சிலை வடிக்கும் போது 'சித்தர்' காட்டிய மாயை ! மனம் திறக்கும் சிற்பி கார்த்திகேயன்

பொதுவாகவே ஆய கலைகள் அறுபத்து நான்கையும் வழங்க வேண்டி சரஸ்வதி தேவியை நோக்கி பலரும் வேண்டுவதை பார்த்திருப்போம்.

Update:2024-02-20 00:00 IST
Click the Play button to listen to article

பொதுவாகவே ஆய கலைகள் அறுபத்து நான்கையும் வழங்க வேண்டி சரஸ்வதி தேவியை நோக்கி பலரும் வேண்டுவதை பார்த்திருப்போம். அப்படிப்பட்ட இந்த ஆய கலைகள் பழந்தமிழ் இலக்கியங்களில் கற்க வேண்டிய கலைகளாக பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆதிகாலத்தில் வாழ்ந்த நம் மூத்த தமிழ் மக்கள் கண்டறிந்த இந்த கலைகள் அனைத்தையும் பரம்பரை, பரம்பரையாக பின்பற்றி வருவதோடு, அவற்றை மற்றவர்களுக்கும் பயிற்றுவித்து, வாழ்வியலோடு கலந்து வாழ செய்து வருகிறவர்கள் இன்றும் இருக்கிறார்கள். அந்த வகையில், இந்த ஆயக்கலைகளில் மிக முக்கியமான கலையாக கருதப்படும் சிற்பம் வடிவமைத்தல் அதாவது சிற்பக்கலையில் சிறந்து விளங்கக் கூடிய சிற்பியான கார்த்திகேயன், சிற்ப வடிவமைப்பில் உள்ள நுணுக்கங்கள் குறித்தும், நுட்பமான வேலைப்பாடுகளின் போது சந்திக்கக்கூடிய சவால்கள் குறித்தும் நம்மிடையே பேசியுள்ளார். அதுகுறித்த தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.

சிற்பக்கலை மீதான ஆர்வம் எப்போது, எங்கிருந்து ஆரம்பித்தது?

சிறுவயதில் இருந்தே படிப்பின் மீது இருந்த ஆர்வத்தை விட, சிற்ப கலைகள் மீதுதான் எனக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது. காரணம் நான் சிறுவனாக இருக்கும்போது மற்ற சிற்பிகள் சிலை வடிவமைப்பதை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். அதை பார்த்துவிட்டு வந்த பிறகு நானும் வீட்டில் முருகன், விநாயகர் போன்ற சிலைகளை செய்து பார்ப்பேன். இதனை பார்த்த எங்கள் வீட்டு பெரியவர்கள் என்னை அத்துறையிலேயே பயணிக்க வைக்க முடிவு செய்து சென்னை வடபழனியில் சிலைகள் வடிவமைப்பில் முதிர்ச்சி பெற்ற கலைஞரான கே.ஜே.வேலுசாமி என்பவரிடம் சேர்த்துவிட்டனர். அவர்தான் எனது குருநாதர். அங்கிருந்துதான் நான் ஒரு சிற்பியாக உருவானேன்.

நீங்கள் முதலில் உருவாக்கிய சிலை எது?

ஆரம்ப காலங்களில் நிறைய சிலைகள் செய்து இருக்கிறேன். ஆனால் அவை எல்லாம் சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லை. நன்கு தொழில் கற்றுக் கொண்ட பிறகு நான் முதல் முறையாக உருவாக்கிய சிலை என்றால் அது காஞ்சி மகா பெரியவர்தான். அவரின் சிலைதான் எனக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தையும், எனக்கென்ற அடையாளத்தையும் பெற்றுக்கொடுத்தது. சிலை வடிவமைப்பில் எத்தனையோ பெரிய பெரிய ஜாம்பவான்கள் இருந்த அந்த சமயத்தில் நான் வடிவமைத்த அந்த சிலை எப்படி ஓகே ஆனது என்பது இன்றுவரை எனக்கு ஆச்சரியமாகத்தான் உள்ளது. அது என் வாழ்க்கையில் நடந்த அதிசயமாகத்தான் நான் இன்றுவரை பார்க்கிறேன்.


சிற்பி கார்த்திகேயன் முதலில் வடிவமைத்த காஞ்சி மகா பெரியவர் சிலை  

உங்களுக்கு கிடைத்த முதல் அங்கீகாரம், உங்களது வாழ்வில் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தியது?

