இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தீபமானது இருளை நீக்கி ஒளியை தருவது போல, நமது வாழ்க்கையில் இருக்கும் இருளான காரியங்கள் நீங்கி சந்தோஷமும் மகிழ்ச்சியும் பெருகி இன்பவாழ்வு வாழ வேண்டும் என்பதற்காக இன்முகத்துடன் மாதம் முழுவதும் ஒளி விளக்கு ஏற்றப்படும் தமிழ் மாதம் தான் கார்த்திகை. மாதம் முழுவதும் தீபங்கள் ஏற்றப்படவில்லை என்றாலும் திருநாளாகிய திருக்கார்த்திகை தீபத்தன்று வீடு முழுவதும் தீபங்கள் ஒளியூட்டப்படுகின்றன. இந்த நன்னாள் வருடா வருடம் கார்த்திகை நட்சத்திர நாளில் பௌர்ணமி அன்று கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டு கார்த்திகை தீபமானது நவம்பர் 26 ஆம் தேதி வருகிறது. கார்த்திகை தீபம் கொண்டாடப்படுவதற்கு பின்னால் இருக்கும் வரலாறு என்ன? தீப நாளின் சிறப்புகள் என்ன? மூன்று நாள் திருநாளில் தீபம் ஏற்றும் முறை எப்படி? என்று இந்த கட்டுரையில் காண்போம்.

கார்த்திகை தீபம் வரலாறு

படைத்த கடவுளான பிரம்மாவுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவிற்கும் இடையில் யார் பெரியவர் என்ற சண்டை மூண்டபோது சிவபெருமான் தோன்றி ‘என் அடிமுடியை யார் முதலில் பார்க்கிறீர்களோ அவர்கள் தான் பெரியவர்’ என்று கூறினார். பரம்பொருளான சிவனின் அடிமுடியை யாராலும் அறிய முடியாது என்பதை அறிந்திருந்தும் பிரம்மனும், விஷ்ணுவும் தங்களில் யார் பெரியவர் என்பதை நிரூபிக்க தொலை தூரம் பயணித்தார்கள்.

விஷ்ணு பகவான் வராக அவதாரம் கொண்டு பூலோகத்திற்கு சென்று அலைந்து திரிந்தும், பிரம்மர் அன்னப்பறவை அவதாரம் கொண்டு விண்ணுலகிற்கு சென்றும் அடிமுடியை தேடினார்கள். இப்படி பல நாட்கள் தேடியும் திருமால் தன்னால் சிவனின் அடிமுடியை காண இயலவில்லை என்று தனது தோல்வியை ஒப்புக் கொண்டார். ஆனால், பிரம்மனோ தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் சிவனின் தலையில் இருந்து விழுந்த தாழம் பூவிடம், தான் சிவனின் அடிமுடியை பார்த்ததாக பொய் சாட்சி கூற வைத்தார்.


பிரம்மா மற்றும் விஷ்ணு

இது பொய் என்று அறிந்த சிவபெருமான் கடுங்கோபம் கொண்டு ‘இனி பூலோகத்தில் பிரம்மனுக்கென்று எந்த ஒரு ஆலயமும் அமைக்க கூடாது என்றும், இனி தாழம்பூ கொண்டு தன்னை வழிபட கூடாது’ என்றும் சாபமிட்டார். இதனால் பிரம்மனுக்கென்று தனி ஆலயம் அமைக்கப்படாமலும், சிவனுக்கு தாழம்பூ கொண்டு வழிபாடு நடத்தப்படாமலும் இருந்து வந்தது. பிரம்மனாலும், திருமாலாலும் சிவனின் அடிமுடியை பார்க்க முடியாததால், அவர்களுக்காக சிவன் ஜோதி பிழம்பாக காட்சியளித்தார். ஜோதியாக விளங்கிய சிவபெருமானை மக்கள் அனைவரும் பார்த்து பரவசம் அடைய வேண்டும் என்று பிரம்மனும், திருமாலும் முறையிடவே சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலையில் ஜோதியாக எழுந்தருளினார்.


ஜோதிப் பிழம்பாக காட்சியளிக்கும் சிவபெருமான்

இப்படி சிவபெருமான் ஜோதியாக காட்சியளித்த நாளே திருவண்ணாமலையில் ஜோதி விளக்கேற்றியும், வீட்டில் தீபம் ஏற்றியும் வழிபடப்படுகிறது. பிரம்ம தேவரும், தாழம்பூவும் தங்கள் தவறுகளை உணர்ந்து சிவனின் சொந்த ஊரான உத்தரகோசமங்கை திருத்தலத்தில் பல வருடங்கள் தவம் இருந்தனர். இவர்களின் தவத்தை ஏற்று மனமிறங்கிய சிவபெருமான் இருவரையும் மன்னித்து அவர்களின் சாபங்களையும் நீக்கினார். இதன்பிறகே உத்தரகோசமங்கை திருத்தலத்தில் சிவனுக்கு தாழம்பூ வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. அதேபோன்று பூலோகத்தில் பிரம்மனுக்கென்று தனி ஆலயமும் அமைக்கப்பட்டது.

