லேசான கட்டி தென்பட்டாலே பரிசோதனை அவசியம் - புற்றுநோய் குறித்து மருத்துவர் விளக்கம்

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 1.25 லட்சம் பெண்கள் இப்புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிற கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்க 9 - 14 வயது வரையிலான சிறுமிகளுக்கு HPV தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்க இந்த ஆண்டு மத்திய அரசின் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

Update:2024-02-06 00:00 IST
Click the Play button to listen to article

நமது உடலில் ஏற்படக்கூடிய பல நோய்கள் ஆரம்பத்திலேயே அறிகுறிகளை வெளிப்படுத்தினாலும் சில நோய்கள் சத்தமே இல்லாமல் உருவாகி சாவின் விளிம்பிற்கே கொண்டுசென்று விட்டுவிடும். அப்படிப்பட்ட நோய்களில் ஒன்றுதான் புற்றுநோய். இதுகுறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட்டாலும் இதில் பல்வேறு வகைகள் இருப்பதால் மக்களால் எளிதில் புரிந்துகொள்ள முடிவதில்லை. இந்தியாவை பொருத்தவரை பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிற புற்றுநோய்களில் முதலிடத்தில் இருப்பது மார்பக புற்றுநோய், இரண்டாவது இடத்தில் இருப்பது கர்ப்பப்பை வாய் புற்றுநோய். குறிப்பாக, உலகளவில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் பெண்களில் நான்கில் ஒரு பங்கு இந்தியாவில்தான் என்கின்றன புள்ளிவிவர தரவுகள். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 1.25 லட்சம் பெண்கள் இப்புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிற கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்க 9 - 14 வயது வரையிலான சிறுமிகளுக்கு HPV தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்க இந்த ஆண்டு மத்திய அரசின் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. புற்றுநோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் அதிலிருந்து முழுமையாக விடுபடுவது எப்படி என்பது குறித்து நம்முடன் உரையாடுகிறார் மகளிர் நல மருத்துவர் நிர்மலா சதாசிவம்.


உடலில் தாக்கத்தை ஏற்படுத்தும் புற்றுநோய் செல்கள்

புற்றுநோய்க்கான சிகிச்சைகள் நிறைய இருந்தாலும் சிலர் இதனால் இறக்கிறார்களே? இதுகுறித்து உங்களுடைய கருத்து என்ன?

புற்றுநோயை கண்டறிதல் மற்றும் அதற்கான சிகிச்சைகள் காலங்காலமாக இருந்தாலும், டெக்னாலஜி வளர வளர சிகிச்சையிலும் முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக மார்பகம் மற்றும் கருப்பைவாய் புற்றுநோயால்தான் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இது இளம்வயதிலேயே நிறையப்பேருக்கு ஏற்படுகிறது. இதனை PAP smear என்ற ஸ்க்ரீனிங் முறை மூலம் கண்டறியலாம். அடுத்து புற்றுநோயை உருவாக்குகிற papilloma வைரஸை பரிசோதிக்கும் முறைகள் கடந்த 50 ஆண்டுகளாகவே இருக்கிறது. இருப்பினும் கடந்த 20 ஆண்டுகளில் இதில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதால் புற்றுநோயால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையானது கணிசமாக குறைந்திருக்கிறது.

இதுதவிர அரசாங்கத்தின் மருத்துவ காப்பீட்டு திட்டம்மூலம் பெரிய நோய்கள் மற்றும் அறுவைசிகிச்சைகளை அரசு மருத்துவமனைகளில் எளிதில் செய்துகொள்ளக்கூடிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்குக் கூட தரமான சிகிச்சைகள் கிடைக்கின்றன. இதனால் இறப்புகளின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இருப்பினும் இறப்புகள் ஏற்பட காரணம், நிறையப்பேர் ஆரம்பகட்ட பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளை புறக்கணிப்பதுதான். சிலருக்கு புற்றுநோய் உறுதியாகிவிட்டால் என்ன செய்வது என்ற பயமும் பரிசோதனைகளை மேற்கொள்ள விடாமல் தடுக்கின்றது.


புற்றுநோய் பரிசோதனை - புற்றுநோய் இறுதி நிலையை எட்டிய நபர் (மாதிரிப்படம்)

ஒருசிலருக்கு குறிப்பிட்ட பகுதியில் புற்றுநோய் கண்டறியப்பட்டு குணப்படுத்தப்பட்டிருந்தாலும் அதனுடைய தாக்கம் மற்றொரு உறுப்பில் ஏற்பட்டு அங்கு புற்றுநோய் கட்டியானது வளர்ந்திருக்கும். இதனை மருத்துவர்களே சிலநேரங்களில் தவறவிட்டு விடுவர். PET ஸ்கேன் முறைமூலம் பரிசோதிக்கப்படும்போது உடலில் எந்த இடத்தில் ஒரு கேன்சர் செல் இருந்தாலும் அது காட்டிக்கொடுத்துவிடும். இந்த அளவுக்கு அதிநவீன தொழில்நுட்பங்கள் இருக்கும்போது பிரச்சினையை கண்டறியாமல் விடுவது தவறு. மார்பக புற்றுநோயை சுய பரிசோதனைமூலம் கண்டறியலாம். லேசான கட்டி தென்பட்டாலே உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதிக்கவேண்டும். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வும் இன்று பல பெண்களுக்கு இருக்கிறது.