தொழில் சார்ந்து எனக்கு அங்கீகாரம் கிடைத்ததோ இல்லையோ, என் குருவின் ஆசீர்வாதம் பரிபூரணமாக கிடைத்தது என்பது மட்டும் என்னால் உணர முடிந்தது. அது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். எனக்கான அங்கீகாரம் கிடைத்து இரண்டு வருடங்களுக்குப்பிறகு மீண்டும் சிலைகள் வடிவமைப்பதற்கான வாய்ப்புகள் தேடி வந்தன. ஆனால், அவை எல்லாமே நேரடி ஆர்டர்களாக இல்லாமல், கம்பெனி ஆர்டராக வந்தது. இருப்பினும் நீண்ட போராட்டங்களுக்கு பிறகுதான் எங்களால் தனி ஆர்டராக சிலைகள் எடுத்து வடிவமைப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தன.

இத்தனை வருடங்களில் நீங்கள் செய்த சிலைகளிலேயே பெரிய சிலை எது? அது யாருடையது?

சிலைகள் செய்வதில் நிறைய வடிவங்கள், வேறுபாடுகள் இருக்கின்றன. அதில் மிக முக்கியமான ஒன்று மனித உருவங்களை வடிவமைப்பது. அப்படி மனித உருவங்களை கொண்டு நான் வடிவமைத்த எத்தனையோ சிலைகளில் மிக பெரியது என்றால் அது மறைந்த முதலமைச்சர் மு.கருணாநிதியின் சிலைதான். 35 அடி உயரத்தில் வெறும் அவரின் முகத்தினை மட்டுமே கொண்டு வடிவமைத்திருந்தேன். இதுதான் உலக அளவில் முகத்தை மட்டுமே வைத்து வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய சிலையாக இருக்கும் என்று கருதுகிறேன். 2006-ஆம் ஆண்டு திருச்சியில் திமுக சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டில் இடம்பெறச் செய்வதற்காக அவர் உயிரோடு இருக்கும் போதே இந்த சிலை வடிவமைக்கப்பட்டது. இந்த சிலை ஆர்டரை நான் எடுத்தபோது அது எப்படி வரப்போகிறதோ என்ற தயக்கம் இருந்தது. அப்போது எனக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தது பத்திரிக்கை நண்பர்கள்தான். அவர்கள் தினந்தோறும் வந்து புகைப்படம் எடுத்து பத்திரிகைகளில் போடுவார்கள். அடுத்தநாள் பேப்பரில் வந்த அந்த படத்தினை பார்க்கும் போதுதான் நான் என்ன தவறு செய்திருக்கிறேன், அடுத்து எப்படி அதனை சரி செய்ய வேண்டும் என்பதை யோசித்து மாற்றியமைப்பேன். அப்படி உருவாக்கப்பட்ட அந்த சிலை அன்று மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது.

இப்போது சிலைகள் செய்வதற்கு என்று நிறைய மெஷின்கள் எல்லாம் வந்துவிட்டதே, அதைப்பற்றி சொல்லுங்கள்?

ஒருபுறம் டெக்னாலஜி அதாவது தொழில்நுட்பங்கள் பெரிய அளவில் வளர்ந்து விட்டதை நினைத்து 20 சதவிகிதம் சந்தோஷப்பட்டாலும், மறுபக்கம் 80 சதவிகிதம் வருத்தமாகவும் உள்ளது. எங்களுடைய சிற்பக்கலை மட்டுமல்லாது கலைசார்ந்த அனைத்துமே இன்னும் 10, 12 வருடங்களில் இருந்த இடம் தெரியாமல் போய்விடுமோ என்ற கவலையும் வந்துவிட்டது. காரணம் தொழிநுட்ப வளர்ச்சியால் இன்று சிலைகள் அனைத்தும் எளிமையாக கிடைத்துவிடுகின்றன. அதனால் சிலை வடிவமைப்பவர்களுக்கான அங்கீகாரம் என்பது குறைந்துகொண்டே வருகிறது. இதற்கு முன்பெல்லாம் ஒரு தலைவருக்கோ, முதலமைச்சருக்கோ சிலையை பரிசாக கொடுத்தால், அதனை வாங்கி கொஞ்ச நேரம் வியப்பாக பார்ப்பார்கள். ஆனால் இன்றோ அப்படி சிலைகளை பரிசாக கொடுக்கும்போது, அதனை வாங்கி ஓரமாக வைத்துவிடுகிறார்கள். இப்படியொரு அவலநிலைக்கு காரணம் டெக்னாலஜிதான். இந்த டெக்னாலஜி மற்றவர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்தாலும், என்னை பொறுத்தவரை கலைத்துறைக்கு பின்னடைவுதான். அதற்கு காலம்தான் பதில் சொல்லும்.


செராமிக்கால் வடிக்கப்பட்ட சிலை - வர்ணம் பூசுவதற்கு முன்பான காட்சி

நீங்கள் செய்த சிலைகளிலேயே அதிகமாக யாருடைய முகம் கொண்ட சிலையை வடிவமைத்துள்ளீர்கள்?

