இயற்கை எழில் கொஞ்சும்... மனதை மயக்கும் குளு குளு மணாலி! சுற்றி பார்க்க ஏற்ற மாதம் எது?

ஸ்னோமொபைலிங் பாதைகள், பனிச்சறுக்கு சரிவுகள், பாராகிளைடிங் போன்ற சாகச வாய்ப்புகளை வழங்கும் சோலாங் ரோப்வே மற்றும் ஸ்கை சென்டரையும் நீங்கள் பார்வையிட வேண்டும்.

Update:2024-03-26 00:00 IST
Click the Play button to listen to article

மனம் மயக்கும் இயற்கை அழகு, வண்ணமயமான மலர்த்தோட்டங்கள், பனிமூடிய மலைச்சிகரங்கள் மற்றும் ஆப்பிள் தோட்டங்கள் என அழகியலின் பல அம்சங்கள் மூலம் காலங்காலமாக சுற்றுலாப்பயணிகளை வசீகரித்து வருகிறது மணாலி. ஹிமாச்சலில் உள்ள மிகவும் பிரபலமான மலைவாசஸ்தலங்களில் ஒன்றான மணாலி, வருடத்தின் பெரும்பாலான நாட்கள் பனி சூழ்ந்து ரம்மியமாகவே காட்சியளிக்கும். பனியால் மூடப்பட்டிருக்கும் பீர் பஞ்சால் மற்றும் தௌலாதர் மலைத்தொடர்களின் அற்புதமான காட்சி மனதை மயக்கும். பனி மூடிய மலைகளுக்கு நடுவே பசுமைப் போர்த்திய மலைகளையும், தூய்மையான காற்றையும் விரும்புகிறவர்களுக்கு மணாலி சிறந்த தேர்வாக இருக்கும். சோலாங் பள்ளத்தாக்கு, மணாலி பறவைகள் சரணாலயம், பழமையான கோயில்கள் என இங்கு பார்க்க ஏராளமான இடங்கள் உண்டு. மேலும் டிரெக்கிங், கேம்பிங், ஆங்கிலிங், ரிவர் ராப்டிங், ஸ்கீயிங் போன்ற சாகச விளையாட்டுகளையும் மேற்கொள்ளலாம். டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பனி கொஞ்சம் கூடுதலாக இருக்கும். மணாலியில் நீங்கள் பார்க்க வேண்டிய விஷயங்கள் பல இருந்தாலும் அவற்றில் முதன்மையானவற்றை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

சோலாங் பள்ளத்தாக்கு :

பியாஸ் நதிக்கும், சோலாங் கிராமத்திற்கும் இடையில் அமைந்துள்ளது சோலாங் பள்ளத்தாக்கு. சோலாங் நாலா மற்றும் ஸ்னோ பள்ளத்தாக்கு என்றும் இது அழைக்கப்படுகிறது. இயற்கையின் அழகாய் விளங்கும் சோலாங் பள்ளத்தாக்கின் பிரமிக்க வைக்கும் வெண்பனியை கண்டு ரசிப்பதற்கென்றே பலர் ஒவ்வொரு ஆண்டும் இங்கு வருகை தருகின்றனர். சோலாங் பள்ளத்தாக்கின் இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழ்வதோடு, சாகச விளையாட்டுகளையும் ஆடி மகிழ மக்கள் இப்பகுதிக்கு வருகின்றனர். சுற்றுலா பயணிகள் இங்கு குவாட் பைக்கிங், சோர்பிங், பனிச்சறுக்கு, பாராகிளைடிங், மலையேற்றம், பாராசூட்டிங் போன்ற செயல்களில் ஈடுபடலாம். ஸ்னோமொபைலிங் பாதைகள், பனிச்சறுக்கு சரிவுகள், பாராகிளைடிங் போன்ற சாகசங்களை வழங்கும் சோலாங் ரோப்வே மற்றும் ஸ்கை சென்டரையும் பார்வையிடலாம். சோலாங் பள்ளத்தாக்கை பார்வையிட, ஏப்ரல் முதல் டிசம்பர் வரை சிறந்த காலமாக உள்ளது.


