இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்களால் துக்க தினமாக கடைப்பிடிக்கப்படும் நாள்தான் புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி. ஆங்கிலத்தில் "Good Friday". கிறிஸ்தவர்கள் அல்லாத பெரும்பான்மையான மக்கள் இந்த நாளை மகிழ்ச்சியான நாள் என்றே நினைப்பார்கள். Good என்ற வார்த்தை வருவதால். ஆனால் இது ஒரு துயரமான நாள். Good என்பது இங்கு நல்லது என்பதை குறிக்காமல், புனிதம் என்ற அர்த்தத்தில் சொல்லப்படுகிறது. மக்களின் பாவங்களை நீக்கி, அவர்களை புனிதம் அடைய செய்வதற்காக ஏசு நாதர் உயிர் தியாகம் செய்ததால் "புனித வெள்ளி" என்று கடைபிடிக்கப்படுகிறது.

புனித வெள்ளி

கிறிஸ்தவர்களுக்கு மிக முக்கியமான நாள் புனித வெள்ளி. மனித குலத்தை பாவங்களில் இருந்து மீட்டு ரட்சிப்பதற்காக அவதரித்ததாக நம்பப்படும் ஏசு பிரான், சிலுவையில் அறையப்பட்டு மரணித்த நாள். ஏசுபிரான் கடைசி உணவு உண்ட இரவு (last supper) பெரிய வியாழன் என்ற பெயரில் கடைபிடிக்கப்படுகிறது. அதாவது ஏசு சிலுவையில் அறையப்படுவதற்கு முதல் நாள் தமது சீடர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்ட தினம். அடுத்த நாள் புனித வெள்ளி. புனித வெள்ளியிலிருந்து மூன்றாவது நாள் ஈஸ்டர்(ஏசு உயிர்த்தெழும் தினம்). எனவே கிறிஸ்தவர்களுக்கு பெரிய வியாழனில் இருந்து தொடங்கும் கடும் துக்க காலம், ஏசுபிரான் மீண்டும் உயிர்த்தெழும்வரை நீடிக்கும்.

எல்லா கிறிஸ்தவ பண்டிகைகளையும் போல, புனித வெள்ளி ஒவ்வொரு ஆண்டும் ஒரே நாளில் வருவதில்லை. தேதி மாறிக்கொண்டே இருக்கும். வசந்த உத்தராயணத்தின் முதல் பவுர்ணமிக்கு பிறகு வரும் வெள்ளிக்கிழமையே புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் சந்திர நாட்காட்டியின் படி கடைபிடிக்கப்படுகிறது.


மானிட இனத்தின் பாவங்களைப் போக்க தனது இன்னுயிரை தியாகம் செய்த ஏசு கிறிஸ்து

சிலுவை தண்டனையை மனமுவந்து ஏற்ற தேவன்

வெறும் 30 வெள்ளிக் காசுகளுக்காக யூதாஸ் தன்னை காட்டிக்கொடுத்த போதும், அதை புன்முறுவலுடன் பொறுத்துக் கொண்டார் ஏசு நாதர். யூதாஸால் காட்டிக் கொடுக்கப்பட்ட ஏசு நாதரை, பிலாத்து மன்னனிடம் கொண்டு சென்று நிறுத்தினர். பிலாத்து மன்னன் விசாரணையை நடத்தினான். விசாரணையின் முடிவில், ஏசுவிடம் ஒரு குற்றமும் இருப்பதாக தெரியவில்லையே என்றான் மன்னன். ஆனால் அவருக்கு எதிராக கூடியிருந்த கூட்டமோ, ஏசு நாதரை சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும். சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொடும் கைதியான பாரபாஸை விடுவிக்க வேண்டும் என்று கூச்சலிட்டது. வேறு வழியின்றி, ஏசுவை சிலுவையில் அறைய உத்தரவிட்டான் பிலாத்து.

இதையடுத்து கல்வாரி மலையில் உள்ள கொல்கொதா என்ற சிகரத்திற்குக் கொண்டு சென்று ஏசுவை சிலுவையில் அறைய உத்தரவிடப்பட்டது. பிலாத்து மன்னனின் அரண்மனையிலிருந்து ஏசு நாதரை சிலுவையை சுமக்க வைத்து வழியெங்கும் அவரை துன்புறுத்தியபடியே கொண்டு சென்றனர் காவலர்கள். அப்போது வீதியெங்கும் திரண்டிருந்த மக்கள், ஏசு நாதர் படும்பாட்டைக் கண்டு கண்ணீர் விட்டனர்.

கொல்கொதா மலைக்கு கொண்டு செல்லப்பட்ட ஏசு நாதரை, காவலர்கள், சவுக்கால் அடித்தும், தலையில் முள் கிரீடம் சூட்டியும், காரி உமிழ்ந்தும், கன்னத்தில் அடித்தும், அவமானப்படுத்தியும் ஆனந்தம் அடைந்தனர். ஆனால் அதனை தனது பெரும் மனதால், புன்முறுவலுடன் பொறுத்துக் கொண்டார் ஏசு. பின்னர் ஏசுநாதரை காவலர்கள் சிலுவையில் அறைந்தனர்.


