நீதியை நிலைநாட்டும் "தும்பூர் தாங்கல் நாகாத்தம்மன்" ஆலயம்!

பெரும் துயரில் இருப்பவர்கள் இத்தலத்திற்கு வந்து நாகாத்தம்மனை வழிபட்டால், துன்பங்கள் நீங்கி நிம்மதி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Update:2024-08-09 16:56 IST

உடன் பிறந்த சகோதரனை ஏமாற்றியவனுக்கு கடுமையான தண்டனை வழங்கி நீதியை நிலைநாட்டிய தும்பூர் தாங்கல் நாகாத்தம்மன் ஆலயம், தொன்மையும், வரலாற்று சிறப்பும் கொண்டதாக திகழ்கிறது.பெரும் துயரில் இருப்பவர்கள் இத்தலத்திற்கு வந்து நாகாத்தம்மனை வழிபட்டால், துன்பங்கள் நீங்கி நிம்மதி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த அம்மனை, நாக பஞ்சமியை ஒட்டி மனதார தரிசிப்போம். 

கோயில் அமைவிடம்

தும்பூர் தாங்கல் நாகாத்தம்மன் திருத்தலம், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அமைந்துள்ளது. இங்குள்ள நாகாத்தம்மன், காண்போர் மெய்சிலிர்க்கும் வகையில், அதேநேரம் கருணையுடனும் காட்சி தருகிறாள். நாகாத்தம்மனின் திருவுருவத்தில் தலை பகுதி மட்டும் ஐந்தரை அடி அகலமும், மூன்றரை அடி நீளமும் கொண்டதாக இருக்கிறது. இக்கோயிலில், விநாயகர் சன்னதி, வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகர் சன்னதி மற்றும் நாகர்களின் சன்னதிகளும் உள்ளன. கோயிலின் பின்புறம் நவக்கிரக சன்னதி தனியே அமைந்துள்ளது. விநாயகர் சன்னதியின் எதிரில் அஷ்டலட்சுமி சன்னதியும் அமைந்துள்ளது. 


நாகம்மன் ஆலயத்தின் வெளிப்புற தோற்றம்

தல வரலாறு

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம் திருவாமாத்தூர் பகுதியில் வசித்துவந்த மிகவும் வசதியான குடும்பத்திற்கு, அண்ணன், தம்பி என்று இருவர் மட்டுமே வாரிசாக இருந்தனர். இதில் தம்பி வெளியூருக்கு சென்றிருந்த நேரத்தில், தந்தை இறந்துவிட, மொத்த சொத்தையும் தானே அபகரிக்க முடிவு செய்த அண்ணன், சொத்துக்களை விற்று காசாக்கி, மறைத்து வைத்துவிட்டான். ஊர் திரும்பிய தம்பி, சொத்தில் தனது பங்கை கேட்க, அண்ணனோ முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கிறான். தந்தையின் சொத்து எதுவுமே இல்லை என்று சொல்லிவிடுகிறான். 

அதிர்ச்சி அடைந்த தம்பி, ஊர் பெரியவர்களிடம் முறையிடுகிறான். பெரியவர்கள் எவ்வளவோ சொல்லியும் அண்ணன் கொஞ்சம் கூட மனம் மாறுவதாக இல்லை. வேறு வழி தெரியாத ஊர் பெரியவர்கள், திருவாமாத்தூரில் வட்டப்பாறை இருக்கும் இடத்திற்கு சென்று அதன்மீது கைவைத்து அண்ணனை சத்தியம் செய்ய சொல்கின்றனர். (அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள், மிகவும் சிக்கலான வழக்குகளில் முடிவு காண, திருவாமாத்தூர் வட்டப்பாறையில் சத்தியம் செய்ய வைப்பதை இறுதி துருப்புச்சீட்டாக வைத்துள்ளனர். பொய் சத்தியம் செய்பவர்கள் அங்கேயே இறந்துவிடுவதை, அவர்கள் காலம் காலமாக கண்டு வருகின்றனர்). அண்ணனும் அதற்கு ஒப்புக்கொள்கிறான்.

