திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் களைகட்டத் தொடங்கியுள்ளன.

சிவபெருமானானவர் திருமால் மற்றும் பிரம்மாவுக்கு, கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில், அக்னி வடிவமாக காட்சியளித்தார். இந்த நாளே ஒவ்வொரு ஆண்டும் தீபத்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், பஞ்சபூத தலங்களில் ஒன்றாகவும், அக்னி தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலிலும் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழா, வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, கடந்த 17-ஆம் தேதி அன்று கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் காலை, மாலை என இருவேளையும் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மேலும் உற்சவர்கள் ஊர்வலங்களும், மூன்று நாள் தெப்ப திருவிழாவும், அதனையடுத்து சண்டிகேஸ்வர் உற்சவமும் நடைபெறுகிறது.


இந்த நிலையில், வரும் 22ஆம் தேதி பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலாவும், 23 ஆம் தேதி காலை மகா தேரோட்டமும் நடைபெறவுள்ளது. இந்த மகா தேரோட்டத்தைக் காண தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் அங்கு காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் வரும் 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு ஏற்றப்பட உள்ளது. அதனைத்தொடர்ந்து, அன்று மாலை 6 மணிக்கு 2668 அடி உயரம் கொண்ட திருவண்ணாமலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இந்த மகா தீபத்தை ஏற்ற 3,500 கிலோ நெய், ஆயிரம் மீட்டர் திரி பயன்படுத்தப்படுகிறது. இந்த நிகழ்விலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். கடந்த ஆண்டு 25 லட்சம் பேர் கலந்துகொண்ட நிலையில், இந்த ஆண்டு சுமார் 40 லட்சம் பேர் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சிறப்பு பேருந்துகள்

திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றும் நிகழ்வு அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அதுமட்டுமின்றி அன்று பவுர்ணமி தினம் என்பதாலும் கிரிவலம் செல்வதற்காக பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும். இதனால் பக்தர்களின் வசதிக்காக தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கும் ஏ.சி. படுக்கை வசதிகள் கொண்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுதவிர நெல்லை, தூத்துக்குடி, மதுரை, கோவை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும் ஏ.சி. படுக்கை வசதிகள் கொண்ட பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.


டாஸ்மாக் கடைகள் அடைப்பு

திருவண்ணாமலை தீபத்திருவிழாவினை முன்னிட்டு, பாதுகாப்பு நலன்களுக்காகவும், அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கவும் 25ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையிலான மூன்று நாட்களும் திருவண்ணாமலை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்துள்ளார். இதுதவிர திருவண்ணாமலை நகரப்பகுதிகளில் இயங்கிவரும் தனியார் ஹோட்டல்களில் செயல்பட்டுவரும் மதுபான கூடங்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அங்காடி ஆகியவையும் செயல்படாது என அவர் தெரிவித்துள்ளார்.

Updated On 21 Nov 2023 12:31 PM GMT
ராணி

ராணி

Next Story