நவராத்திரி நாள் 7 - மாதா காலராத்திரி வழிபாடு

ஒரு தாயாக தன் குழந்தையாகிய நம் மீது உள்ள மிகுந்த அன்பின் காரணத்தால் நம்மை காப்பாற்றும் பொருட்டு உக்கிரமான வடிவம் எடுத்து அருளுகிறாள் மாதா காலராத்திரி.

Update:2024-10-09 15:14 IST

நவராத்திரியின் ஏழாம் நாள் அம்மா காலராத்திரி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. துர்க்கையின் உக்கிரமான வடிவங்களில் ஒன்றாக அறியப்படும் மாதா காலராத்திரி தனது இருப்பைக் கொண்டு அனைத்து வகையான எதிர்மறை ஆற்றலையும் விரட்டக் கூடியவள். அந்தவகையில் நவராத்திரியின் ஏழாவது நாளில் வழிபட வேண்டிய காலராத்திரி அன்னை குறித்து இன்று காண்போம். 

அம்மா காலராத்திரிக்கு உரிய பாடல்

அபிராமி அந்தாதி (பாடல் 43)

பரிபுரச் சீறடிப் பாசாங்குசை பஞ்சபாணி இன்சொல்

திரிபுரசுந்தரி சிந்துர மேனியள் தீமை நெஞ்சில்

புரிபுர வஞ்சரை அஞ்சக் குனி பொருப்புச் சிலைக்கை

எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே

யார் இந்த காலராத்திரி?

தாய் தேவியின் இந்த அவதாரம் அமைதியையும் தர்மத்தையும் மீட்டெடுக்க தீமையை அழிக்கிறது. சஹஸ்ராரம் எனும் சக்கரம் முக்தி நிலைக்கானது. முக்தி மோட்சம் என்பதெல்லாம் புரிதல் எனும் நிலையை கடந்து அம்மா நாராயணியிடம் சரணடைதல் எனும் நிலையில்தான் கிட்டும்.

சண்டா (அதிக கோபம்) மற்றும் முண்டா (மன சோர்வு) என்ற பேய்களை அழிக்க உருவானவளே அம்மா காலராத்திரி. ஒரு நோய் கிருமி அண்டாமல் இருக்க, நமக்கு எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்த, அதேபோல் தோற்றம் தரும் வேறொன்றை விஞ்ஞானிகள் தடுப்பூசி மருந்தாக உருவாக்குவார்கள். அப்படித்தான் அன்னையின் சில அருள் வடிவங்கள். பேய்களை அழிக்க அவதாரம் எடுத்தவளே இந்த காலராத்திரி தேவி.

நாம் ஆன்மீக நிலையில் விழிப்புணர்வு அடைந்து சஹஸ்ராரம் சக்கரம் பெற்று முக்தி நிலையை அடைய, அனைத்து தடைகளையும் அகற்றுகிறாள்  அன்னை. நம்மை பாதுகாப்பாக வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்கிறாள்.

காலராத்திரி அன்னைக்கு மூன்று கண்கள் உள்ளன. நீண்ட கூந்தல் உள்ளது. அவள் மூச்சு விடும்போது தனது மூக்கு வழியாக தீப்பிழம்புகளை வெளியே விடுகிறாள். மேலும் நான்கு கைகள் அவளுடைய ஆற்றல்களை உணர்த்துகின்றன. அவற்றில் இரண்டு கைகளில் ஒன்றில் கதையும் மற்றொன்றில் வாளும் உள்ளன.

சனி தோஷத்திலிருந்து விடுபட காலராத்திரியை வழிபடலாம்!

நவதுர்க்கையின் மிகவும் உக்கிரமான அவதாரமாகக் கருதப்படும் மா காலராத்திரி, சுபங்கரி (நன்மை செய்பவள்) என்றும் போற்றப்படுகிறாள். காலராத்திரி தேவி சனியை ஆளுகிறாள். எனவே சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அதன் பாதகமான விளைவுகளில் இருந்து விடுபட இந்த அன்னையை வணங்குகின்றனர். மேலும் இந்த நாளில் நவகிரக பூஜை செய்து வழிபடுவது மங்களகரமானதாக கருதப்படுகிறது.

காலராத்திரி வழிபாட்டு முறை :

அபய வரத முத்திரையில் ஆசி வழங்குகிறாள் காலராத்திரி தேவி. மா காலராத்திரி தெய்வீக பிரகாசமாகவும், அறிவின் முடிவில்லாத ஊற்றாகவும் கருதப்படுகிறாள். இந்த நாளில் மா காலராத்திரியை வழிபடுபவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் மற்றும் ஞானம் கிடைப்பதாக நம்பப்படுகிறது. அன்னைக்கு, வெல்லம் மற்றும் வெல்லத்தால் செய்த இனிப்புக்களை வைத்து வழிபட்டால் மிக சிக்கலான பிரச்சினைகள்கூட சுலபமாக தீரும் என்பது பலரின் அனுபவம்.

- பவானி ஆனந்த், ஆன்மிக ஜோதிடர்

Tags:    

மேலும் செய்திகள்