ஊர் பெரியவர்களுடன், அண்ணனும், தம்பியும் வட்டப்பாறையை அடைந்தவுடன், தன் கையிலிருந்த தடியை, தன் தம்பியின் கையில் கொடுத்துவிட்டு, எங்கள் குடும்ப முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்து எதுவுமே என்னிடம் இல்லை. "இது சத்தியம்”, என்று வட்டப்பாறையில் கை வைத்து அடித்து அண்ணன் சத்தியம் செய்கிறான். ஆனால், அண்ணனுக்கு ஒன்றுமே நடக்கவில்லை. திருவட்டப்பாறையில் நீதி பொய்த்துவிட்டதே என ஊர் மக்கள் வருத்தத்துடன் கலைந்து சென்றனர். அப்போது, தம்பி கையில் தான் கொடுத்த தடியைத் திரும்பப் பெற்றுக்கொண்ட அண்ணன், பயங்கர சந்தோஷத்துடன் தும்பூர் தாங்கல் கிராமத்தை நோக்கி நடந்தான்.


தும்பூர் தாங்கல் ஆலயத்தில் நாகாத்தம்மனின் திருவுருவம்

தன் தந்தையின் சொத்தையெல்லாம் விற்று, அதனை நவரத்தினங்களாகவும், பொற்காசுகளாகவும் மாற்றி அந்த தடியில்தான் மறைத்து வைத்திருந்தான் அண்ணன். சத்தியம் செய்தபோது, அந்த தடியை தம்பியின் கையில் கொடுத்துவிட்டு திருவட்டப்பாறையில் சத்தியம் செய்தான். இதனால் திருவட்டப்பாறையில் பொய் சத்தியம் செய்தபிறகும் உயிர்பிழைத்து சென்ற அவன், தன்னை அதிபுத்திசாலியாக நினைத்துக்கொண்டு, வழியெல்லாம் தனக்குத்தானே கர்வத்துடன் பேசிக்கொண்டே சென்றான். 

தெய்வம் என்னை என்ன செய்துவிடும்? திருவட்டப்பாறை தெய்வம் என்னை சீறி கொத்திவிடுமா? என சொல்லி ஏளனமாக சிரித்தான். அந்த நொடியே, பூமியிலிருந்து பீறிட்டு எழுந்த கருநாகம் அவனைக் கொத்தி கொன்றது. அவன் இறந்து போனான். அவன் கையில் இருந்த தடி உடைந்து, அதிலிருந்த பொற்காசுகளும், நவரத்தினங்களும் அங்கேயே கொட்டி சிதறின. இச்சம்பவம் நடைபெற்ற இடத்தில் சுயம்பு வடிவான நாகாத்தம்மன் கோயில் அமைந்துள்ளது. மேலும் தசையாய் இருந்த நாகம் இன்று கல்லாக மாறியது மட்டுமின்றி, தொடர்ந்து வளர்ந்து கொண்டே வருகிறதாம்.

மிகப்பெரிய பரிகாரத் தலம்!

ராகு கேது தோஷம், திருமண தடை, கால சர்ப்ப தோஷம் உள்ளிட்ட அனைத்து விதமான தோஷங்களுக்கும் கண்கண்ட பரிகாரத் தலமாக தும்பூர் தாங்கல் நாகம்மன் ஆலயம் திகழ்கிறது. கோயிலின் வடமேற்கே அமைந்துள்ள புற்றில் தோஷங்களுக்கான பரிகார பூஜைகள் செய்யப்படுகின்றன.

வேண்டுதல்களை நிறைவேற்றும் நாகம்மன்

உறவினர்களால் வஞ்சிக்கப்படுவோர் இங்குவந்து நாகாத்தம்மனை மனமுருக வேண்டிக்கொண்டால் நிச்சயம் நியாயமானத் தீர்ப்பு கிடைக்கும் என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. மேலும் தொடர்ந்து துன்பத்தில் உழன்றுகொண்டு, விரக்தி நிலையில் இருக்கும் எவரும் நம்பிக்கையோடு இங்குவந்து வழிபட்டால், அந்த துயரங்களை எல்லாம் போக்கி இன்பத்தை அளிப்பாள் நாகாத்தம்மன் என்பதை பல்வேறு பக்தர்களும் அனுபவப்பூர்வமாக கண்டுவருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்