இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

மனிதனுக்கு வாழ்க்கை ஒரே சீராக செல்லாது. ஏற்ற தாழ்வுகளும், நல்லவை கெட்டவையும் சேர்ந்துதான் இருக்கும். இதை வீட்டிலுள்ள பெரியவர்கள் நேரம் சரியில்லை என்பார்கள். உடனே ஜாதகத்தில் நேரம், கட்டம் போன்றவை சரியாக இருக்கிறதா என்பதையும் பார்ப்பார்கள். உண்மையில் சனி திசை, ஏழரை சனி, லக்னங்கள் போன்றவை எந்த அளவிற்கு ஒரு மனிதனின் வாழ்நாளில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன? தீங்கு வராமல் முன்னெச்சரிக்கையாக இருக்க என்ன செய்வது? போன்றவை குறித்து விளக்குகிறார் ஆன்மிக ஜோதிடர் டாக்டர் சிவஸ்ரீ மணிகண்ட சிவம்.

ஒருவருடைய ஆயுளை ஜாதகத்தை வைத்து முன்கூட்டியே கணிக்க முடியுமா?

100% கணிக்கமுடியும். ஆனால் அதை கணிக்கவேண்டுமென்றால் குடும்பத்தினரின் ஜாதகத்தையும் பார்க்கவேண்டும். ஒரு மனிதனுடைய ஜாதகத்தில் யாரால் மரணம் சம்பவிக்கும் என்றும் இருக்கும். ஒரு வீட்டிலுள்ள மகனுக்கு சனி திசையில் கேது புத்தி வருமென்றால் அவருடைய தாய் அல்லது பிறருக்கு மாரக ஸ்தானம் அதாவது மரணம் ஏற்பட வாய்ப்புண்டு. அதுவே குரு திசையில் கேது புத்தி நடந்தால் பயப்படத் தேவையில்லை. ஆனால் சனி திசை, சனி புத்தி, மாரக ஸ்தானத்தை ஏற்படுத்தும். ஒருவருடைய மரண தேதி குடும்பத்திலிருக்கும் இன்னொருவரிடம் போய் நிற்கும். ஆத்ம ஞானம் உள்ளவர்களால் மட்டுமே மரண தேதியை கணிக்கமுடியும். ஆனால் இன்று அனைவருமே லௌகிக வாழ்க்கைக்குள் இருப்பதால் அதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு. இன்று ஒருவரால் 3 மணிநேரம் பேசாமல் இருக்கவேண்டும், 10 நாட்கள் சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்றால் அது முடிவதில்லை. அதனால் சாமானியர்களால் கணிக்கமுடியாது. ஒருவருக்கு கணவனோ, மனைவியோ, மகளோ அல்லது மகனோ யார் வேண்டுமானாலும் சத்துருவாக இருக்கலாம். எனவேதான் அனைவரின் ஜாதகத்தையும் பார்ப்பது அவசியம்.

உதாரணத்திற்கு, மகாபாரதத்தில் கர்ணனின் மரணம் நடக்கும். அப்போது கிருஷ்ண பகவான் இறங்கி வருவார். அவரிடம், ‘நான் கர்ணனை கொன்றுவிட்டேனே’ என அர்ஜுனன் புலம்புவார். அதற்கு கிருஷ்ணன், ‘நான் கொன்றேன் என்று சொல்கிறாயே, அவனை 6 பேர் கொன்றிருக்கிறார்கள். நீ செத்த பாம்பைத்தான் அடித்திருக்கிறாய். எப்போது இந்திரன் கவச குண்டலத்தை வாங்கினானோ அன்றே அவன் முதல்முறை செத்துவிட்டான். சக்கிலியன் தேரை ஒரு இடத்தில் நிறுத்துவான், ஒரு பிராமணன் சாபம் கொடுப்பான். அது அனைத்திற்கும் மேலாக அர்ஜுனன்மீது அம்பு படாமல் இருக்க நான் தேரை அழுத்திவிட்டேன். அப்போதுதான் அம்பு கர்ணன்மீது பாய்ந்தது. இப்படி 6 பேர் கர்ணனின் மரணத்திற்கு காரணமாக இருக்கின்றனர்’ என்று விளக்கமளிக்கிறார். இப்படி ஒருவருடைய மரணம் நேரடியாக நடக்காது.


