ஒரே இடத்தில் அமர்ந்திருப்பவரா? எடையை குறைக்க சில டிப்ஸ் - ஃபிட்னஸ் ட்ரெய்னர் சரவணன்

ஒருநாளில் கிட்டத்தட்ட 12 மணிநேரம் அமர்ந்தே இருக்கவேண்டிய சூழல் ஏற்படுவதால் ஓரிரு மாதங்களுக்குள்ளேயே உடல் எடை தாறுமாறாக ஏறியிருப்பதை கண்கூடாக பார்க்கக்கூடும்.

Update:2024-01-23 00:00 IST
Click the Play button to listen to article

ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ உடல் உழைப்பு மிக மிக அவசியம். ஆனால் இன்று எங்கும் எதிலும் நவீனம் என்றாகிவிட்டது. அதனால் அனைத்து வேலைகளையும் மெஷின்களே செய்வதுடன் கம்ப்யூட்டர் முன்பு நீண்ட நேரம் அமர்ந்தே வேலை செய்ய வேண்டியிருக்கிறது. இதனால் பல்வேறு உடல்நல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, இன்று உடற்பருமன் பிரச்சினையால் அவதிப்படும் 95 சதவீதம் பேர் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்திருப்பவர்களாகத்தான் இருக்கின்றனர். நீண்ட நேரம் அமர்ந்தே வேலை செய்பவர்கள் என்னென்ன உடற்பயிற்சிகள் செய்தால் ஃபிட்டாக இருக்கலாம் என்பதை விளக்குகிறார் ஃபிட்னெஸ் ட்ரெய்னர் சரவணன்.

ஐடியில் வேலை செய்யும் பலரின் உணவு பழக்கங்களில் அதிகம் இடம்பெறுவது ஜங்க் ஃபுட்ஸ்தான். மேலும் அவர்களுடைய கொண்டாட்டங்களில் அதிகம் இடம்பெறும் கேக்குகள், ஆர்டர் செய்து சாப்பிடும் பீட்சா, பர்கர் போன்ற உணவுகளால் அளவுக்கு அதிகமான கலோரிகள் உடலில் சேர்கின்றன. ஆனால் அப்படி உடலில் சேரும் கலோரிகள் எரிக்கப்படுகிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்லமுடியும். காரணம், ஒரே இடத்தில் அமர்ந்து வேலைசெய்வது. ஒருநாளில் கிட்டத்தட்ட 12 மணிநேரம் அமர்ந்தே இருக்கவேண்டிய சூழல் ஏற்படுவதால் ஓரிரு மாதங்களுக்குள்ளேயே உடல் எடை தாறுமாறாக ஏறியிருப்பதை கண்கூடாக பார்க்க முடியும்.


ஒரே இடத்தில் அமர்ந்தே வேலை செய்தல்  - செய்யவேண்டிய எளிய உடற்பயிற்சிகள் (உ.ம்)

உயரத்திற்கு ஏற்ற எடை

ஒரு பெண் 172 செ.மீ உயரத்தில் இருந்தால் அவருடைய எடை 72க்குள்தான் இருக்கவேண்டும். அதற்குமேல் ஒரு கிலோ ஏறினாலும் BMI அளவு அதிகரித்துவிடும். ஒரு நபர் தனது உயரத்திற்கு போதுமானதைவிட 20 கிலோ அதிகமாக இருந்தால் ஒரு மாதத்தில் அதிகப்படியாக 5 கிலோ குறைப்பது ஆரோக்கியமானது. இதற்கு முறையான பயிற்சி மற்றும் டயட் தேவை. சாப்பிடும்போது எவ்வளவு ஈஸியாக இருந்ததோ அதேபோல் மூன்று மடங்கு கஷ்டப்பட்டால்தான் ஒருமுறை சாப்பிட்ட கலோரியை எரிக்கமுடியும்.

இதற்கு, ஃபுட் ஆப்களை போனிலிருந்து டெலிட் செய்துவிட்டு, வீட்டிலேயே சமைத்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. பசிக்கும்போது நிறைய தண்ணீர் குடிப்பது, கீரைகள், பழங்களை சாப்பிடுவது உள்ளிட்டவற்றை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். மாதத்திற்கு ஒருமுறை ஹோட்டல் சென்றாலே போதுமானது. அதேபோல் 20 கிலோ எடை அதிகமாக இருக்கும் ஒரு நபர் ஒரே மாதத்தில் எடையை குறைத்துவிடலாம் என்று நினைப்பது தவறு. ஒவ்வொருவரும் 6 மாதகாலம் முறையாக டயட் மற்றும் பயிற்சியை மேற்கொண்டால்தான் விரும்பிய உடல்வாகை பெறமுடியும். மேலும் முகத்திலுள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைவதுடன் உடலில் ஸ்டாமினா அளவும் அதிகரிக்கும். கூடவே தன்னம்பிக்கை அதிகரிக்கும்.


தவிர்க்கவேண்டிய மற்றும் சாப்பிடவேண்டிய உணவுகள் - செல்போன் பயன்பாட்டை தவிர்த்து தூங்குதல்

வாய் கட்டுபாடு அவசியம்

எங்காவது பர்த்டே மற்றும் நிகழ்ச்சிகளுக்கு சென்றால் அங்கு பிரியாணி, ரொட்டி, பனீர் என கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை முதலில் எடுத்துக்கொள்ளாமல், அங்கு வைத்திருக்கும் பழங்களை சாப்பிடவேண்டும். பின்பு சிறிதளவு மற்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் நாம் செய்யும் பெரிய தவறு என்னவென்றால் முதலில் வயிறு நிறைய மற்ற உணவுகளை சாப்பிட்டுவிட்டு கடைசியாகத்தான் பழங்கள் வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு செல்வோம். இப்படி சாப்பிடுவதால் வாயுத்தொல்லை மற்றும் அமிலத்தன்மை அதிகரிக்கும். குறிப்பாக, ஐஸ்க்ரீம் முடிந்தவரை சாப்பிடவேண்டாம். ஏனென்றால் வயிறு, மார்பு மற்றும் முகத்தில் எடை அதிகரித்து உடல்வாகே மாறிவிடும். அதேபோல், பால் மற்றும் அதுசார்ந்த பொருட்களை தவிர்த்து ப்ளாக் காபி, டீ, க்ரீன் டீ, லெமன் டீ போன்றவற்றை சர்க்கரை இல்லாமல் எடுத்துக்கொள்ளலாம். இதனால் உடல்வாகு மட்டுமல்ல ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். சூரியன் இறங்கும்போது உணவு இறங்குவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும். இரவு 8 மணிக்குள் தூங்கவேண்டும் என்பதை முன்னோர்கள் பின்பற்றினார்கள். ஆனால் கலாசாரம் என்ற பெயரில் செல்போன் பயன்பாடு, இரவுநேர பார்ட்டிகள் போன்றவற்றால் அனைத்துமே முற்றிலும் மாறிவிட்டது. எனவே பழக்கவழக்கங்களை மாற்றுவது என்பது எடையை குறைப்பது மட்டுமல்ல, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையுமே மேம்படுத்தும்.

Age is just a number என்று சொல்வது காதலுக்கு மட்டுமல்ல; உடல் ஆரோக்கியத்திற்கும்தான் என்பதை கவனத்தில்கொண்டு உணவு மற்றும் டயட் முறைகளை சரியாக பின்பற்றவேண்டும். Health is wealth என்பதை மறக்கவேண்டாம்.

Tags:    

மேலும் செய்திகள்