இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

புத்தாண்டு என்றாலே சிறப்பு தான். அந்த வகையில் 2025-ம் ஆண்டு இனிதே தொடங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புவது வழக்கம்தான். ஆனால், கிரகங்களின் இருப்பிடம் மற்றும் மாற்றங்களை கணக்கில்கொண்டு 12 ராசிகளுக்கும் இந்த வருடம் எப்படி இருக்கும் என ஜோதிடர்கள் கணிக்கின்றனர். இந்த நிலையில், இந்த ஆண்டில் மிக முக்கிய கிரக பெயர்ச்சிகள் எனக் கூறப்படும் சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு - கேது பெயர்ச்சிகள் அடுத்தடுத்து நடக்க உள்ளன. இதன் காரணமாக மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளுக்கும் கிடைக்கும் நன்மை, தீமை, பண வரவு, வேலை உள்ளிட்டவை எப்படி இருக்கும் என நமக்காக சுருக்கமாக வழங்குகிறார் நல்ல நரேம் நாகராஜன்.


மேஷம் - தியான பயிற்சி அவசியம்; ரிஷபம் - மகிழ்ச்சிகரமான தருணங்கள்

மேஷம்

2025-ல் உள்ள எண்களை கூட்டினால் 9 வரும். 9 என்பது செவ்வாயின் எண். எனவே 9-ம் இடத்துக்கு சொல்லப்படுகிற நேர்மையான, தர்மமான, நியாயமான முறையில் வாழக்கூடிய மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பான நல்ல பலன்கள் காத்துக்கிடக்கின்றன. திருமண தடை, படிப்பு தடை உள்ளிட்ட அனைத்து தடைகளும் விலகிவிடும். நீங்கள் செய்ய வேண்டிய ஒரே ஒரு பரிகாரம் தியான பயிற்சி. நீங்கள் நினைப்பதை சாதிக்க தியான பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ரிஷபம்

கலைத்துறையை சார்ந்த பலர் ரிஷப ராசியினராக இருப்பார்கள். ஆடல், பாடல், ஜோதிடம் என கலைகளில் சிறந்து விளங்குவார்கள். அப்படிப்பட்ட ரிஷப ராசியினருக்கு இந்த ஆண்டு பொன்னான காலம். ஏதாவது ஒரு வகையில் விருதுகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. நல்ல மரியாதையான இடத்தில் உங்களுக்கு ஒரு இடம் கிடைக்கும். குறிப்பாக மக்கள் ஆதரவு கிடைக்கும் ஆண்டாக இது உள்ளது. மொத்தத்தில் ரிஷப ராசியினருக்கு மகிழ்ச்சிகரமான தருணங்கள் நிறைந்த ஆண்டாக 2025 இருக்கும்.


மிதுனம் - வெற்றி பயணம்; கடகம் - உன்னதமான ஆண்டு

மிதுனம்

மிதுன ராசியினருக்கு இந்த ஆண்டு இரட்டை சக்தியாக இருக்கும். நல்ல கூட்டாளிகள் அமைவார்கள். எல்லா காரியங்களிலும் இந்த ஆண்டு அற்புதமான நல்ல பலன்கள் கிடைக்கும். உங்களுடைய மகிழ்ச்சியின் எல்லையை நீங்களே அளந்து பார்ப்பீர்கள். நமக்கு கடவுள் நல்லதுதான் செய்கிறார் என்ற விதத்தில் திருப்தி ஏற்படும். 2025-ம் ஆண்டு மிதுன ராசியினருக்கு வெற்றி பயணமாக அமையும்.

கடகம்

கடக ராசியில் பிறந்த எல்லோருக்கும் நிச்சயம் இந்த ஆசை இருக்கும். நம்முடைய பேரை சொல்வதுபோல் எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அழுத்தமாக இருக்கும். பொதுவாக முதல் சம்பளம் வாங்கும் கடக ராசியினர், அதனை பெரும்பாலும் தனது தாயிடம் கொடுத்து ஆசி பெற்று விடுவார்கள். அப்படிப்பட்ட அன்னையின் ஆசிர்வாதம் அவர்களை எப்போதும் கைவிடாது. குறிப்பாக இந்த ஆண்டு, ராசிக்கு சந்திரன் நல்ல ஸ்தானத்தில் அமருகிறார். மேலும் ராசியில் உச்சமாகும் கிரகம் மிகச்சிறப்பான இடத்தில் அமருகிறார். எனவே கடக ராசியினருக்கு இந்த ஆண்டு உன்னதமான ஆண்டாக விளங்கும்.


