ஆடி 3வது வெள்ளிக்கிழமை - மிக மிக சக்திவாய்ந்த நாள்!

ஆடி 3வது வெள்ளிக்கிழமை தினத்தில், வீட்டில் ஒரு விளக்கை ஏற்றி வழிபட்டாலும், குடும்பத்தில் சுபிட்சம் பெருகுமாம்.

Update:2024-08-01 17:17 IST

ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகள் மிகவும் விசேஷமானவை என்றாலும், ஆடி 3வது வெள்ளிக்கிழமை அதீத சக்திவாய்ந்த நாளாக கருதப்படுகிறது. இயந்திரகதி ஆகிப்போன வாழ்க்கையில், எவ்வளவு பிஸியாக இருந்தாலும், ஆடி மூன்றாம் வெள்ளிக்கிழமை நாளில் சிறிது நேரம் ஒதுக்கி அம்பிகையையும், சிவனையும் வழிபடுவது உத்தமம் ஆகும். அன்றைய தினம் வீட்டில் ஒரே ஒரு விளக்கை ஏற்றி வழிபட்டாலும் சுபிட்சம் பெருகி வாழ்க்கை சிறக்குமாம். 

ஆடி 3-ம் வெள்ளி ஏன் சிறப்பு?

ஆடி மாதம் தேவர்களின் பிரதோஷ காலம் என்று சாஸ்திரம் கூறுகிறது. மனிதர்களின் ஒரு வருடம், தேவர்களுக்கு ஒரு நாள். அப்படி பார்த்தோமேயானால் ஆடிமாதம்தான் தேவர்களின் மாலை நேரத்தின் தொடக்கம். அதாவது தினப் பிரதோஷ நேரமான மாலையும் இரவும் சந்திக்கும் நேரம். இதில் உச்சி காலமாகக் கருதப்படும் நேரம்தான் ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை.  


ஆடி 3-ம் வெள்ளியுடன் ஈஸ்வரனுக்கு உரிய திருவாதிரை நட்சத்திரமும் சேர்ந்து வருவது மிகவும் விசேஷம்

இந்த ஆண்டு ஆடி மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமை நாளை (2-8-2024) வருகிறது. இந்த நாள் சிவனுக்கும் உரியதாக அமைந்துள்ளது. மாத சிவராத்திரி நாளுடன், ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமையும் ஒன்று சேர்ந்துள்ளது. மொத்தமுள்ள 27 நட்சத்திரங்களில் ஈஸ்வரனுக்கு உரித்தான திருவாதிரை நட்சத்திரமும் இன்றைய தினத்தில் வருகிறது. எனவே ஆடி 3-ம் வெள்ளி மிக மிக சக்திவாய்ந்த நாள் என்று ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.

அம்பிகை - சிவன் வழிபாடு

வீட்டில் அம்பிகை, சிவன் விக்ரகங்கள் இருந்தால், ஆடி 3வது வெள்ளிக்கிழமை காலை முதல் விரதம் இருந்து மாலையில், விக்ரகங்களுக்கு பால், பன்னீர், சந்தனம் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்யலாம். விரதம் இருக்க முடியாதவர்கள் காலையிலேயே அபிஷேகத்தை செய்யலாம். அப்போது நம் வேண்டுதலை மனதார சொல்லி வழிபடலாம். வீட்டில் அபிஷேகம் செய்ய முடியாதவர்கள், அருகில் உள்ள சிவாலயங்களில் சிவனுக்கும், அம்பிகைக்கும் அபிஷேகம் செய்ய பால், பன்னீர், சந்தனம் போன்ற பொருட்களை வாங்கிக் கொடுத்து, அன்றைய தின அபிஷேகத்தை தரிசனம் செய்யலாம். இதன்மூலம் சிவன் மற்றும் அம்பிகையின் அருளை ஒருசேர பெறலாம். 

கணவரின் ஆயுள் அதிகரிக்கும்

இந்த நாளில் தம்பதி சமேதராக இருக்கும் சிவன், பார்வதியை வழிபட்டால் கணவரின் ஆயுள் பலம் நீடிக்கும். குடும்பத்தில் கணவன்-மனைவிக்குள் பிரச்சினை ஏதேனும் இருந்தால், அவை அனைத்தும் நீங்கி தம்பதியருக்குள் ஒற்றுமை பலப்படும். குடும்பத்தின் வருமானமும் பெருகும். வீட்டில் சுப காரியங்கள் தடையில்லாமல் நடைபெற அம்பிகை அருள் புரிவாள்.


ஆடி 3வது வெள்ளியில் அம்பிகைக்கும், சிவனுக்கும் அபிஷேகம் செய்து வழிபட்டால் தம்பதியர் ஒற்றுமை பலப்படும்

படையலிடும் முறை

ஆடி 3-ம் வெள்ளிக்கிழமை நாளில், வீட்டின் பூஜை அறையில் சாமிக்கு உரிய சிறிய பாத்திரத்தில் மஞ்சள் கலந்த தண்ணீர் வைத்து, அதில் வேப்பிலை மற்றும் பூ இதழ்களை போட்டு அம்பிகையை ஆவாஹனம் செய்து, தலைவாழை இலை போட்டு, இனிப்பு, கலவை சாதங்கள், பழங்கள், துள்ளு மாவு, இளநீர் உள்ளிட்டவற்றை வைத்து வழிபடலாம். முடிந்தால் அம்மன் கோயிலுக்கு அர்ச்சனைக்கு குங்குமம் வாங்கி கொடுக்கலாம்.

கன்னி தெய்வங்கள் வழிபாடு

வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்குரிய தினம் என்பதை போல, ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை திருவாதிரை நட்சத்திரமும் வருவதால், அதற்குரிய ராகு வழிபாடு சிறந்தது. அன்றைய தினம் கிராம காவல் கோயில்களில் உள்ள பெண் தெய்வங்களை வழிபடுவது சிறப்பானதாக கருதப்படுகிறது. மேலும் குடும்பத்தில் சிறு வயதிலேயே காலமான இளம்பெண் குழந்தைகளை நினைத்து கன்னியாப்பெண் கும்பிடுவதும் சிறப்பு. இவ்வாறு பெண் தெய்வங்களை வழிபடுவதால் வீட்டில் இருக்கும் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி பொங்குமாம். 

Tags:    

மேலும் செய்திகள்