ஒரு செயலை செய்யும்முன் ராகுகாலம், எமகண்டம் உள்ளிட்டவற்றை பார்ப்பது அவசியம் என கூறுகிறது ஜோதிட சாஸ்திரம்

அதேபோல, ஒருவருக்கு 70 வயதில் மரணம் சம்பவிக்கும் என்று ஜாதகத்தில் இருந்தாலும் அவரால் 72 வயதைக்கூட தாண்ட முடியும். உதாரணத்திற்கு, மார்க்கண்டேயருக்கு 16 வயதில் மரணம் சம்பவிக்க வேண்டுமென்பது ஜோதிட விதி. ஆனால் மார்க்கண்டேயர் சிவனை கட்டிப்பிடித்துக்கொள்கிறார். அதனால் சிரஞ்சீவி என்ற பட்டம் வாங்குகிறார். இன்றும் அவர் பேசப்படுகிறார். இப்படி மரணத்தை ஒருவரால் வெல்லவும் முடியும். 16 வயதில் கண்டம் இருக்கிறது என்றாலும் அதை தாண்டி 70 வயது வரை வாழமுடியும். அதேபோல், 70 வயதுவரை ஆயுள் இருக்கிறது என்று கணிக்கப்பட்ட நபர் 30 வயதில் சாகவும் வாய்ப்புண்டு.

எமகண்டம், மரண யோகம் என்பதையெல்லாம் எப்படி புரிந்துகொள்வது?

ஒரு புத்தகத்தை எடுத்தால் அதில் பொருளடக்கம் என்று இருக்கும். அதை ஏன் வைத்திருக்கிறார்கள்? புத்தகத்தை ஒவ்வொரு பக்கமாக திருப்பி பார்ப்பதற்கு பதிலாக பொருளடக்கத்தில் பார்த்து தேவையான பக்கத்தை எடுத்துவிடலாம். அதேபோல் ஒரு நாளை எடுத்துக்கொண்டால் அதில் கெட்ட நேரம் எது? நல்ல நேரம் எது? என்பதை எல்லாராலும் அனுபவித்து பார்க்கமுடியாது. அதை அனுபவித்தவர்கள் எது நல்ல நேரம்? எது கெட்ட நேரம்? என வகுத்து கொடுத்திருக்கிறார்கள். ஒருநாளில் சித்த யோகம், அமிர்த யோகம், மரண யோகம் என்று கூறுகிறார்கள். அந்த நட்சத்திரம் எத்தனை மணிநேரம் இருக்கிறது என்று பார்க்கவேண்டும். அதில் நல்ல நிழல் இருந்தால் சித்த யோகம், கூடுதல் நிழல் இருந்தால் அமிர்த யோகம், அதற்கு நிழலே இல்லையென்றால் மரண யோகம். பலமில்லாத நட்சத்திரத்தைக் கொண்டது மரண யோகம். பலமுடன் இருக்கக்கூடியது சித்த யோகம். கூடுதல் பலமிருந்தால் அமிர்த யோகம். காலண்டரில் பார்க்கும்போது மரண யோகம் என்று போட்டிருந்தால் என்ன திதி என்பதை பார்த்துவிட்டு, அடுத்த மரண யோகத்தை தேடிப் பார்த்தால் இதேபோல இருக்கும். அதாவது அவை பலம் பொருந்திய நாட்கள் இல்லை என்பதை புரிந்துகொண்டு நல்ல காரியங்களை செய்யாமல் இருப்பது நல்லது. குறிப்பிட்ட நட்சத்திரத்துக்கு மரண யோகம் இருந்தால் அந்த நட்சத்திரக்காரர்கள் வெளியூர்களுக்கு செல்வது போன்ற செயல்களை தவிர்ப்பது நல்லது.


செவ்வாய் பகவான் - செவ்வாய் புத்தியில் துணிச்சல் அதிகமாகி கடனில் சிக்கும் நிலை ஏற்படும்

சனியை எப்படி வேறுபடுத்தி பார்ப்பது? ஒருவருடைய ஆயுட்காலத்தில் சனிதிசை எத்தனை நாட்கள் இருக்கும்?

சனி என்பவர் நல்ல கிரகம். நம்மை பாதுகாக்கக்கூடியவர். சனியை சரியாக கணக்கிட்டால் இதயநோய்கள் வராமல் தடுக்கமுடியும், சட்டம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலிருந்து விலகமுடியும். ஏழரை சனி என்பது வேறு; சனி திசை என்பது வேறு. ஒரு ராசிநாதனை ஏழரை ஆண்டுகள் சனிபகவான் பிடிப்பது ஏழரை சனி. முதலில் பாத சனி. இரண்டரை ஆண்டுகளில் இது முடியும்போது மத்தியில் இருக்கும் சனி வருவார். அடுத்து முதல் சனி வருவார். இந்த சனி ஆண்டுகளில், யாராக இருந்தாலும் நல்ல நிலைமைக்கு வருவார்கள். இப்போது மீனம், கும்பம் மற்றும் மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி நடந்துகொண்டிருக்கிறது. இவர்கள் இப்போது நிலம் வாங்கலாம், சமுதாயத்தில் பெரிய ஆளாக வரமுடியும், அங்கீகாரம் பெறமுடியும். அதற்கு அவர்களுடைய ராசிக்கட்டத்தில் சனி சாதகமாக இருந்தாலே போதும். அப்படி சாதகமாக்க சட்டத்துக்கு உட்பட்டு, அனைவரையும் மதித்து நடக்கவேண்டும், யாரையும் அவமானப்படுத்தவோ, கேவலப்படுத்தவோ, கேளிக்கையாக பேசவோ கூடாது. குறிப்பாக, மாற்றுத்திறனாளிகளையோ, திருநங்கைகளையோ சிரமப்படுத்தக்கூடாது. கேலி என்ற வார்த்தையே வாழ்க்கையில் இருக்கக்கூடாது.