சிம்மம் - புதிய வாய்ப்புகள் கிடைக்கும்; கன்னி - வெற்றிகிடைக்கும் ஆண்டு

சிம்மம்

வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்ற நோக்கில் கடினமாக உழைக்கும் சிம்ம ராசிக்காரர்கள், கால புருஷனின் 5-வது ராசியினர். உழைப்போடு அதிர்ஷ்டமும் கை கொடுக்கக்கூடிய ஆண்டாக இந்த 2025 அமையும். பொதுவாக சிம்ம ராசியினருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதுதான் குறை. ஆனால் இந்த வருடம் புதிய புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அந்த வாய்ப்புகள் கிடைத்தாலே நீங்கள் ஜெயித்துவிடுவீர்கள். திருமண தடைகள் நீங்கும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு கண்டிப்பாக திருமண வாழ்க்கை அமையும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு அருமையான காலம். சனி பெயர்ச்சி மற்றும் குரு பெயர்ச்சி சாதகமாக உள்ளது. வருடத்தின் ஆரம்பம் எப்படி இருந்தாலும், போகபோக மிகச்சிறப்பாக இருக்கும். 6-ம் இடத்தில் ஒரு கிரகம் வலுவாக நின்றுவிட்டாலோ அல்லது உங்கள் ஜாதகத்தில் 6-ம் இடத்திற்கு அதிபதி வலுவாகிவிட்டாலோ, எப்போதும் பிரச்சினை வரும். எனவே 6-ம் அதிபதி கெட வேண்டும் என்று சொல்வார்கள். அதற்கு பெயர் விபரீத ராஜயோகம். அந்த விபரீத ராஜயோகத்திற்கு காரணகர்த்தாவாகிய புதன், உங்களுக்கு வருடம் முழுவதும் சாதமாக உள்ளது. எனவே கன்னி ராசியினருக்கு 2025, போட்டிகளில் வெற்றிகிடைக்கும் ஆண்டாக திகழ்கிறது.


துலாம் - நினைத்தது நடக்கும்; விருச்சிகம் - கடன் தீரும்

துலாம்

துலாம் ராசியினர் இதுவரை திட்டமிட்டு சேமித்துவைத்த பணம் அனைத்தும், இந்த ஆண்டு சரியான விதத்தில் பயன்படும். 8-ம் இடத்தில் தற்போதுள்ள குரு, மே மாதம் 9-ம் இடத்திற்கு சென்றுவிடுவார். ராகு, கேது பெயர்ச்சியும் சாதகமாக உள்ளது. எனவே பொருளாதாரம் சார்ந்த நடவடிக்கைகளையும், மகிழ்ச்சியான சம்பவங்களையும் திட்டமிட்டு செய்வீர்கள். நினைத்ததை அப்படியே செய்து முடிக்கும் ஆண்டாக, துலாம் ராசியினருக்கு இந்த 2025 உள்ளது.

விருச்சிகம்

கால புருஷனின் 8-வது ராசியான விருச்சிக ராசியில் பிறந்த ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் உள்ளிட்டோர் இந்த ஆண்டு நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள். புதிய கண்டுபிடிப்புகளை உலகுக்கு அறிமுகப்படுத்துவார்கள். உங்களுக்கு இயற்கை தனது முழு ஆதரவையும் அளிக்கிறது. தெய்வீக சூழல் ஏற்படும். திருக்கோயில்களுக்கு சென்றுவரும் பாக்கியம் கிட்டும். எல்லா வகையிலும் பார்க்கையில் கடன் தீரும் பொற்காலமாக உள்ளது. அடுத்தடுத்த வளர்ச்சிக்கு செல்லக்கூடிய அற்புதமான காலகட்டம்.


