கோலிவுட் டூ ஹாலிவுட் - சினிமா டாக் ஆஃப் தி வீக்!
கடந்த ஆண்டு விஜய் தேவரகொண்டாவுடன் இவர் ஜோடிசேர்ந்த ‘குஷி’க்கு பிறகு வேறு படங்களில் கமிட்டாகாமல் வெளிநாட்டு சுற்றுலாக்கள் மற்றும் ஆன்மிக பயணங்கள் என நாட்களை கழித்துவந்தார். இந்நிலையில் 7 மாதங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் திரையில் தோன்றவிருக்கிறார் சமந்தா.
தமிழ் சினிமா தொடங்கி ஹாலிவுட் வரை பல்வேறு புதுப்படம் குறித்த அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துவருகின்றன. இந்த வாரம் அதிகம் பேசப்பட்ட திரைத்துளிகளை சற்று ஷார்ட்டாக பார்க்கலாம்.
மலையாளத்தில் சமந்தா?
தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர் ஓரிரு ஆண்டுகளில் விவாகரத்துப் பெற்று பிரிந்துவிட்டார். தொடர்ந்து திரைப்படங்களில் பிஸியாக ஓடிக்கொண்டிருந்த சமந்தா திடீரென தனக்கு மையோசிட்டிஸ் எனும் தசை அழற்சி நோய் இருப்பதாகக் கூறி ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தினார். அந்த நோய்க்கான சிகிச்சை எடுத்துக்கொண்டே தொடர்ந்து நடித்துவந்த இவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஒரு கட்டத்தில் வெளிநாட்டுக்கு சிகிச்சை செல்வதாகவும், அதனால் சினிமாவிலிருந்து கொஞ்ச காலத்திற்கு விலகியிருப்பதாகவும் அறிவித்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு விஜய் தேவரகொண்டாவுடன் இவர் ஜோடிசேர்ந்த ‘குஷி’க்கு பிறகு வேறு படங்களில் கமிட்டாகாமல் வெளிநாட்டு சுற்றுலாக்கள் மற்றும் ஆன்மிக பயணங்கள் என நாட்களை கழித்துவந்தார். இந்நிலையில் 7 மாதங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் திரையில் தோன்றவிருக்கிறார் சமந்தா. அதிலும் மலையாளத்தில் அறிமுகமாகும் இவர் மம்முட்டி ஜோடியாக நடிக்கவிருக்கிறார். அந்த படத்தை மம்முட்டியே தயாரிக்க, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பானது ஜூன் 15ஆம் சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மம்முட்டியுடன் ஜோடி சேரும் சமந்தா - விஜய்யின் த.வெ.கவுடன் இணைய திட்டமிடும் ராகவா லாரன்ஸின் மாற்றம் அமைப்பு
விஜய்யுடன் கைகோர்க்கும் ‘மாற்றம்’
நடிகர் ராகவா லாரன்ஸ் பல ஆண்டுகளாக நலிவடைந்தோருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவுவதில் ஆர்வம்காட்டி வருகிறார். அவருடன் KPY பாலாவும் சமீபத்தில் இணைந்து பொதுமக்களுக்கு உதவிசெய்து வருகிறார். இவர்கள் தங்களது சேவையை ‘மாற்றம்’ என்ற பெயரில் செயலாக்கி வருகின்றனர். இதனிடையே கடந்த பிப்ரவரியில் நடிகர் விஜய்யும் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கி, அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதனால் சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபட இருப்பதாகவும், மக்களுக்கு சேவை செய்யவே கட்சி தொடங்கி இருப்பதாகவும் கூறியிருக்கும் விஜய், வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகி வருகிறார். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்துடன் ‘மாற்றம்’ அமைப்பையும் இணைக்க ராகவா லாரன்ஸும் KPY பாலாவும் திட்டமிட்டு வருவதாகவும், அதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இதனால் சேவை மனப்பான்மை கொண்ட பல நடிகர்கள் அடுத்தடுத்து இந்த குழுவுடன் கைகோர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் சுந்தர் சி - வடிவேலு கூட்டணி?
