மேக்கப் இல்லாமல் ஓகே ஆன ரேகா

என்னை அறிமுகப்படுத்திய டைரக்டரை மறக்காமல் இருப்பதற்கு இது உதவுகிறது" என்று ரேகா கூறினார்.

Update: 2023-10-02 18:30 GMT
Click the Play button to listen to article

(07.09.1986 தேதியிட்ட 'ராணி' இதழில் வெளியானது.)

"சொல்லுவதெல்லாம் உண்மை" படத்தின் வெளிப்புற படப்பிடிப்பில் (கொடைக்கானல்) "கடலோரக் கவிதைகள்" ரேகாவை சந்தித்தபோது, குளிர்ச்சியாகக் காணப்பட்டார். உடம்பில் சதைப் பிடிப்பு ஏற்பட்டு வருவது தெரிந்தது!

"நான் சினிமாவில் நடிப்பேன் என்று கனவு கூட கண்டதில்லை. என்னை, ஊட்டியில் சந்தித்த கலைமணி, (கதாசிரியர்--தயாரிப்பாளர்) "நடிக்க ஆசை இருந்து, சென்னைக்கு வந்தால், என்னை வந்து பாருங்கள்" என்று முகவரியைத் தந்துவிட்டுப் போனார்.

எனக்கு சினிமா ஆசை வந்தது என்பதைவிட, என் அம்மாவுக்கு, நான் நடிகை ஆகவேண்டும் என்று நிரம்ப ஆசை. இருவரும் சென்னைக்கு வந்து கலைமணியைச் சந்தித்தோம்.

அதே நேரத்தில், பாரதிராஜா புதுக் கதாநாயகியை தேடிக்கொண்டு இருந்தார். அதனால், பாரதிராஜாவிடம் கலைமணி என்னை அறிமுகப்படுத்தினார். "மேக்கப்" போடாமலே என்னை படம் எடுத்தார்கள்.

சங்கரராவ் எடுத்த அந்தப் படமே, என்னை பாரதிராஜாவிடம் ஒகே ஆக்கியது.


இயக்குனர் பாரதிராஜா மற்றும் நடிகை ரேகா 

பாரதிராஜா படத்தில் நடித்து முடித்த கையோடு, பாலசந்தர் படத்தில் ("புன்னகை மன்னன் ") நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. மற்றும் "நம்ம ஊரு நல்ல ஊரு"; "இது ஒரு தொடர் கதை" ஆகியப் படங்களில் நடித்து வருகிறேன்" என்று மகிழ்ச்சியோடு சொன்னார். ரேகா.

"தமிழ் சினிமாவைப் பொருத்தமட்டில், ஒவ்வொரு சீசனிலும். ஒவ்வொரு நடிகைகள் புகழ் பெற்று இருக்கிறார்கள். எனக்கு இது நல்ல நேரம். கிடைக்கும் வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு புகழ் பெறுவேன்" என்றும் ரேகா கூறினார்!

சொந்தக் குரலில்

"வேறு மொழிப் படங்களில் நடிக்கிறீர்களா?" என்று நிருபர் கேட்டார்.

"தமிழில் நிலையான இடத்தைப் பிடித்த பிறகுதான், வேறு மொழிப் படங்களில் நடிப்பேன். அது மட்டும் அல்ல; நடிப்பில் நான் இன்னும் எவ்வளவோ பயிற்சி பெற வேண்டியுள்ளது. வீட்டில் சும்மா இருக்கும்பொழுது, நடிகைகள் சாவித்திரி, கே. ஆர். விஜயா, சுஜாதா நடித்தப் படங்களைப் போட்டுப் பார்த்து, நடிப்பில் பயிற்சி பெற்று வருகிறேன். எனக்கு சொந்தக் குரலில் பேசி நடிக்க ஆசையாக இருக்கிறது. அது, எந்தப் படத்தில் நிறைவேறப் போகிறதோ தெரியவில்லை" என்றார், ரேகா. ரேகாவை, வெறுமனே "ரேகா" என்பதைவிட, "கடலோரக் கவிதைகள்" ரேகா என்று அழைக்கும்பொழுது மகிழ்ச்சி ஏற்படுகிறதாம்!

"என்னை அறிமுகப்படுத்திய டைரக்டரை மறக்காமல் இருப்பதற்கு இது உதவுகிறது" என்று ரேகா கூறினார்.


"கடலோரக் கவிதைகள்" போஸ்டர் 

மறக்கமுடியாத நிகழ்ச்சி

"உங்களால் மறக்க முடியாத நிகழ்ச்சி எதுவும் உண்டா?" என்று நிருபர் கேட்டதும்.

சிரித்தார், ரேகா. பிறகு சொன்னார்: "ஒரு நிகழ்ச்சியை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது.

"கடலோரக் கவிதைகள்" படத்தில் நான் முதன்முதலில் நடிக்கவேண்டிய காட்சி சத்தியராஜை கன்னத்தில் அறையும் காட்சி! எனக்கு அவரை அறைய அச்சமாக இருந்தது. அதை கவனித்துக் கொண்டு இருந்த டைரக்டர் பாரதிராஜா, "என்னம்மா! தடவிக்கொண்டு இருக்கிறாய். இப்படி அறையவேண்டும்..." என்று என் கன்னத்தில் "பளார் " என்று, ஒன்று கொடுத்தார். அந்த வேகத்தில் நான், சத்தியராஜ் கன்னத்தில் அறைந்தேன். காட்சி ஓ.கே. ஆனது.

வேகமாக அறைந்து விட்டோமோ என்று, நான் பயந்துகொண்டிருந்த போது, "இப்படித்தான் அறைய வேண்டும். காட்சி இயற்கையாக அமைந்து விட்டது" என்று சத்தியராஜ் சொன்னார். இந்த நிகழ்ச்சியை என்னால் மறக்கவே முடியாது" என்று கூறினார், ரேகா.


ஆக்ரோஷமான காட்சியில் ரேகா

இனிமை உற்சாகம்

பேச்சு, "சொல்லுவதெல்லாம் உண்மை" பக்கம் திரும்பியது.

"விஜயகாந்துக்கு ஜோடியாக நடிக்கிறீர்களே, எப்படியிருக்கிறது?" என்று நிருபர் கேட்டார்.

"விஜயகாந்த் இனியவர். கலகலப்பாகப் பேசுகிறார். நன்றாக அரட்டை அடிக்கிறார். டைரக்டர் நேதாஜி, தயாரிப்பாளர் டி. சிவா, ஏ.சந்திரன் எல்லோரும் இளைஞர்கள். அவர்களோடு சேர்ந்து பணியாற்றுவதற்கு உற்சாகமாக இருக்கிறது” என்றார், ரேகா.

Tags:    

மேலும் செய்திகள்