தைரியத்துடன் தெளிவாக நடைபோடும் சைந்தவி! பர்த்டே ஸ்பெஷல்!

வேறு மொழிகளில் பாடும்போதும் வரிகளின் அர்த்தங்களை கேட்டு நன்றாக புரிந்துகொண்டு, எங்கு அழுத்தம் கொடுக்கவேண்டுமென்று தெரிந்துகொண்டுதான் பாடுவாராம் சைந்தவி. அப்படி பாடியதால் என்னவோ ‘அசுரன்’ படத்தில் இடம்பெற்ற ‘எள்ளுவய பூக்களயே’ பாடலுக்கு பல்வேறு விருதுகளை வென்றார்.

Update: 2024-12-30 18:30 GMT
Click the Play button to listen to article

2024ஆம் ஆண்டில் திரைப்பிரபலங்கள் மத்தியில் நிறைய விவாகரத்துகள் நடந்தன. அவற்றில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது ஜி.வி பிரகாஷ் - சைந்தவியின் விவாகரத்து. விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு பலபேர் எலியும் பூனையுமாக நடந்துகொள்ளும் நேரத்தில் இவர்கள் இருவரும் divorce couple goals செய்வதாக அனைவருமே இவர்களின் மெச்சூரிட்டியை பார்த்து பாராட்டினர். என்னதான் திருமண வாழ்க்கையிலிருந்து பிரிந்து இருந்தாலும் உறவு வேறு தொழில் வேறு என்பதில் மிகவும் தெளிவாகவும் மரியாதையுடன் நடந்துகொள்ளும் சைந்தவியை பலரும் பாராட்டுவதை நம்மால் பார்க்கமுடிகிறது. குறிப்பாக, பெண்கள் தங்களது சொந்த காலில் நிற்கவேண்டும் என்று கூறும் சைந்தவி, எப்படி குடும்பத்தையும் தொழிலையும் சரியாக பேலன்ஸ் செய்கிறார் என்பது குறித்து பேசியுள்ளார். விவாகரத்துக்கு பிறகு மீடியாவின் கண்களில் சிறிது காலம் படாமல் இருந்த சைந்தவி, தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றுக்கு நடுவராக தோன்றி மீண்டும் ரசிகர்களை தனது இனிய குரலால் ஈர்த்தார். தொடர்ந்து சமீபத்தில் ஜி.வி. பிரகாஷின் இசை நிகழ்ச்சியில் சைந்தவி நடனமாடி பாடல்கள் பாடிய வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வைரலான நிலையில் சைந்தவி குறித்த நிறைய தகவல்கள் வலம்வருகின்றன. குறிப்பாக, இவர்கள் இருவரும் மீண்டும் சேர்ந்துவாழவேண்டும் என்ற கோரிக்கையை பலரும் முன்வைத்து வருகின்றனர். ஜனவரி 3ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடும் பாடகி சைந்தவியின் காதல், குடும்ப வாழ்க்கை மற்றும் கெரியர் குறித்து பார்க்கலாம்.

மெலோடி குயின்!