கார்த்திகையில் தீபம் ஏற்றுவதற்கான அறிவியல் பின்னணி

குளிரும் மழையும் ஒரு சேர்ந்த இந்த ஐப்பசி மாதத்தில் கொசு மற்றும் பூச்சிகளின் நடமாட்டமும் இனப்பெருக்கமும் அதிகரித்திருக்கும். அந்த பூச்சிகளை இந்த தீப ஒளியானது கவர்ந்து, தீப நெடியில் பூச்சிகள் அழியும் என்பதற்காகவே இம்மாதம் முழுவதும் தீபம் ஏற்றப்படுகிறது. இதுவே கார்த்திகை மாதத்தில் தீபம் ஏற்றுவதற்கான அறிவியல் காரணமாகும்.

தீப நாள் சிறப்புகள்

பொதுவாகவே விளக்கேற்றுவது நல்லது என்றும், வீட்டில் விளக்கேற்றினால் லட்சுமி கடாட்சமாக இருக்கும் என்றும் சொல்வதுண்டு. அதில் குறிப்பாக குத்துவிளக்கில் இருக்கும் 5 முகங்கள் பெண்களின் மன உறுதி, நிதானம், சமயோஜித புத்தி, சகிப்புத்தன்மை, அன்பு போன்றவற்றை குறிக்கிறது. சிவபெருமானின் துணைவி பார்வதி தேவி கார்த்திகை மாதத்தில் விரதம் இருந்து சிவனின் இடது பாகத்தில் ஐக்கியமானதும், சிவசக்தி அர்த்தநாரீஸ்வரராக ஸ்வரூபமானதும் தீப திருநாளன்று தான்.


கார்த்திகை தீப விளக்குகள்

நம் வீட்டில் விளக்குகள் ஏற்றுவதன் மூலம் போட்டி, பொறாமை, வஞ்சக எண்ணங்கள் எல்லாம் அகலும் என்றும், திருவண்ணமலையில் அண்ணாமலையாருக்கு ஏற்றும் தீபத்தை பார்ப்பவர்களுக்கு வழக்கத்தை விட அதிக புண்ணியம் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது. மேலும் இந்த திருநாளன்றுதான் திருமால் துளசியை மணந்து தனது திருமார்பில் அணிந்து கொண்டாராம்.

தீபத்தின் மூன்று நாட்கள்

இந்த தீப திருநாள் ஒரு நாள் மட்டுமல்லாமல் மூன்று நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. முதல் நாள் பரணி தீபம், இரண்டாம் நாள் திருக்கார்த்திகை தீபம் மற்றும் மூன்றாம் நாள் ஏற்றக்கூடிய தீபம் பாஞ்சராத்திர தீபமாகும். பரணி தீபம் என்பது கார்த்திகை தீபத்தின் முதல் நாள் ஆகும். இந்த நாளில் பூஜை அறையில் 5 விளக்குகள் ஏற்றப்பட வேண்டும். இந்த 5 விளக்குகளும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவை, நாட்டுக்கும் மக்களுக்கும் எந்த ஒரு தீய விளைவையும் ஏற்படுத்தாமல் அளவோடு இருக்க வேண்டும் என்று பஞ்சபூதங்களை சாந்தம் செய்யவே ஏற்றப்படுகிறது. பரணி தீபமானது எம தீபம் என்றும் அழைக்கப்படுகிறது. இதை கார்த்திகை தீபத்தின் முதல் நாளான பரணி நட்சத்திர நாளன்று மாலை வேளையில் பிரதோஷ நேரமான 4.30 - 6 மணிக்கு, 5 புதிய மண் அகல்கள் வைத்து நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு 5 விளக்கையும் வட்டமாக ஏற்ற வேண்டும். அதிலும் முக்கியமாக முதலில் ஏற்றும் தீபத்தை மட்டும் வத்திகுச்சி பயன்படுத்தி ஏற்றி மற்ற 4 விளக்குகளையும் முதலில் ஏற்றிய விளக்கை வைத்து ஏற்ற வேண்டும். இந்த தீபம் எமலோகத்திலிருக்கும் எமன் நம் பித்ருக்களை தொந்தரவு செய்யாமல் இருக்க அவரை சாந்தப்படுத்துவதாகவும், நம் பித்ருக்களை சந்தோஷப்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது. எனவே இது எம தீபம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விளக்கை ஏற்றுவதன் மூலம் நம் பித்ருக்கள் நம்மை ஆசீர்வதிப்பார்கள் என்றும் நம்பப்படுகிறது.