சுக்ர திசை 20 வருடங்கள் கொண்ட நீண்ட திசை. வெறும் 6 வருடங்கள் கொண்ட குறுகிய திசை சூரிய திசை. சனி திசை என்பது 19 வருடங்கள் இருக்கும். அதில் சனி புத்தி, கேது புத்தி, செவ்வாய் புத்தி மற்றும் ராகு புத்தி ஆகிய நான்கை கையாள்வது கடினம். சனி திசை, சனி புத்தி சிலருக்கு வெளிநாட்டு பயணத்தை ஏற்படுத்தும். அதாவது இடமாற்றத்தை கட்டாயமாக்கும் அல்லது குடும்பத்தில் யாரையாவது இழக்க நேரிடும். செவ்வாய் புத்தியில் துணிச்சல் அதிகமாகி கடனில் சிக்கிவிடுவார்கள். கேது புத்தியில் இருக்கும் உறவுகளை இழக்கவேண்டிய நிலை ஏற்படும். புரிதல் ஏற்படாது. ஆனால் கேது புத்தியில் கிடைக்கும் தகவலானது நல்ல மாற்றம், உயர்வை கொடுக்கும். அதேபோல் ராகு புத்தியில் சட்டத்தை சந்தித்தே ஆகவேண்டிய கட்டாயம் ஏற்படும். எனவே அமைதியாக இருப்பது நல்லது. சனி திசை நடக்கும்போது தினமும் விநாயகருக்கு தீபம் ஏற்றி பரிகாரம் செய்யவேண்டும். சனி திசை நடக்கும் 19 வருடங்களும் சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயரை வழிபடவேண்டும். இதனால் மன தைரியமும், நல்ல ஞானமும் கிடைக்கும்.


ஒரு மனிதனுக்கு விதி மற்றும் மதியை தீர்மானிக்கும் லக்னங்கள்

லக்னங்கள் என்றால் என்ன? ராசிக்கும் லக்னத்துக்குமான வித்தியாசம் என்ன?

இதை எளிமையாக சொல்லவேண்டுமென்றால் லக்னம் என்பது அப்பா, ராசி என்பது அம்மா. விதி என்பது லக்னம், மதி என்பது ராசி (சந்திரன்). ஒரு மனிதன் எந்த லக்னத்தில் பிறந்தான் என்பதை வைத்துதான் அவனுடைய விதி சரியாக எழுதப்படும். பொதுவாக மிதுனம், மீனம், கன்னி, தனுசு ஆகிய லக்னங்களில் பிறந்தவர்களுக்கு வாக்கு ஸ்தானம் நன்கு இருக்கும். பேசியே பிழைத்துக்கொள்வார்கள். அவர்களிடம் தனித்திறமை இருக்கும். அதேபோல் வாழ்க்கையில் சாதிக்க சுலபமாக காய்களை நகர்த்த முடியும். 30 வயதிற்கு பிறகு பொறுப்புள்ள நபராக உருவாவார்கள். லக்னம் எப்போதும் தனித்து இருக்கவேண்டும். லக்னத்தோடு கிரகங்கள் கூட்டு சேரக்கூடாது. குறிப்பாக, சனி, ராகு, செவ்வாய், கேது போன்ற பாதகமான கிரகங்கள் லக்னத்தில் அமரக்கூடாது. அதேபோல், ராசி என்பது மதிநுட்பம். நம்முடைய பலத்தை நிரூபிக்க மதி கண்டிப்பாக தேவைப்படும். உதாரணத்திற்கு, மதி இல்லாவிட்டால் ஒன்றரை லட்சம் செலவழித்து செல்போன் வாங்கிவிட்டு, அதில் எல்லாரையும் போல வாட்ஸப், ஃபேஸ்புக், போன் கால் மட்டும் பேசிக்கொண்டிருப்பார்கள். ஒருவருக்கு மதி இருக்குமேயானால் அடுத்தடுத்த நாளுக்கான திட்டங்களை வகுத்து அதன்படி செயல்பட வேண்டும். எனவே ஒருவருடைய ராசிக்கு எந்த கிரகம் அதிபதியோ அவரை வணங்கிவிட்டு வெளியே புறப்பட்டால் வெற்றி நிச்சயம். விதியையும், மதியையும் சரியாக கையாண்டால் வெற்றிகரமான ஆளாக உருவாகமுடியும்.

Updated On 17 Jun 2024 11:42 PM IST
ராணி

ராணி

Next Story