எந்த வயதில் பற்களுக்கு க்ளிப் போட்டால் நல்லது? - என்ன சொல்கிறார் பல் மருத்துவர்?

இரண்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு சரியாக பல் துலக்க தெரியாது. எனவே அதற்கென பிரத்யேகமாக விற்கும் பேஸ்ட் மற்றும் பிரஷ்களை வாங்கி பயன்படுத்தவும். அப்படி முடியாவிட்டால் சுத்தமான வெள்ளைத்துணியைக் கொண்டு பற்களை தேய்த்துவிட்டால்கூட பற்களில் தங்கியிருக்கும் அழுக்குகள் நீங்கிவிடும்.

Update:2024-05-21 00:00 IST
Click the Play button to listen to article

ஒருவர் தினமும் குளிப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியமானது பல் துலக்குதல். நாம் என்ன சாப்பிட்டாலும் முதலில் நாக்கு எப்படி சுவையை உணருகிறதோ அதேபோல் சாப்பிடும் உணவின் தாக்கத்தை பற்கள் உணரும். தினமும் இரண்டுநேரம் பற்களை துலக்கி, வாயை சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். அப்படி பற்களை துலக்கினாலும் முறையாக துலக்கவேண்டும். பற்களில் பொதுவாக ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும், எப்படி முறையாக பல்துலக்குவது என்பது குறித்தும், பற்களை எப்படி முறையாக பராமரிப்பது என்பது குறித்தும் நம்முடன் உரையாடுகிறார் மூத்த பல் மருத்துவர் நாசர்.

அதிகமாக இனிப்பு, ஐஸ்க்ரீம் சாப்பிட்டால் பற்கள் பாதிக்கப்படுமா?

எப்படி புகைப்பிடித்தால் நுரையீரல் பாதிக்கப்படுமோ, ஆல்கஹால் குடித்தால் கல்லீரல் பாதிப்படையுமோ அதுபோல இனிப்பு சாப்பிட்டால் பற்கள் பாதிப்படையும். கடைகளில் வாங்கும் சாக்லேட்களை சாப்பிடும்போது அவை பற்களில் ஒட்டி அங்கேயே தங்கிவிடுகின்றன. இது எனாமலை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிடுவதால் பாக்டீரியாக்கள் உள்ளே சென்றுவிடுகின்றன. இதனால் சொத்தை ஏற்படுகிறது. எனவே சாக்லேட் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. அப்படி கொடுக்க நேரிட்டால் சாப்பாட்டிற்கு முன்பு கொடுக்கவேண்டும். குழந்தைகளுக்கு இரவு தூங்கபோகும் முன்பு பால் கொடுப்பதால் சீக்கிரமே சொத்தை விழுந்துவிடுகிறது. குழந்தைகளுக்கு ஃபில்லிங் பண்ணுவதும் மிகவும் கடினம். இரண்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு சரியாக பல் துலக்க தெரியாது. எனவே அதற்கென பிரத்யேகமாக விற்கும் பேஸ்ட் மற்றும் பிரஷ்களை வாங்கி பயன்படுத்தவும். அப்படி முடியாவிட்டால் சுத்தமான வெள்ளைத்துணியைக் கொண்டு பற்களை தேய்த்துவிட்டால்கூட பற்களில் தங்கியிருக்கும் அழுக்குகள் நீங்கிவிடும். அனைவருமே காலை, இரவு இரண்டு வேளையும் பல் துலக்குவது அவசியம்.


இனிப்பு சாப்பிடுவதால் பல் சொத்தை ஏற்படும்

பற்களுக்கு க்ளிப் எதனால் போடப்படுகிறது? எந்த வயதில் போடுவது நல்லது?

பற்கள், தாடைகள் மற்றும் வாய் போன்றவை பெற்றோரின் மரபணு வழியாகத்தான் உருவாகின்றன. சிலருக்கு அப்பாவைப் போன்று பற்களும், அம்மாவைப்போன்று தாடையும் அமைந்துவிடும். இதனால் சிறிய வாயில் பெரிய பற்கள் உருவாகிவிடும். பார்ப்பதற்கே நன்றாக இருக்காது. 8 முதல் 9 வயதிற்குள் பற்களுக்கு க்ளிப் போட்டுவிட்டால் 12 வயதிற்குள் மொத்த சிகிச்சையும் முடிந்துவிடும். ஏனெனில் அந்த சமயத்தில்தான் பற்கள் விழுந்து திரும்ப முளைக்க ஆரம்பிக்கும். விதவிதமாக க்ளிப்கள் போடப்படுகின்றன. 14 வயதிற்குமேல் க்ளிப் போடும்போது சில பற்களை நீக்கவேண்டி இருக்கும். அதற்கு செலவும் அதிகமாகும். அதேபோல் பல் சொத்தையையும் ஆரம்பத்திலேயே சரிசெய்துவிட்டால் பிரச்சினை இருக்காது.