தீபத்தின் மூன்று நாட்களில் ஏற்றப்படும் விளக்குகள்

இரண்டாம் நாள் விளக்கு ஏற்றுவது கார்த்திகை தீபமாகும். இது கார்த்திகையும் பௌர்ணமியும் ஒருசேர இணையும் நாளில் மகா தீபம் ஏற்றும் திருநாளாகும். திருவண்ணாமலையில் சரியாக மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றிய பின்னர் நாம் நம் வீடுகளில் குறைந்தபட்சம் 27 விளக்குகள் ஏற்ற வேண்டும். இந்த 27 விளக்குகளும் 27 நட்சத்திரங்களை குறிக்கின்றன. அதுவும் முதலில் வீட்டு வாசலில் உள்ள தீபத்தையே ஏற்ற வேண்டும். பின்னர் அதை பயன்படுத்தி மற்ற 26 தீபங்களை ஏற்ற வேண்டும். இந்த தீபங்களை நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமையலறை, குளியலறை, படுக்கை அறை என்று தலைவாசல் இருக்கும் இடங்களிலும் வீட்டின் அனைத்து இடங்களிலும் ஏற்ற வேண்டும்.

கார்த்திகை தீபத்தின் அடுத்த நாள் ஏற்றப்படும் விளக்கு பாஞ்சராத்திர விளக்காகும். இத்தீபம் சிவனுக்கும் முருகனுக்கும் ஏற்றப்படுகிறது. இந்நாளிலும் முதல் நாளை போலவே 5 தீபங்கள் ஏற்றப்படும். இது விஷ்ணு தீபம் அல்லது மோட்ச தீபம் என்றும் அழைக்கப்படுவதுண்டு. இந்த தீபத்தை ஏற்றி சொக்கப்பனை கொளுத்துவது வழக்கமான ஒன்றாகும்.


திருவண்ணாமலை ஜோதி

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்

பஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபமானது 10 நாள் விழாவாக கோலாகலமாக நடைபெறும். கார்த்திகை மாதம் முதல் நாளில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் நடைபெறும். காலையிலும் இரவிலும் அருணாச்சலேஸ்வரர் வெள்ளி வாகனத்தில் உலா வருவார். அவரை தொடர்ந்து மற்ற பஞ்சமூர்த்திகளான கணபதி, முருகன், சண்டீஸ்வரர் மற்றும் பார்வதி தேவியும் உலா வருவார்கள். இரண்டாம் நாளில் இந்திரனின் தேரில் பஞ்சமூர்த்திகள் உலா வருவார்கள். மூன்றாம் நாளில் 1008 சங்காபிஷேகம் நடத்தி பஞ்சமூர்த்திகள் சிம்ம வாகனத்தில் கம்பீரமாக ஊர்வலம் வருவார்கள். நான்காம் நாளில் காமதேனு வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் உலா வருவார்கள். கார்த்திகை தீப திருவிழாவின் ஐந்தாம் நாளில் காலையில் கலச பூஜை நடத்தப்பட்டு இரவில் 25 அடி உயரமுள்ள வெள்ளி ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் உலா வருவதுண்டு. ஆறாம் நாளில் காலை மற்றும் இரவில் 63 நாயன்மார்கள் ஊர்வலத்துடன் வெள்ளி ரதத்தில் பஞ்சமூர்த்திகளும் உலா வருவார்கள்.


கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலையில் ஏற்றப்படும் பரணி தீபம்

ஏழாம் நாளில் மகா ரதத்தில் பஞ்சமூர்த்திகள் கம்பீரமான காட்சியில் பிரமாண்டமாக வீதியுலா வருவார்கள். எட்டாம் நாள் காலையில் பெரிய குதிரை வாகனத்திலும் இரவில் ஸ்ரீ பிச்சாண்டவர் உற்சவ ஊர்வல புறப்பாடும் நடைபெறும். ஒன்பதாம் நாள் இரவில் கைலாச வாகன புறப்பாடாகும். பத்தாம் நாளான கார்த்திகை தீபத்தன்று அதிகாலை 4 மணியளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டு மதியம் ஸ்ரீ சுப்பிரமணியர் பிரம்ம தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி திருவிழா நடத்தப்பட்டு மாலையில் சுமார் 2668 அடி உயர மலையில் கிட்டத்தட்ட 3500 கிலோ நெய் பயன்படுத்தப்பட்டு சரியாக 6 மணியளவில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இத்தகு சிறப்பு பெற்ற கார்த்திகை தீப நாளில் தீபம் ஏற்றுவதன் மூலம் அண்ணாமலையான் நமது பிரச்சினைகளையும், துயரங்களையும் நீக்கி, நாம் எண்ணுவதையும் எண்ணாததற்கு மேலானதையும் அருளி செய்து செல்வ செழிப்புடன் வாழ வைப்பார்.

Updated On 27 Nov 2023 6:35 PM GMT
ராணி

ராணி

Next Story