 ஸ்னோ பள்ளத்தாக்கு என அழைக்கப்படும் சோலாங் பள்ளத்தாக்கு மற்றும் அமைதியான நகரம் என பெயர்பெற்ற பழைய மணாலி

பழைய மணாலி :

பழைய மணாலி மற்றும் புதிய மணாலி, மணல்சு நதியால் பிரிக்கப்படுகின்றன. ஒரு ஆற்றுப் பாலம் பழைய மணாலியை நகரத்தின் மற்ற பகுதிகளுடன் இணைக்கிறது. பழைய மணாலி ஒரு அமைதியான நகரமாகும், இது ஒரு பள்ளத்தாக்கின் கீழ் ஆப்பிள் பழத்தோட்டங்களின் அடர்ந்த காடுகளில் அமைந்துள்ளது. மரத்தால் ஆன பல அழகான வீடுகள் இங்கு நம்மை ரசிக்க வைக்கின்றன. நினைவுப் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்களுக்காக அருகிலுள்ள சந்தைகளில் ஷாப்பிங் செய்யும்போது சில ருசியான உணவுகளை சாப்பிடுவதற்கு பழைய மணாலி சிறந்த இடம். வசீகரிக்கும் சூரிய உதயங்கள் மற்றும் சூரிய அஸ்தமனங்கள் காரணமாக இந்த இடத்தை நீங்கள் கண்டிப்பாக காதலிப்பீர்கள். பழைய மணாலியில் உள்ள மிகவும் பிரபலமான மற்றும் அழகிய தளங்களில் ஒன்று ஹடிம்பா கோயில். கஃபே 1947, டிரிஃப்டர்ஸ் கஃபே, டிலான்ஸ் டோஸ்டெட் & ரோஸ்டட் காபி ஹவுஸ் உள்ளிட்ட பல பிரபலமான கஃபேக்களில் இங்கு உண்டு மகிழலாம்.

ஹடிம்பா கோயில் :

உள்ளூரில் தூங்காரி கோயில் என்று அழைக்கப்படும் ஹடிம்பா கோயில், கடோத்கஜனின் தாயும் பீமனின் மனைவியுமான ஹடிம்பா தேவியை கௌரவிக்கின்றது. புராணக் கதைகளை விரும்புவோர், கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய இடம் ஹடிம்பா கோயில். பனி மூடிய மலையில் ஒரு பாறையின் மீது அமைந்துள்ள இக்கோயில், ஹடிம்பா தேவியின் சாயலைக் குறிக்கிறது. அதன் தனித்துவமான அமைப்பு, மரச் சுவர்கள், நுழைவாயில்கள் மற்றும் கூம்பு வடிவ கூரை நம்மை வியக்க வைக்கின்றன.


தூங்காரி கோயில் என்று அழைக்கப்படும் ஹடிம்பா கோயில் மற்றும் பிரமிக்க வைக்கும் மனு கோயில்

மனு கோயில் :

மனு முனிவரைக் கௌரவிப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த பிரமிக்க வைக்கும் ஆலயம், மணாலியின் வசீகரிக்கும் பியாஸ் நதி பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக இது ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. மேலும் இந்திய தெய்வங்களின் பரலோக ஆற்றல்களை நெருங்க விரும்பும் பார்வையாளர்கள் பொதுவாக அமைதி மற்றும் ஆன்மீக அறிவொளியை தேடி இங்கு செல்வார்கள். இந்த மனு கோயில், இந்தியாவில் மனு முனிவர் என்று அழைக்கப்படும் மனு மன்னருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோயிலாக இருக்கிறது. மேலும் இது பிரம்மிக்க வைக்கும் கட்டிடக்கலையைக் கொண்டுள்ளது. அமைதியான மன உணர்வை பெற விரும்புவோர், மனு கோயிலுக்குச் செல்லலாம்.