தனுசு - அற்புதமான காலகட்டம்; மகரம் - பொற்காலம்

தனுசு

தனுசு ராசியில் பிறந்த ஆண், பெண் என இருபாலரும் தைரியமானவர்கள். யாருக்குதான் வாழ்க்கையில் கவலைகள் இருக்காது. ஆனால் இந்த 2025-ம் ஆண்டு தனுசு ராசியினருக்கு கவலைகள் தீரும். புதிய ஆபரணங்கள் சேரும். புதிய வண்டி வாகனங்கள் சேரும். கலைத்துறையினருக்கு மிக அற்புதமான காலகட்டம். அவர்களின் எழுத்து, இலக்கியம் உள்ளிட்டவை பெரும் கவனம் பெரும். தனசு ராசியினருக்கு இந்த 2025, பிரபலத்தை தரக்கூடிய அருமையான வருடம்.

மகரம்

மகர ராசியனருக்கு ராசிநாதன் சனி பகவான் அருமையான இடத்தில் அமரப்போகிறார். மார்ச் மாதத்திலிருந்து முயற்சி ஸ்தானத்திற்கு செல்கிறார். எனவே ஆண்டு முழுவதும் நல்ல விஷயங்கள் நடக்கும். வாழ்க்கையில் நாம் எட்ட வேண்டிய உயரத்தை நோக்கிய முக்கிய பயணத்தை தீர்மானிக்கும் ஆண்டாக இருக்கும். பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்திலும் பொற்காலமாக 2025-ம் ஆண்டு அமையும். 10 ஆண்டுகள் கழித்துக்கூட பெயர் சொல்லும் ஆண்டாக இந்த 2025 நிச்சயம் இருக்கும்.


கும்பம் - வெற்றிகள் குவியும்; மீனம் - ஆரோக்கியத்தில் கவனம் தேவை

கும்பம்

கும்ப ராசியினருக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நம்பிக்கைக்குரியவர்கள் உங்களோடு நம்பிக்கையுடன் பயணம் செய்வார்கள். வாழ்க்கைக்கு தேவையான நல்ல நட்பு அமையும். உங்களுக்காக எதையும் இழக்கக்கூடியவராகவும், எதற்காகவும் உங்களை இழக்காதவராகவும் அந்த தோழமை இருக்கும். வீடு வாங்கும் யோகம், கிரகபிரவேச யோகம், புதிய வீட்டிற்கு குடிபோகும் யோகம் உள்ளிட்டவை உண்டு. மேலும் தாயின் அருளால் நல்லவிதமான வெற்றிகளை குவிக்கக்கூடிய ஆண்டாக 2025 இருக்கும்.

மீனம்

மீன ராசி அன்பர்கள் அனைவரும் கண்ணும் கருத்துமாக இருக்கக்கூடியவர்கள். ஏழரை சனியின் அச்சத்தில் இருக்கும் நீங்கள், ஒன்றை மிகத் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். செல்வத்தை இழந்தால் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆரோக்கியத்தை இழந்துவிட்டால் கண்டிப்பாக ஏதோ ஒன்றை இழந்துவிட்டோம் என்று அர்த்தம். அதுவே கேரக்டரை இழந்துவிட்டால் அனைத்தையும் இழந்துவிட்டோம் என்று அர்த்தம். அந்தவகையில் உடல் ஆரோக்கியம் முக்கியம். மூன்றாம் இடத்தில் ராசிநாதன் இருந்த காலகட்டத்தில் உடல் பருமன் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கும். இந்நிலையில் இந்த 2025-ம் ஆண்டு, இழந்த ஆரோக்கியத்தையும், அழகையும் மீட்டெடுக்கும் ஆண்டாகவும், பராமரிக்கும் ஆண்டாகவும் இருக்கப்போகிறது. சனி பகவான் ஜென்மத்தில் வரவுள்ளதால், உணவில் கவனம் செலுத்துவதும், ஒழுக்கமானவர்களுடன் பழகுவதும் அவசியம். விடாமுயற்சியும், முறையான பயிற்சியும் உங்களை நல்ல இடத்திற்கு கொண்டுபோய் சேர்க்கும்.

Updated On 7 Jan 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story