப்பங்கள், தொந்தரவுகள், குழந்தைகள் சார்ந்த விஷயங்களில் செலவுகள், பூர்விகம் சார்ந்த விஷயங்களில் நஷ்டங்கள், அசையும் அசையா சொத்துகளில் செலவீனங்கள், உடல்நிலையில் பிரச்சினைகள், தாய்சார்ந்த செலவுகள் என ஏகப்பட்ட செலவுகள் ஏற்பட்டாலும், 4இல் ராகு இருக்கிறார். அதனால் ஒன்றரை வருடங்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்டங்கள் கிட்டும். தேடாமலே ஒருவித சிறப்புகள் வரும். ராகுவையும், துர்க்கையையும் இறுக்கமாக பிடித்துக்கொள்ளுங்கள். பலவித கஷ்டங்கள் சிரமங்களை தாண்டி ஒருசில நன்மைகள் கிடைக்கும்.

தனுசு

இதுவரை வெற்றி ஸ்தானத்தில் அற்புதமாக இருந்த சனீஸ்வரர் இப்போது 4ஆம் இடத்திற்கு சென்றிருக்கிறார். 4 ஒரு தவறான இடம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் 3லிருக்கும் ராகு அவரை தவறு செய்யவிடாமல் தடுப்பார். அதனால் தவறுகள் இருக்காது. எனவே தைரியமாக செயல்படலாம். குடும்பம், பொருளாதாரம், கல்வி, வரவு செலவு, பேச்சு, உணவு மற்றும் உடன்பிறந்தவர்களால் குழப்பம் ஏற்பட்டாலும் அவை பெரிய பாதகத்தை தராது. அடுத்த ஒன்றரை வருடங்கள் ராகு இருப்பதால் அவர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையுடன் இருங்கள்.


தனுசு ராசியினருக்கு உடன்பிறப்புகளால் குழப்பம் ஏற்படும் - மகர ராசியினருக்கு நிம்மதியாக தூக்கம் வரும்

மகரம்

சனி பகவான் திதி சூன்யம் அடைந்திருக்கிற ராசியில் பிறந்திருந்தாலும் அது நல்லது கிடையாது. நீண்டகாலமாக உடல், மனம், சுற்றம் நட்பு, தொழில், குடும்ப உறவுகள், படிப்பு, தூக்கம் அனைத்திலும் கஷ்டப்பட்ட உங்களுக்கு எங்கேயோ ஒரு அற்புதமான திறப்பு இருக்கிறது. சனீஸ்வரரின் பெயர்ச்சி ஒரு ராசிக்கு நல்லது செய்கிறது என்றால் அது மகரத்துக்குத்தான். மகிழ்ச்சியாக வாழப்போகிறீர்கள். எண்ணங்கள் பூரணமடைகிறது. அத்தனை தடங்கல்களும் விலகப்போகிறது. கல்வியில் தரமடையப்போகிறீர்கள். நிம்மதியாக தூக்கம் வரும். நினைத்ததை சாப்பிடுவீர்கள். தொழிலில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். முன்னேற்றம் அடைவீர்கள். நல்ல வருமானம், வீடு, வாசல், வண்டி, வாகனம், வெளிநாட்டு யோகம் அனைத்தும் கிடைக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும்.

கும்பம்

இதுவரை நஷ்டங்கள், கஷ்டங்கள், இடையூறுகள், தடங்கல்கள், மனவேதனைகள், சோம்பேறித்தனம் என அனைத்து கெட்டதும் செய்த சனீஸ்வரர், ஜென்மத்திலிருந்து 2ஆம் இடத்திற்கு சென்றிருக்கிறார். உங்களுக்கு ஒரு வெளிச்சப்புள்ளி தெரிகிறது. சூரிய உதயத்திற்கு முன்பு விழித்துக்கொள்ளுங்கள். உங்களுடைய வேலைகளை நீங்களே செய்யுங்கள். காலையில் வாக்கிங், உடற்பயிற்சி, தியானம், வழிபாடு செய்யுங்கள். பறவைகள், வீட்டு மிருகங்களுக்கு உணவு கொடுங்கள். தேடி வருபவர்களுக்கு முடிந்ததை செய்யுங்கள். யாருக்கும் கெடுதல் நினைக்கவேண்டாம். ஓரளவு நியாயமான நிலையில் பயணித்தால் பாத சனி உங்களுக்கு பாதகமில்லாமல் இரண்டரை வருடங்களை கடக்கச் செய்வார். வழிபாடு தேவை. முக்கியமாக ஜீவ சமாதி வழிபாடு தேவை.


கும்ப ராசியினர் பிறருக்கு கெடுதல் நினைக்கக்கூடாது - மீன ராசிக்கு மிகப்பெரிய யோகம் உண்டு

மீனம்

சனீஸ்வரர் ஜென்மத்திற்கு வந்திருக்கிறார். ஜென்மத்திலுள்ள சனி பகவானுடன் ஒரு கோள் இணைவது சிறப்பு. அவ்வப்போது இணையும் அந்த காலங்கள் மட்டும் நன்றாக இருக்கும். இருந்தாலும் வேண்டாததை எண்ணுவீர்கள், செய்வீர்கள். பிரயாணங்கள் தவறாக இருக்கும். வெட்டிச் செலவுகள் கூடுதலாக இருக்கும். வரவு செலவில் குழப்பம், பேச்சில் சிக்கல் தடுமாற்றம் ஏற்படும். தொழிலில் சிரமங்கள் வரும். உடலில் தொந்தரவுகள், மறதி நிறைய வரும். மனம் குழப்பமடையும். எனவே எதற்கும் இடம் கொடுக்கவேண்டாம். ஆனால் சனி பகவான் சூனியமடைந்திருந்தால் ஜென்ம சனி உங்களை அமைச்சராகவோ உயரதிகாரியாகவோ ஆக்கலாம். ஏழரை சனியால் முன்னேறியவர்கள் உலகில் 60% பேர் இருக்கிறார்கள். எனவே ஒருசிலருக்கு மிகப்பெரிய யோகம் இருக்கிறது. உங்களுடைய வேலைகளை நீங்களே செய்யுங்கள். சூரிய உதயத்திற்கு முன்னால் எழுந்திருங்கள். அடுத்த உயிர்களிடம் பாசமாக இருங்கள். பொய் சொல்லாதீர்கள். சனிக்கிழமை புது துணி உடுத்த வேண்டாம். சனிக்கிழமை காலை, முடிந்தால் பழைய உணவை சாப்பிடலாம். முடிந்தவரை பக்குவமாக நடந்தால் நன்மையே நடக்கும்.

Updated On 8 April 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story