5 வயதிலிருந்தே மேடைகளிலும் இசைக் கச்சேரிகளிலுல் பாடிவந்தாலும் சைந்தவி முறைப்படி கர்நாடக இசையை கற்றுக்கொள்ள தொடங்கியது என்னவோ 10 வயதில்தான். தான் பாடகியான அனுபவம் குறித்து சைந்தவி பகிர்கையில், “சிறுவயதில் கோவில்களில் பஜனை பாடுவதை கேட்டு அடம்பிடித்து நானும் பாடுவேன். அந்த சமயத்தில் நான் ஒரு பின்னணி பாடகி ஆவேனா என்று கேட்டிருந்தால் கண்டிப்பாக இல்லை என்றுதான் சொல்லியிருப்பேன். அதன்பிறகு கிளாசிக்கல் மியூசிக் கற்றுக்கொள்ள தொடங்கியபின், கிளாசிக்கல் பாடகி ஆனால் போதும் என்றுதான் நினைத்தேன். பின்னணி பாடகி ஆனது எனக்கே சர்ப்ரைஸ்தான். 2025ஆம் ஆண்டில் பின்னணி பாடகியாக 20 வருடங்களை நிறைவுசெய்கிறேன். முதன்முதலில் தேவா சார் இசையில் பாடினேன். ஆனால் அந்த படம் இன்றுவரை வெளிவரவில்லை. அதன்பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘அந்நியன்’ படத்தில் ரண்டக்க ரண்டக்க பாடினேன். 2004இல் பாடியிருந்தாலும் அந்த படம் 2005இல்தான் வெளியானது. இப்படித் தொடங்கி இதுவரை பல மொழிகளில் 1700க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறேன்” என்று கூறினார். சைந்தவி குரலில் அடடா மழடா, தஞ்சாவூர் ஜில்லாக்காரி போன்ற ஒருசில ஃபாஸ்ட் பீட் பாடல்கள் வெளிவந்திருந்தாலும், இவருடைய குரலில் வெளிவந்த கேளாமல் கையிலே, விழிகளில் ஒரு வானவில், பிறை தேடும் இரவிலே, யாரோ இவன், யார் இந்த சாலையோரம், விண்மீன் விதையில், இரவாக நீ, என்னாச்சு ஏதாச்சு போன்ற ரொமான்ட்டிக் மற்றும் மெலோடி பாடல்கள் அனைவரின் ப்ளே லிஸ்ட்டிலும் இடம்பிடித்தன.


 குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமிடம் சிறுவயதில் பரிசுபெற்ற சைந்தவி

ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு வரிகளுக்கும் உயிர்கொடுத்து அனைவரையும் இசையில் லயிக்க செய்யும் இவரது குரலால் பலர் ஈர்க்கப்பட்டாலும், ஜிவி பிரகாஷ் - சைந்தவி டூயட் பாடல்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. குறிப்பாக, யாரோ இவன், யார் இந்த சாலையோரம், பிறைதேடும் இரவிலே, இரவாக நீ மற்றும் உன்னாலே என் ஜீவன் போன்ற பாடல்கள் பெரும்பாலானோரின் ஃபேவரிட். சைந்தவி இப்படி உயிர்கொடுத்து பாட முக்கிய காரணமே சிறுவயதில் வாங்கிய திட்டுகள்தான் என்று கூறியிருக்கிறார். ஆரம்பத்தில் பாடும்போது யாரையும் கவனிக்காமல் கண்களை மூடிக்கொண்டுதான் பாடுவாராம். ஆனால் அப்படி பாடினால் பார்வையாளர்களை அது எப்படி சென்றடைகிறது என்பதை உன்னால் புரிந்துகொள்ள முடியாது என தனது வீட்டிலிருப்பவர்களே திட்டுவார்களாம். அதன்பிறகுதான் ஒரு பாடலை எடுத்துக்கொண்டால் அதில் ஒவ்வொரு வரியின் அர்த்தத்தையும் நன்றாக புரிந்துகொண்டு பாடவேண்டுமென்று முடிவெடுத்தாராம். வேறு மொழிகளில் பாடும்போதும் வரிகளின் அர்த்தங்களை கேட்டு நன்றாக புரிந்துகொண்டு, எங்கு அழுத்தம் கொடுக்கவேண்டுமென்று தெரிந்துகொண்டுதான் பாடுவாராம் சைந்தவி. அப்படி பாடியதால் என்னவோ ‘அசுரன்’ படத்தில் இடம்பெற்ற ‘எள்ளுவய பூக்களயே’ பாடலுக்கு பல்வேறு விருதுகளை வென்றார்.