சிங்கபற்கள் என்று சொல்லக்கூடிய கோரைப்பற்களை சரிசெய்வது எப்படி?

கடைசியாக வளரக்கூடிய பல்தான் கோரைப்பல். மற்ற எல்லா பற்களும் முளைத்தபிறகு இடமே இருக்காது. அப்போது இந்த பல் முளைக்கும்போது சிலருக்கு மேலே தனியாக தெரியும். அனைத்து பற்களிலுமே நீளமான பற்கள் இவைதான். மற்ற அனைத்து பற்களுமே 20 முதல் 21 மி.மீட்டருக்குள் இருக்கும்போது கோரைப்பற்கள் மட்டும் 26.5 மி.மீட்டர் இருக்கும். இந்த பல் வெளியே நீட்டிக்கொண்டிருந்தால் பக்கத்திலிருக்கும் பல்லை நீக்கிவிட்டு இதை உள்ளே தள்ளிவிடலாம்.


பற்களை சரியாக சுத்தம் செய்யாததால் ஈறுகளில் ரத்தம் வடிதல்

ஈறுகளில் ரத்தம், சீழ் வடிவது எதனால்?

பற்கள் மற்றும் ஈறுகளை சரியாக சுத்தம் செய்யாமல் விட்டுவிட்டால் அழுக்கு சேர்ந்துவிடும். அப்படி அழுக்கானது பல்லுக்கும் ஈறுக்கும் நடுவே தங்கிவிடும்போது ரத்தம் வடியும். பல்லில் தங்கும் உணவுப்பொருட்களை எடுக்கவும், மசாஜ் செய்யவும், பார்ப்பதற்கு அழகாக தெரியவும்தான் ப்ரஷ் செய்கிறோம். அதை முறையாக செய்தாலே அழுக்கு சேராது. ரத்தமும் வடியாது. ஆனால் சிலருக்கு லுக்கீமியா, பாலீசிதீமியா, மோனோசைதீமியா அல்லது அனீமியா போன்ற பிரச்சினைகளாலும் ஈறுகளில் ரத்தம் வரலாம். ரத்தம் வடிதலில் இருக்கும் மாற்றங்களை பொருத்து உடனடியாக மருத்துவரை அணுகி பிரச்சினைகளை கண்டறிந்து சரிசெய்யவேண்டும். இப்போது நிறையப்பேருக்கு purpura பிரச்சினை வருகிறது. நிறைய மருந்து மாத்திரைகளை சாப்பிடுவதால் இந்த பிரச்சினை வருகிறது. இதற்கு ப்ளேட்லெட்களின் எண்ணிக்கையை பரிசோதித்து பார்த்தாலே கண்டறிந்துவிடலாம். ப்ளேட்லெட்களின் எண்ணிக்கை பொதுவாக 1,50,000க்கு மேல் இருக்கவேண்டும். இது 10000 முதல் 20000க்குள் இருந்தால் purpura பிரச்சினை என மருத்துவர்கள் கண்டறிந்துவிடுவர்.

பற்களில் இருக்கும் கறைகளை நீக்குவது எப்படி?

பல்லை சரியாக துலக்கினாலே இதுபோன்ற பிரச்சினைகள் வராது. சாப்பிடும் உணவுத்துகள்களை சரியாக நீக்காமல் அது 21 நாட்கள் ஒரே இடத்தில் இருக்கும்போது கடினமாகிவிடும். இப்படி கறை உருவாகிவிட்டால் அதனை நீக்கவேண்டும். கறை இருப்பதால் சிலருக்கு துர்நாற்றம்கூட வரும். ஆனால் வயிற்று பிரச்சினை அல்லது நுரையீரல் பிரச்சினைகளால்கூட துர்நாற்றம் வரலாம்.


பற்களில் படிந்திருக்கும் கறைகளை முறையாக சுத்தம் செய்தல் 

பற்களை முறையாக சுத்தப்படுத்துவது எப்படி?

மேற்புறத்தில் பல்லும் ஈறும் இணையும் இடத்தில் ப்ரஷ்ஷை வைத்து மேலிருந்து கீழாக மூன்று முறை துலக்கவேண்டும். உட்புறத்திலும் அதேபோல் மேலிருந்து கீழாக பிரஷ்ஷை தள்ளி தள்ளி தேய்க்கவேண்டும். கீழ்பற்களிலும் அதேபோல் ஈறுகள் மற்றும் பற்கள் இணையுமிடத்தில் கீழிருந்து மேலாக தேய்க்கவேண்டும். இப்படி முறையாக பல்துலக்கினாலே 70% பிரச்சினைகள் வராது. பல்லை சரியாக துலக்காவிட்டால் எனாமல் போய்விடும். அது திரும்ப வராது. அதேபோல் பல் உடைந்துவிட்டால் அதனை உடனடியாக சரிசெய்துவிட வேண்டும். இல்லாவிட்டால் பிரச்சினைகள் அதிகமாகிவிடும். பல் உடையும்போது நரம்புவரை பாதிப்பு ஏற்பட்டால் அதனை சரிசெய்து மேலே கேப் போடப்படும்.