யூதாஸால் காட்டிக் கொடுக்கப்பட்டு கல்வாரி மலையில் சிலுவையை சுமந்து சென்ற ஏசு

சிலுவையில் அறைந்தபோது இருண்ட உலகம்

சிலுவையில் ஏசுநாதர் அறையப்பட்ட முதல் 3 மணி நேரத்திற்கு உலகை இருள் சூழ்ந்ததாக பைபிள் கூறுகிறது. இதனை நினைவு கூறும் விதத்தில், இந்த 3 மணி நேரத்தை மையமாகக் கொண்டு, புனித வெள்ளியன்று மும்மணி தியானம் என்ற பிரார்த்தனையும், சிறப்பு திருப்பலி நிகழ்ச்சியும் தேவாலயங்களில் நடைபெறும். மேலும், கத்தோலிக்கர்கள் இந்நாளில் நோன்பிருந்து, சிறிது நேரம் மவுன விரதம் இருந்து, வெள்ளாடை அணிந்து சிலுவைப்பாதையில் பங்கெடுப்பது வழக்கமாகும். அத்துடன், தாங்கள் செய்த பாவங்களுக்காக சிலுவையை சுமந்து ஏசு பட்ட பாடுகளை காண சகிக்க முடியாததால், இனி பாவங்களே செய்யப்போவதில்லை என்று, புனித வெள்ளியில் உறுதியேற்றுக்கொள்வதாகவும் கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர்.

சிலுவையில் ஏசு கூறிய 7 இறுதி வாசகங்கள்

ஏசு சிலுவையில் அறையப்பட்டபோது 7 வாசகங்களை சொன்னதாக பைபிள் கூறுகிறது. புனித வெள்ளியன்று அந்த 7 வாசகங்களை தேவாலயங்களில் பிரசங்கிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

சிலுவையில் முதல் வாசகம்

“பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியா திருக்கிறார்களே” என்றார் ஏசு. சிறிய குழந்தை தெரியாமல் தவறு செய்ததைப்போல, தம்மை சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்தார் ஏசு. அவர்கள் செய்கிறது இன்னதென்று அறியாமல் செய்துவிட்டார்கள் என்று பிதாவிடம் மன்னிக்க வேண்டும் என்று கூறினார்.

சிலுவையில் இரண்டாம் வாசகம்

“இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசிலுருப்பாய்” என்றார் ஏசு. “இரட்சிப்பின் வார்த்தை” என்று இது அழைக்கப்படுகிறது. சொர்க்கத்திற்கு நேரடி பயணமாக கருதப்படுகிறது.


சிலுவையில் அறையப்பட்டு ஏசு உயிர்நீத்தபோது இருண்ட உலகம்

சிலுவையில் மூன்றாம் வாசகம்

ஏசு தம்முடைய தாயை நோக்கி, “ஸ்திரீயே, அதோ உன் மகன் என்றார். பின், தான் நேசித்த சீடனை நோக்கி, அதோ உன் தாய் என்றார்”. “உறவின் வார்த்தை” என்று குறிப்பிடப்படும் இது, ஏசு தனது தாயான மரியாவை, தான் நேசித்த சீடரின் பராமரிப்பில் ஒப்படைக்கிறார் என்பது அர்த்தம்.

சிலுவையில் நான்காம் வாசகம்

“ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்” ஏசு. “என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்” என்று அர்த்தம். கடவுள் கொடுத்துள்ள வாக்குத் தத்தங்கள் எல்லாவற்றிலும் மிகவும் மேலான வாக்காக, “நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” என்கிற வாக்குதான் பார்க்கப்படுகிறது. நம்மில் ஒருவரையும் கைவிடாமலும், விலகாமலும் இருக்க வேண்டும் என்பதால்தான், கடவுள், ஏசுவைச் சிலுவையில் கைவிட்டார் என சொல்லப்படுகிறது.

சிலுவையில் ஐந்தாம் வாசகம்

“தாகமாயிருக்கிறேன்”. தாகம் என்றால் சாதாரணமான தாகம் அல்ல என்றும், அக்கினியின் மத்தியில் இருக்கிற ஒரு மனிதனுக்கு ஏற்படும் மரண தாகம் போன்றது என்றும் வேத வல்லுநர்கள் கூறுகிறார்கள். இது ஏசு அனுபவித்த நரக வேதனையைக் குறிக்கிறது.

சிலுவையில் ஆறாம் வாசகம்

“முடிந்தது” என்றார். “முடிந்தது” என்ற வார்த்தைக்கு பின்னால் பல அர்த்தங்கள் அடங்கியிருக்கின்றன. ஏசுவின் ஆவி, ஆத்மா, சரீரத்தில் பட்ட பாடுகள் முடிந்தன. ஏசுவின் உலக வாழ்க்கை முடிந்தது. மனிதக்குல மீட்பிற்காக அவர் செய்த எல்லாம் முடிந்தது.


ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தபோது பிரகாசித்த உலகம்

சிலுவையில் ஏழாம் வாசகம்

ஏழாம் மற்றும் இறுதி வாசகமாக, “பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்” என்று உயிர் போகிற வேளையில் சத்தமாக கூறினார் ஏசு. இப்படிச் சொல்லி ஜீவனை விட்டார். அதவாது அவர்கள் சாகடித்ததால் ஏசு சாகவில்லை. அவரே தம் ஜீவனை ஒப்புக்கொடுத்தார் என்பதை இந்த வாசகம் காட்டுகிறது.

கொல்லப்பட்ட 3-ம் நாள் உயிர்த்தெழுந்த ஏசு பிரான் - ஈஸ்டர்

மானிட இனத்தின் பாவங்களைப் போக்குவதற்காக, சிலுவையில் தனது உயிரையே தியாகம் செய்த ஏசு கிறிஸ்து, மீண்டும் உயிா்த்து வந்த 3-ம் நாள் ஈஸ்டராக கொண்டாடப்படுகிறது. தீமையையும், மரணத்தையும் வென்ற கடவுளின் உண்மையான மகன் என்பதை ஏசு பெருமானின் உயிா்ப்பு உணா்த்துகிறது. தவக்காலத்தின் முடிவையும், ஏசு பிரானின் பாடுகளின் முடிவையும் ஈஸ்டா் குறிக்கிறது.

Updated On
ராணி

ராணி

Next Story