திமுக-வின் மறைந்த தலைவர் கலைஞர் கருணாநிதியுடைய சிலைகளைத்தான் அதிகமாக செய்திருக்கிறேன். சிறியது முதல் பெரியது வரை அனைத்து சிலைகளையும் நான்தான் செய்து கொடுத்துள்ளேன். 35 அடி உயர சிலையில் தொடங்கி அண்ணா அறிவாலயம், ஓமந்தூரார் அரசினர் தோட்டம் போன்ற பெரும்பாலான இடங்களில் இருக்கும் சிலைகள் நான் செய்ததுதான். தலைவர் கலைஞர் அவர்களை எந்தெந்த தோற்ற அமைப்புகளில் எல்லாம் சிலையாக வடிவமைக்க முடியுமோ அப்படியெல்லாம் செய்துள்ளேன். சட்டத்துறை அமைச்சருக்கு கூட, கலைஞர் கையில் தராசுடன் இருப்பது போன்ற சிலையை வடிவமைத்து பரிசளித்தோம். இப்படி அவரை வைத்து நான் செதுக்காத சிலைகளே இல்லை என்று சொல்லலாம்.

எந்த மாதிரியான மெட்டீரியல் அதாவது மூல பொருட்களைக் கொண்டு சிலைகள் வடிவமைப்பீர்கள்? அதில் எது அதிகம் தற்போது விற்பனையாகிறது?

எந்த மெட்டீரியலை கொண்டு சிலைகள் வடிவமைக்கப்பட்டாலும், துவக்கத்தில் களிமண்ணை கொண்டுதான் அதற்கான அடிப்படை சிலை வடிவம் செதுக்கப்படுகிறது. பின்னர் அதன் உதவியுடன் டை எடுக்கப்பட்ட பின்னரே மெழுகு, வெண்கலம், ஃபைபர் என பல வகைகளில் இருக்கும் மெட்டீரியல்களில் வாடிக்கையாளர் எதை விரும்புகிறார்களோ அதனை தேர்வு செய்து சிலைகள் வடிவமைத்து தரப்படுகின்றன. இந்த காலத்தில் பெரும்பாலும் ஃபைபர் மெட்டீரியலில் வடிவமைக்கப்படும் சிலைகளையே வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புகிறார்கள். காரணம் கீழே விழுந்தாலும் பெரியளவில் டேமேஜ் ஏற்படாது என்பதனால்தான். அதே போல் வெண்கலத்தில் சிலை செய்தால் அதிக செலவு இழுக்கும் என்பதால் வெகு சிலரே அதை தேர்வு செய்கின்றனர். இருந்தும் கடவுள் சிலைகளை பொறுத்தவரை இயற்கையோடு இயைந்தபடி மண், கருங்கல், பஞ்சலோகம் போன்ற மூலப்பொருட்களைக் கொண்டே பெரும்பாலும் சிலைகள் வடிவமைக்கப்படுகின்றன.

சாமி சிலைகள் வடிவமைக்கும் போது ஏற்பட்ட அனுபவம் பற்றி சொல்லுங்கள்? அந்த சமயம் உங்கள் வாழ்வில் ஏதும் அதிசயங்கள் நிகழ்ந்துள்ளதா?

பொதுவாகவே சாமி சிலைகள், சித்தர்கள் சிலைகள் வடிவமைக்கும்போது சில விரத முறைகளை பின்பற்ற வேண்டும் என சிலர் கூறுவார்கள். ஆனால் நான் அவ்வாறெல்லாம் பின்பற்றியது இல்லை. சிலை செதுக்கும்போது மனது சுத்தமாக இருந்தால் போதும். சொல்லப்போனால் என்னை விட அனுபவம் வாய்ந்த பல சிற்பிகள் என்னை விடவே அழகாகவே சாமி சிலைகள் செதுக்குவார்கள். ஆனால் இங்கு அழகு முக்கியமல்ல சிலையில் ஒரு உயிர் இருக்க வேண்டும். அது அந்த சிலையை செதுக்கும்போது அதனுடன் பேசி உறவாடும் போதுதான் அப்படியான உணர்வும், உயிரும் கிடைக்கும். அதிலும் சித்தர்கள் சிலையை வடிவமைக்கும்போது கிடைக்கும் மனத்திருப்தி அலாதியானது.