ரோஹ்தாங் பாஸ் :

கடல் மட்டத்திலிருந்து 13,000 அடி உயரத்தில் அமைந்துள்ள ரோஹ்தாங் கணவாய், ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஸ்பிதி மற்றும் லாஹவுல் பள்ளத்தாக்குகளின் நுழைவாயிலாகவும், இமயமலையின் பீர் பஞ்சால் மலைத்தொடரின் நன்கு அறியப்பட்ட பகுதியாகவும் உள்ளது. மணாலியில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்களில் இதுவும் ஒன்று. கண்களுக்கு விருந்தளிக்கும் இயற்கைக் காட்சிகளை கொண்டுள்ள இந்த இடம், திரைப்பட இயக்குநர்களிடையே மிகவும் பிரபலமானது. "ஜப் வி மெட்" முதல் "யே ஜவானி ஹை தீவானி" வரை ஏராளமான பிளாக்பஸ்டர் படங்கள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன. 


கண்களுக்கு விருந்தளிக்கும் ரோஹ்தாங் பாஸ் மற்றும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஜோகினி நீர்வீழ்ச்சி

கூடுதலாக இங்கு மவுண்டைன் பைக்கிங், பனிச்சறுக்கு, டயர் டிராப் போன்ற உற்சாகமான விளையாட்டுகளில் சுற்றுலா பயணிகள் ஈடுபடலாம். கடினமான சாலை, அதிக உயரம் மற்றும் குளிர்ந்த சீதோஷ்ணநிலை காரணமாக, ரோஹ்தாங் பகுதிக்கு செல்ல பகல் நேரம் மட்டுமே சிறந்தது.

ஜோகினி நீர்வீழ்ச்சி :

புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஜோகினி நீர்வீழ்ச்சியில், 160 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கீழே கொட்டும். வசிஷ்டர் கோயிலில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் இது அமைந்துள்ளது. ஜோகினி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழி அழகான பழத்தோட்டங்கள் மற்றும் பைன் மரங்களால் சூழப்பட்டுள்ளது. இயற்கை ஆர்வலர்கள், சாகச பிரியர்கள் என அனைவருக்கும், பியாஸ் நதி மற்றும் ரோஹ்தாங்கின் பனி மூடிய சிகரங்களின் அற்புதமான காட்சிகளை கண்டு ரசித்து பல சிறிய நீரோடைகளைக் கடப்பது ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.

கிரேட் ஹிமாலயன் தேசிய பூங்கா :

மணாலி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்களில் ஒன்றாக கிரேட் ஹிமாலயன் தேசிய பூங்கா உள்ளது. இந்த பூங்கா, சிறந்த இயற்கை மதிப்புகளுக்காக யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 


சிறந்த இடங்களில் ஒன்றான கிரேட் ஹிமாலயன் தேசிய பூங்கா

பூங்காவில் 1000க்கும் மேற்பட்ட தாவரங்கள், 209 பறவை இனங்கள், 31 பாலூட்டி இனங்கள் உட்பட பல அரிய வகை உயிரினங்கள் உள்ளன. பனிச்சிறுத்தை, இமயமலை தஹ்ர், பழுப்பு கரடிகள் போன்ற அரிய விலங்குகளை இங்கே கண்டு வியக்கலாம்.

மணாலியை பார்க்க ஏற்ற காலம்:

மணாலியை முழுமையாக சுற்றிப்பார்க்க 4 முதல் 5 நாட்கள் தேவைப்படும். இங்கு வருடம் முழுவதுமே இதமான இனிமையான பருவநிலை காணப்பட்டாலும், அக்டோபர் முதல் ஜூன் மாதம்வரை ரம்மியமான, சுற்றுலாவுக்கு ஏற்ற காலநிலையாகும். இந்த மாதங்களில் மணாலியில் 10 முதல் 25 டிகிரி வரை வெப்பநிலை நிலவுவதால், சுற்றுலா பயணிகள் ரசிப்பதற்கு ஏற்ற காலமாக இது விளங்குகிறது.

Tags:    

மேலும் செய்திகள்