சிறுவயது காதல்

10ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த ஜி.வி பிரகாஷ்குமாருக்கும், 8ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சைந்தவிக்கும் இடையே காதல் மலர காரணமாக அமைந்ததும் இசைதான். அப்போது பள்ளியில் உருவாக்கப்பட்டிருந்த இசைக்குழுவில் சைந்தவி பாட, அங்கு கீபோர்டு வாசித்தவர்தான் ஜி.வி. அப்போதிருந்தே இருவருக்கும் இருவரையும் பிடித்துபோக, அடிக்கடி ஜிவியை பார்க்க அவரது வகுப்பறைக்கு முன்பு நடந்துசெல்வாராம் சைந்தவி. அப்போதெல்லாம் தனது தோழிகளிடம் ஜி.வியை க்ரஷ் என்று மட்டுமே சொல்லி வைத்திருந்தாலும் இருவருக்குமிடையே முதலில் நட்பாக தொடங்கிய உறவு நாளடைவில் காதலாக மலர்ந்திருக்கிறது. இருவரும் வெளியே சொல்லிக்கொள்ளாமலேயே பழகிவந்த நிலையில், ஒரு கட்டத்தில் ஜி.விதான் சைந்தவியிடம் காதலை கேட்டாராம். தனக்கு பிடித்திருந்தாலும் இரண்டு நாட்கள் டைம் வேண்டுமென கேட்டுவிட்டு, பின்னர் சைந்தவியும் காதலை ஒத்துக்கொள்ள அன்றிலிருந்து காதலர்களாகவே வலம்வரத் தொடங்கினர்.


காதலர்களாக வலம்வந்த ஜி.வி. - சைந்தவி ஜோடி

கிட்டத்தட்ட 11 வருட காதல் வாழ்க்கையில் இருவருக்குமிடையே அடிக்கடி நிறைய சின்ன சின்ன சண்டைகள் வருமாம். ஆனால் எந்த பிரச்சினையையுமே பெரிதாக்காமல், இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசி அதை முடித்துக்கொள்வார்களாம். இருவரும் பள்ளிகாலத்திலிருந்தே காதலித்துவந்தாலும் 11 வருடங்களில் ஒருமுறைகூட காதலர் தினத்தன்று சந்தித்துக்கொண்டதே இல்லை என்பதுதான் இவர்களுடைய காதலில் சுவாரஸ்யமே. எப்போதுமே ஜிவி வேலையில் பிஸியாக இருப்பதால் சைந்தவிதான் குட்டி குட்டி நினைவுகளை தனது காதலில் உருவாக்குவாராம். பாடல்கள் கேட்கும்போது தங்களுக்கு பொருந்தும் வரிகளை கேட்டால் உடனே அதை எடுத்து ஜிவிக்கு அனுப்புவாராம். பெரிய பெரிய மெசேஜஸ் அனுப்பினாலும் ‘K' என்று ஒரே வார்த்தையில் ரிப்ளையை முடித்துவிடுவாராம் ஜிவி. என்னதான் ஒரே பள்ளியில் படித்திருந்தாலும் அருகிலேயே வசித்துவந்தாலும் நேரில் பார்த்துக்கொண்டதைவிட போனில்தான் அதிகம் பேசுவார்களாம்.

ரொமான்ஸ் கஷ்டமாக இருக்கும்

இப்படி போனில் தொடர்ந்துவந்த காதல் ஒருகட்டத்தில் திருமணத்தில் முடிந்தது. ஆரம்பத்தில் இருவீட்டிலும் தயக்கங்கள் இருந்தாலும் சிறுவயதிலிருந்தே இருவரையும் இரு வீட்டாருக்கும் தெரியும் என்பதால் இந்த உறவு திருமணத்தில் முடிந்தால் என்னென்ன சிக்கல்கள் வரலாம் என்பது குறித்து இருவீட்டாருமே எடுத்துச்சொன்னார்களாம். ஆனால் சைந்தவி - ஜிவி இருவருமே தங்களுடைய காதலை திருமணத்தில் முடிக்கவேண்டுமென்று மிகவும் உறுதியாக இருந்ததால் இருவீட்டார் சம்மதத்துடன் 2013ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அப்போது இசை மட்டுமன்றி ஹீரோவாகவும் ஜிவி நடித்துவந்தார். அதுகுறித்து சைந்தவியிடம் கேட்டபோது, ‘ஆன்ஸ்க்ரீனில் எந்த நடிகையுடனும் அவர் ரொமான்ஸ் செய்தால் எனக்கு பிடிக்காது. பார்க்கவே மிகவும் கஷ்டமாக இருக்கும். எந்த நடிகரின் மனைவியிடம் சென்று கேட்டாலும் இதைத்தான் சொல்வார்கள்’ என்று கூறியிருந்தார்.


ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி திருமண புகைப்படம்

என்னதான் ஹீரோ, பாடகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என்று தனது கணவர் பிஸியாக இருந்தாலும் பள்ளிகாலத்திலிருந்த அதே தாழ்மையும், அக்கறையும், அன்பும் திருமணத்திற்கு பின்பும் இருப்பதாக கூறியிருந்தார். இவர்களுடைய காதலுக்கு அடையாளமாக திருமணமான பல ஆண்டுகள் கழித்து ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இருவரும் அவரவர் வேலைகளில் பிஸியாக ஓடிக்கொண்டிருந்த சமயத்தில்தான் திடீரென கடந்த மே மாதம் இருவரும் பிரியப்போவதாக அறிவித்தனர். திருமணத்திற்கு முன்பே ஒரு நேர்க்காணலில் தங்களுடைய வேலைக்கும், உறவுக்கும் இடையே எந்த சம்பந்தமும் இல்லை என்று சைந்தவி தெளிவாக கூறியிருந்தார். அப்போதிருந்தே இருவரும் இந்த விஷயத்தில் மிகவும் தெளிவாக இருந்ததால் என்னவோ இன்றுவரை அதை பின்பற்றிவருகின்றனர்.

பெண்கள் யாரையும் சார்ந்திருக்கக்கூடாது!

கணவரை பிரிந்திருந்தாலும் தனது குழந்தையுடன் வசித்துவரும் சைந்தவி, ஆண், பெண் என யாராக இருந்தாலும் பிறரைப்பற்றி யோசிக்கக்கூடாது என்கிறார். சில வருடங்களுக்கு முன்புவரை பிறர் என்ன சொல்வார்களோ என்ன பேசுவார்களோ என்றுதான் யோசித்துக்கொண்டிருந்தேன். ஆனால் அவையெல்லாம் ஒன்றுமில்லை என்று புரிவதற்கே ஒரு வயது தேவைப்பட்டதாக சொல்கிறார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புவரை இப்படி யோசித்துக்கொண்டிருந்தாலும் இப்போது தனது ஸ்டைல், ட்ரெஸ்ஸிங் அனைத்தையும் மாற்றிக்கொண்டதாக கூறும் இவர், பெண்கள் எப்போதும் பொருளாதாரரீதியாக சுதந்திரமாக இருக்கவேண்டும் என்கிறார். பொருளாதாரத்துக்காகவோ அல்லது வேறு தேவைகளுக்காகவோ நாம் பிறரை சாரும்போது நம்மை நாமே இழந்துவிடுகிறோம்.


பெண்கள் சுதந்திரமாக இருக்கவேண்டும் என்று கூறும் சைந்தவி

நம்முடைய மகிழ்ச்சி எப்போதும் நம் கையில்தான் இருக்கவேண்டும் எனும் சைந்தவி, பல்வேறு நிகழ்ச்சிகள், பாடல்கள் என தனது கெரியரில் தொடர்ந்து கவனம் செலுத்திவருகிறார். இருந்தாலும் திருமண பிரிவிற்கு பின்னும் ஜி.வி பிரகாஷும் சைந்தவியும் சமீபத்திய இசை நிகழ்ச்சி ஒன்றில் ‘பிறை தேடும் இரவிலே’ பாடலை சேர்ந்து பாடிய தருணம் இவர்களுடைய ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது. கெரியரில் சேர்ந்து பணியாற்றுவதுபோன்று மீண்டும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒன்றுசேர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்