சுந்தர் சி - வடிவேலு காம்பினேஷனில் வெளியான ‘தலைநகரம்’ மற்றும் ‘வின்னர்’ படங்களுக்கு இன்றும் மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக, வடிவேலுவின் நகைச்சுவையானது பெரிதாக பாராட்டப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இந்த கூட்டணி இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சமீபத்தில்தான் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ‘அரண்மனை - 4’ திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து சுந்தர் சி ஒரு பேய்ப் படத்தை இயக்கவிருப்பதாகவும் அதில் தமன்னா ஹீரோயினாக நடிக்க வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறாராம். இதனிடையே சுந்தர் சி இயக்கத்தில் ஏற்கனவே ‘கலகலப்பு’ இரண்டு பாகங்கள் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது மூன்றாம் பாகத்தை எடுக்கவும் திட்டமிட்டிருக்கிறாராம். அதில் விமல், சிவா ஆகியோர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து சுந்தர் சி இரண்டு படங்களை இயக்கவிருப்பதால் விரைவில் வடிவேலுவை சிறப்பான கதாபாத்திரத்தில் பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
‘தி கோட்’ திரைப்படத்தின் போஸ்டர் - மீண்டும் இணையும் சுந்தர் சி - வடிவேலு கூட்டணி
கெத்து காட்டும் ‘தி கோட்’!
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘தி கோட்’. இப்படத்தில் பிரசாந்த், சினேகா, பிரபுதேவா, மைக் மோகன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ளனர். படம் குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பானது பெருமளவில் அதிகரித்திருக்கிறது. இப்படத்தில் ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் மறைந்த நடிகர் விஜயகாந்த் முக்கியமான காட்சிகளில் வருவதாக அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டிருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் ‘தி கோட்’ படத்தின் சாட்டிலைட் உரிமத்தை விஜய் டிவி ரூ.90 கோடி கொடுத்து வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதனால் படம் வெளியாவதற்கு முன்பே பெரிய தொகைக்கு வியாபாரம் ஆகிவிட்டதை நினைத்து படக்குழு மகிழ்ச்சியாக இருக்கிறதாம். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என கூறப்படுகின்றது.
‘சர் ஃபிரா’ படத்தில் அக்ஷய் குமார் - சினிமாவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள ஹாலிவுட் நடிகை இவாஞ்சலின் லில்லி
வெற்றிக்கனியை பறிக்குமா இந்தி வர்ஷன்?
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா - அபர்ணா பாலமுரளி நடிப்பில் 2020-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சூரரைப் போற்று’. ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் கொரோனா காரணமாக ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட்டது. இருப்பினும் இப்படத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்ததுடன் தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளையும் வாங்கிக் குவித்தது. இந்நிலையில் இந்த படத்தை ‘சர் ஃபிரா’ என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்திருக்கிறார் சுதா கொங்கரா. அதில் அக்ஷய் குமார், ராதிகா மதன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்தி படத்திற்கும் ஜி.வி பிரகாஷ்குமார்தான் இசையமைத்திருகிறார். இப்படம் வருகிற ஜூலை 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. பாலிவுட்டிலும் இப்படம் ஒரு ரவுண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The story of a man who dared to dream big! And for me this is a story, a character, a film, an opportunity of a lifetime! #Sarfira trailer out on 18th June.
— Akshay Kumar (@akshaykumar) June 14, 2024
Catch Sarfira on 12th July, only in cinemas. pic.twitter.com/KMSHDFbBEl
சினிமாவுக்கு டாட்டா!
பிரபல ஹாலிவுட் நட்சத்திரமான இவாஞ்சலின் லில்லி சினிமாவிலிருந்து விலகுவதாகக் கூறி தனது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார். இவர் ‘தி ஹர்ட் லாக்கர்’, ‘தி ஹோபிட்’, ‘ரீல் ஸ்டீல்’ போன்ற ஹிட் படங்களில் நடித்தவர். இதுபோக ஆன்ட்மேன், ஆன்ட்மேன் அண்ட் தி வாஸ்ப், அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம், க்வாண்ட்மேனியா போன்ற படங்களால் உலகளவில் ரசிகர்களைப் பெற்றார். தற்போது 44 வயதான இவாஞ்சலின் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். இதுகுறித்து அவருடைய பதிவில், “நான் இப்போது மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருக்கிறேன். எனக்கு கிடைத்த ஆசிர்வாதங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். எனக்கு கிடைத்துக்கொண்டிருக்கும் பெயர், புகழ் போன்றவற்றிலிருந்து விலகிப்போகிறேன். சில நேரங்களில் இது பயத்தை கொடுக்கலாம். மனிதாபிமானம் மிக்க பணிகளில் எனது வாழ்க்கையை கழிக்க விரும்புகிறேன். என்றாவது ஒருநாள் நான் திரும்ப ஹாலிவுட்டுக்குள் நுழையலாம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.