அப்படி ஒருமுறை வெள்ளியங்கிரி சித்தரின் சிலையை வடிவமைத்து, வர்ணம் தீட்டும் நேரத்தில் வாசனை மிகுந்த பூக்களின் மணம் நாங்கள் இருந்த பகுதி முழுவதும் வீசியது. அப்போது யாரேனும் பூக்கள் எடுத்து வந்துள்ளார்களா? என தேடிப்பார்த்தபோது ஒருவர் கூட அங்கு இல்லை. அதே போல் வெள்ளியங்கிரி சித்தரின் சிலை முழுவதுமாக முடிவடைந்த பின், அவரது கண்ணை பார்த்து மனதுக்குள் பல விஷயங்களை எண்ணிக் கொண்டிருந்த சமயத்தில் பக்தி மனம் கமழும் சாம்பிராணி வாசம் நாங்கள் இருந்த பகுதி முழுவதும் வீசியது. இந்த அதிசயங்களை என் வாழ்நாளில் என்றுமே மறக்கமுடியாது. இதில் குறிப்பிட தகுந்த விஷயம் என்னவென்றால், பிற சிலைகள் வடிவமைக்கும்போது நாங்கள் என்ன நினைக்கிறோமோ அதுதான் உருவமாக வரும். ஆனால் சித்தர்கள் சிலைகளை பொறுத்தவரை அவர்கள் நினைத்தால்தான் சிலையையே உருவாக்க முடியும். அது இயற்கையின் கையிலும், அவர்களின் கையிலும் மட்டுமே உள்ளது.


அம்பிகை சிலை மற்றும் சிற்பி கார்த்திகேயன் 

ஒரு சிலையை உருவாக்க எத்தனை நாட்கள் உங்களுக்கு தேவைப்படும்? இதுவரை எத்தனை சிலைகள் செய்திருப்பீர்கள்?

சிலைகளை உருவாக்குவதற்கான காலங்களை நம்மால் வரையறுக்க முடியாது. ஏனெனில் சிலையின் அளவு, தற்காலிக சிலையா அல்லது நிரந்தர சிலையா போன்ற விஷயங்களே சிலை செதுக்குவதற்கான நேரத்தை நிர்ணயிக்கும். உதாரணமாக ஒரு சித்தர் சிலையை உருவாக்க கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் தேவைப்படும். அதுவே தற்காலிக சிலையென்றால் ஒரு வாரம் போதும். இதில் மெட்டீரியல் மற்றும் நேரத்தை பொறுத்து விலையும் மாறுபடும். நான் இந்த துறையில் கிட்டத்தட்ட 33 வருடங்களாக இருக்கிறேன். இதுவரை சுமார் 44,000 சிலைகள் செய்திருப்பேன் என நினைக்கிறேன்.

சமீபத்தில் அயோத்தியில் திறக்கப்பட்ட ராமர் கோவிலில் உள்ள ராமர் சிலையை பார்த்தீர்களா? அந்த நிகழ்வு குறித்து உங்களின் கருத்து.

ராமர் சிலையை நேரடியாக பார்க்கவில்லை, சமூக ஊடகங்களில் வெளியான புகைப்படங்களில்தான் பார்த்தேன். நன்றாகத்தான் வந்துள்ளது. ஆனால் சிலர் ராமரின் முகம் குழந்தை போல் இருப்பதாக கூறினார்கள். இருந்தும் நான் பார்த்த வரை எனக்கு அவ்வாறாக தோன்றவில்லை.

இதுவரை நீங்கள் வடித்த சிலைகளிலேயே, எந்த சிலைக்கு மிகப்பெரிய பாராட்டு கிடைத்தது? ஏதேனும் மறக்கமுடியாத நிகழ்வு உள்ளதா?

எப்போதுமே பாராட்டை பெரிதாக விரும்பாதவன் நான். காரணம் பாராட்டு என்பது இயல்பாக கிடைக்க வேண்டும், நாமே சென்று பெற்றுக்கொள்ளும் படி இருக்கக் கூடாது. இருந்தும் என் வாழ்நாளில் மறக்கமுடியாத நிகழ்வென்றால் கடலூரை சேர்ந்த திமுக எம்.எல்.ஏ புகழேந்தி ஒருமுறை கல்வி நிலையங்களில் கலைஞர் என்கிற புத்தகத்தை விழாவாக நடத்தி வெளியிட்டார். அந்த நிகழ்விற்காக ஒரு சிலையை நான் செதுக்கி இருந்தேன். அப்போது நான் சிற்பிதான் என்றாலும் விழா மேடைக்கே அழைத்து சென்று அப்போது துணை முதல்வராக இருந்த மு.க ஸ்டாலின் அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்தி பெருமைப்படுத்தியதோடு, தலைவரும் தனக்கு அணிவிக்கப்பட்ட பொன்னாடையை எடுத்து எனக்கு கொடுத்து கௌரவித்தார். இந்த சம்பவத்தை என்றுமே என்னால் மறக்கமுடியாது. இது பாராட்டு அல்ல ஒரு கலைஞனை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான ஒரு பயணம் என்றே நான் சொல்வேன்.

Tags:    

மேலும் செய்திகள்