அறிகுறிகள் இல்லாமலேயே கேன்சர் சிலருக்கு கடைசி நிலைக்கு சென்றுவிடுவதாக கூறுகிறார்கள். இதனை எப்படி கண்டறிவது?

ஆண்டுக்கு ஒருமுறை பெண்களுக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஆரோக்கியமாக இருக்கும் பெண்கள் 35 வயதில் PAP smear பரிசோதனை செய்துகொள்வது நல்லது. அதன்பிறகு தேவைப்பட்டால், 40 வயதில் ஒருமுறை, மெனோபாஸ் கட்டத்தில் ஒருமுறை என மேற்கொள்ளலாம். அதேபோல் சோனோ மேமோகிராம் மற்றும் ரேடியோ மேமோகிராம் போன்ற மார்பக பரிசோதனைகளை 35 வயதில் ஒருமுறையும், 40 வயதில் ஒருமுறையும் மேற்கொள்ளலாம்.


கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கட்டிகள் இப்படித்தான் இருக்கும் (உதாரணப்படம்)

அடுத்து குடும்பத்தில் அப்பா, அம்மா, அப்பா வழி சகோதரி போன்ற மரபணு சொந்தங்களுக்கு கேன்சர் இருந்திருந்தால் அவர்களும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பெருங்குடல் புற்றுநோய் குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு ஏற்பட்டு இருந்தால், கொலோனோஸ்கோபி கருவிமூலம் பரிசோதித்துக் கொள்ளலாம். இதுதவிர அசாதாரண எடை இழப்பு, அசாதாரண ரத்தப்போக்கு போன்றவை இருந்தாலும் உடனடியாக பரிசோதிப்பது அவசியம். வலி இல்லாத கட்டிகளே கேன்சர் என்ற கருத்து பொதுவாகவே இருக்கிறது. உதாரணத்திற்கு பெருங்குடல் புற்றுநோய் இருந்தால், அவர்களுடைய மலம் கழிக்கும் நேரம், அதனுடைய தன்மை போன்றவற்றை கவனிக்கவேண்டும். திடீரென்று மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு என மாறி மாறி ஏற்படும். மலம் கழிக்கும்போது வலி, அதில் ரத்தம் கலந்து வருதல் போன்ற அறிகுறிகள் தென்படும். இவர்களுக்கு மல பரிசோதனை மேற்கொள்ளும்போது அதில் மைக்ரோஸ்கோபிக்கல் சிவப்பணுக்கள் இருக்கிறதா என்பதை மருத்துவர்கள் கண்டுபிடிப்பர். இதனை ஆரம்பத்தில் கவனிக்காமல் விட்டுவிட்டால் குணப்படுத்த முடியாது.


தனது அப்பா இளையராஜாவுடன் பாடகி பவதாரிணி

கர்ப்பப்பை புற்றுநோயை ஆரம்பகட்டத்திலேயே கண்டறிந்து குணப்படுத்துவது எப்படி?

புற்றுநோய் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். மேலை நாடுகளைப் போன்றே நமது நாட்டிலும் புற்றுநோயை கண்டறிவதற்கான பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்கள் உள்ளன. காப்பீட்டு திட்டங்களும் இருக்கின்றன. இதனை மக்கள்தான் கருத்தாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். ஆரம்பகட்டத்திலேயே கண்டறிந்தால் சிறிய கட்டியாகத்தான் இருக்கும். இதனை எளிய அறுவைசிகிச்சை மூலமே பாதுகாப்பாக அகற்றிவிடலாம்.

சமீபத்தில் பாடகி பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அறிகுறிகள் இல்லாமலே இருந்திருக்குமா?

சிலருக்கு புற்றுநோயால் தலைவலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டாலும் அதற்கு மட்டும் சிகிச்சை எடுத்துக்கொள்வார்கள். இதனால் வலிகள் குறைந்துவிடுவதால் மேற்கொண்டு பரிசோதனைகளை மேற்கொள்ளாமல் தவிர்த்துவிடுவார்கள். இரைப்பை புற்றுநோயை எண்டோஸ்கோபி ஸ்கேன் மூலமாகத்தான் கண்டறிய முடியும். சாதாரண ஸ்கேன் மூலம் கண்டறிய முடியாது.

Tags:    

மேலும் செய்திகள்