எலக்ட்ரிக்கல் பிரஷ் பயன்படுத்துவது நல்லதா?

கையில் பிரஷ்ஷை பிடித்து பயன்படுத்துவதுதான் சிறந்தது. எலக்ட்ரிக்கல் பிரஷ் சிறியதாக இருக்கும். அது சர்குலர் வடிவில் சுற்றும். அதனால் ஈறுகளுக்கு மசாஜ் கொடுக்கமுடியாது. பல் துலக்க முடியாதவர்கள் கல் உப்பை வெதுவெதுப்பாக தண்ணீரில் கலந்து வாய் கொப்பளித்தாலே 50% கிருமிகள் அழிந்துவிடும்.


வித்தியாசமான வடிவங்களில் கிடைக்கும் எலக்ட்ரிக்கல் ப்ரஷ்கள்

நீங்கள் சிகிச்சை அளித்ததிலேயே மறக்கமுடியாத பேஷண்ட் பற்றி பகிரமுடியுமா?

நிறையப்பேர் வருவார்கள். 30 வருடத்திற்கும் முன்பு மலேசியாவிலிருந்து ஒரு பையன் வந்திருந்தார். அவனுக்கு எண்டமிக் ஃப்ளூரோசிஸ் என்று சொல்லக்கூடிய பல் முழுவதும் மஞ்சளாக இருக்கும் பிரச்சினை இருந்தது. திருமணம் செய்யவேண்டும் என்று ஆதங்கத்துடன் கூறினார். அவருடைய எல்லா பற்களுக்கும் கேப் போட்டு அனுப்பினோம். நிறையப்பேருக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்துவருகிறோம்.

பல் மருத்துவராகும் எண்ணம் எப்போது வந்தது?

அப்போது எல்லாரும் எம்.பி.பி.எஸ் படித்தபோது நான் வித்தியாசமாக படிக்கலாமென்று பல் மருத்துவம் எடுத்தேன். 1972-இல் கல்லூரியில் சேர்ந்தேன். அப்பாவிற்கு சம்பாத்தியம் பெரிய அளவில் இல்லாததால் நன்றாக படிக்கவேண்டுமென்று அப்போதே முடிவெடுத்தேன். புத்தகங்களெல்லாம் 1000 ரூபாய்க்கும் மேல் இருந்ததால் எப்போதும் லைப்ரரியிலேயே இருப்பேன். கடினமான உழைப்பு, நேர்மை மற்றும் தாழ்மை இருந்தாலே அனைவருமே வாழ்க்கையில் வெற்றிபெறலாம். இன்றுவரை படித்துக் கொண்டிருக்கிறேன். புதிதாக பிரஷ் ஒன்றை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.


முறையாக ப்ரஷ் செய்தல் மற்றும் flossing செய்தல்

பற்களை ஆரோக்கியமாக பராமரிக்க என்ன செய்வது?

காலை, இரவு என இரண்டு வேளையும் முறையாக பிரஷ் செய்யவேண்டும். 6 - 8 மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரை அணுகி பரிசோதிக்கவேண்டும். இதனால் 70%-80% பிரச்சினைகளை தவிர்த்துவிடலாம். சாக்லேட் சாப்பிடவேண்டாம். கார்போஹைட்ரேட் உணவுகளை முடிந்தவரை தவிர்க்கவேண்டும். ஏற்கனவே பிரச்சினை ஏற்பட்ட பல்லில்தான் உணவுத்துகள்கள் தங்கும். அதனை எடுக்கத்தான் டூத் பிக்குகளை பயன்படுத்துவார்கள். அப்படி பயன்படுத்தினால் ஏற்கனவே இருக்கும் பிரச்சினை அதிகரித்துவிடும். அதிலும் சிலர் குண்டூசி மற்றும் பிற குச்சிகளை பயன்படுத்துவார்கள். அது முற்றிலும் தவறு. டூத் பிக் பயன்படுத்தினால் பற்களுக்கிடையே இடைவெளி விழுந்துவிடும்.

பிரஷ் செய்வது சரியா? அல்லது flossing செய்வது சரியா?

பிரஷ் செய்யும்போது பற்களுக்கு வெளியே இருக்கும் துகள்களை எடுக்கமுடியும். அதுவே பற்களுக்கு இடையே இருக்கும் துகள்களை எடுக்கத்தான் flossing செய்யப்படுகிறது. இரண்டுமே செய்துவிட்டால் மருத்துவரை பார்க்கவேண்டிய அவசியமே இல்லை.

Tags:    

மேலும் செய்திகள்