இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

சென்னை, மும்பை அணிகளுக்கு அடுத்து அதிக ரசிகர்களை கொண்ட ஐபிஎல் அணி என்றால் அது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிதான். ஆனால் தன்னை தொடர்ந்து ஆதரித்துவரும் ரசிகர்களை ஏமாற்றி வருகிறது பெங்களூரு அணி. 16 வருடங்கள் நடந்திருக்கும் ஐபிஎல் தொடரில் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. இதனால் இம்முறையாவது கோப்பையை வென்றுவிடும் என்ற நம்பிக்கையில் இருந்த ரசிகர்களுக்கு பெங்களூரு அணி பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தனது முதல் 6 ஆட்டங்களில் 1 ஆட்டத்தில் மற்றும் வெற்றி பெற்று 5 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்து இருக்கிறது. இதனால் சமூக வலைதளங்களில் பெங்களூரு அணி ட்ரோல் செயப்பட்டு வருகிறது. பெங்களூரு அணியின் தொடர் தோல்விக்கு கரணம் என்ன? சரிவிலிருந்து அந்த அணி மீள வாய்ப்புள்ளதா? என்பது குறித்தெல்லாம் இக்கட்டுரையில் ஆராயலாம்.


வீரர் அல்சாரி ஜோசப்பை பெங்களூரு அணி நிர்வாகம் ஏலத்தில் எடுத்தபோது

பெங்களூரு அணியின் சொதப்பலான ஏல வியூகம் :

எப்போதும் போலவே இம்முறையும் ஏலத்தில் படுபயங்கரமாக சொதப்பியது பெங்களூரு. டிரேடிங் முறையில் மும்பையிடம் இருந்து ஆல்ரவுண்டர் கேமரூன் க்ரீனை வாங்கியது. அந்த அணிக்கு பலமே பேட்டிங்தான். ஏற்கனவே டூபிளெஸ்ஸிஸ், விராட் கோஹ்லி, மேக்ஸ்வெல் உள்ளிட்டோர் இருந்த போதிலும், மீண்டும் ஒரு பேட்டிங் ஆல்ரவுண்டர் க்ரீனை வாங்கி ஆச்சர்யப்படுத்தியது. அதுவும் ரூ. 17.50 கோடிக்கு க்ரீனை வாங்கியது. அதன்பின் ஏலத்தில் வெஸ்ட் இண்டீசின் அல்சாரி ஜோசப்பை ரூ. 11 கோடிக்கு வாங்கியது. பெங்களூரு பிட்ச் அதி வேகமான பந்து வீச்சாளர்களுக்கு ஒத்துழைக்காது என தெரிந்தும், 145 கி.மீ. வேகத்தில் பந்துவீசும் பந்துவீச்சாளரை ஏலத்தில் எடுத்தனர். நியூசிலாந்தின் லாக்கி பெர்குசனையும் எடுத்தனர். அவர் சுமார் 150 கி.மீ. வேகத்தில் பந்துவீசுவார். இப்படி மைதானத்திற்கு ஏற்றவாறு வீரர்களை எடுக்காதது அந்த அணிக்கு பெரும் பின்னடைவு.


பெங்களூரு அணியின் வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய காட்சிகள்

பேட்டிங்கை மட்டும் நம்பி ஏமாந்த பெங்களூரு :

பெங்களூரு அணியின் மிகப்பெரிய பலமே பேட்டிங்தான். ஆனால் இம்முறை விராட் கோஹ்லியை தவிர வேறு எவரும் பேட்டிங்கில் ஜொலிக்கவில்லை. கோஹ்லி மட்டுமே 5 ஆட்டங்களில் 316 ரன்கள் அடித்துள்ளார். அணியின் கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டும் அரைசதம் அடித்துள்ளார். அதை தவிர பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல், 6 ஆட்டங்களில் ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டும் 28 ரன்கள் அடித்தார். மற்ற அனைத்து ஆட்டங்களிலும் ஒற்றை இலக்கத்தில் அவுட் ஆகி வெளியேறினார். இறுதியில் தினேஷ் கார்த்திக் ஓரளவு நம்பிக்கை கொடுத்தாலும் மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் படுமோசமாக ஆடுகின்றனர். ஆரம்பத்தில் மோசமாக ஆடிய இந்தியாவின் ரஜத் படித்தார், கடந்த ஆட்டத்தில் அரைசதமடித்து ஃபார்மிற்கு வந்தார்.


மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்திவரும் பெங்களூரு அணி

தரமான பந்துவீச்சாளர்கள் இல்லை :

பெங்களூரு அணியின் மிகப்பெரிய பலவீனம் அவர்களது பந்துவீச்சுதான். சிராஜை சுற்றியே அந்த அணியின் பந்துவீச்சு கட்டமைக்கபட்டது. ஆனால் அணியின் முக்கியமான பந்து வீச்சாளரான சிராஜ், ரன்களை வாரி வழங்கி வருகிறார். அதுமட்டுமில்லாமல் பவர் பிளேயில் ஒவ்வொரு பிளேயரின் எகனாமியும் சராசரியாக 9-ஆக உள்ளது. அதுமட்டுமில்லாமல் சிறந்த சுழற்பந்துவீச்சாளர்கள் பெங்களூரு அணியில் இல்லை. மயங்க் டாகரையும், மஹிபால் லோம்ரரையும் நம்பிதான் இந்த அணியே இருக்கிறது. மேலும் அணியில் ஓரளவு நன்றாக பந்து வீச கூடியவர் என்றால் அது ரீஸ் டொப்லெ மட்டும்தான்.


விமர்சனங்களை சந்தித்துவரும் பெங்களூரு அணி நிர்வாகம் மற்றும் ரசிகர்கள்

சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கோபத்தை வாங்கிகொள்ளும் பெங்களூரு அணி நிர்வாகம் :

பெங்களூரு அணி மீது ரசிகர்களின் ஆதங்கம் என்னவென்றால் ஏலத்தில் சிறப்பான வீரர்களை எடுக்காததுதான். பெங்களூரு அணியில் இதற்கு முன் சிறப்பாக செயல்பட்ட சாஹல், வாஷிங்டன் சுந்தர், கே.எல் ராகுல் போன்ற வீரர்களை தக்கவைக்கவில்லை. பெங்களூரு அணிக்காக அதிக விக்கெட்களை எடுத்த சாஹலை ஏலத்தில் விட்டுவிட்டு கரண் ஷர்மாவை எடுத்தது. அதுமட்டுமில்லாமல் சிறப்பாக ஆடும் எந்த ஒரு கர்நாடக வீரரையும் எடுக்கவில்லை. விஜய் வைஷாக் மட்டுமே இப்பொழுது பெங்களூரு அணியில் இருக்கின்றார். இதனால் ஒட்டுமொத்த பெங்களூரு அணி ரசிகர்களின் கோபத்தையும் அந்த அணியின் நிர்வாகம் சந்தித்து வருகிறது. இனிவரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும். பெங்களூரு அணி தகுதி பெறுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Updated On 25 April 2024 7:02 AM GMT
ராணி

ராணி

Next Story