இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கேக் இல்லாமல் இன்றைய தலைமுறையினரின் எந்த கொண்டாட்டமும் முழுமை பெறுவது இல்லை. பிறந்தநாள், நிச்சயத்தார்த்தம், திருமணம், வளைகாப்பு, அலுவலக நிகழ்ச்சி என எந்த சந்தோஷ நிகழ்வாக இருந்தாலும், கேக் இல்லாமல் நடைபெறாது என்ற அளவுக்கு இன்றைய காலகட்டம் மாறியுள்ளது. அதிலும் குழந்தைகள் பிறந்தநாள் என்றால் சொல்லவே தேவையில்லை. விதவிதமான ஷேப்களில், வகை வகையான ஃபேளவர்களில், கிலோ கணக்கில் ஆர்டர் செய்து குடும்பத்துடன் வெட்டி, சுவைத்து மகிழ்கிறோம். குழந்தைகளின் முதல் பிறந்தநாளுக்கு அவர்களுக்கு அறிமுகமாகும் இந்த கேக்குகள், சிறிது காலத்தில் அந்த குழந்தைகளை, அதன் நாவூறும் சுவைக்கு அடிமைப்படுத்திவிடுகின்றன. சாஃப்டாக, அதீத இனிப்புடன், நாவில் வைத்தவுடன் வழுக்கி செல்லும் கிரீம் என கேக் சுவை, குழந்தைகளை கட்டிப்போட்டு விடுகிறது. இதனால் குழந்தைகள் அவ்வப்போது விரும்பி சாப்பிடும் உணவு பட்டியலில் கேக் சேர்ந்து விடுகிறது. குழந்தைகள் ஆசையாக கேட்டு, கேக்கை ருசித்து சாப்பிடும் அழகே தனி. ஆனால், அந்த கேக்கே, குழந்தைகளின் உயிருக்கு உலை வைக்கும் என்ற அதிர்ச்சி தகவல் நம்மை பதறவைக்கிறது. இதுகுறித்த விரிவான தகவலை இந்த பதிவில் காண்போம்.

கேக் சாப்பிட்டதால் அண்மையில் நடந்த விபரீதங்கள்

அண்மையில், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பெண் குழந்தை ஒன்று, தனது பிறந்தநாளுக்கு வெட்டி சாப்பிட்ட கேக்கே, அதன் உயிரை பலிவாங்கிய நிலையில், தமிழகத்தின் தென்காசியில், கெட்டுப்போன கேக்கை சாப்பிட்ட 2 குழந்தைகள் கடும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது. மேலும் ஹோம் மேட் சாக்லெட் போன்றவற்றுக்கு பெயர்போன ஊட்டியிலும் கூட, தேயிலை தோட்ட தொழிலாளி ஒருவர், வேலை முடித்து மாலை வீட்டுக்கு சென்ற போது பிரபல பேக்கரி ஒன்றில் வாங்கிச்சென்ற கேக்கை சாப்பிட்ட அவரது 2 குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிகழ்வும் நடந்துள்ளது. இப்படி பேக்கரி அயிட்டங்களில் கேக் மட்டுமல்ல, இன்னும் பிற காலாவதியான தின்பண்டங்கள், செயற்கை நிறமிகள் அதிகம் கலக்கப்பட்ட உணவுகள் உள்ளிட்டவற்றை சாப்பிட்டு குழந்தைகள் உடல்நலன் பாதிக்கப்படுவது அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருக்கிறது.


நடைபெறப்போகும் விபரீதத்தை அறியாமல் ஆசை ஆசையாக கேக் ஊட்டிக்கொண்ட சகோதரிகள்

குழந்தையின் உயிரை பலி வாங்கிய பிறந்தநாள் கேக்

பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவை சேர்ந்த 10 வயது பெண் குழந்தையின் பிறந்தநாளையொட்டி, அதாலத் பஜார் என்ற பகுதியில் உள்ள பேக்கரியில் இருந்து ஆன்லைனில் கேக்கை ஆர்டர் செய்து வரவழைத்துள்ளனர். கேக், மாலை 6 மணி அளவில் வந்ததை அடுத்து, குடும்பத்தினர் சுமார் 7 மணிக்கு கேக் வெட்டி உள்ளனர். பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிறுமி உள்பட குடும்பத்தினர் அனைவருமே கேக்கை சாப்பிட்டுள்ளனர். இரவு 10 மணி அளவில் குடும்பத்தினர் அனைவருக்குமே உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. சிறுமியின் தாய், தந்தை ஆகியோருக்கு உடல் உபாதை ஏற்பட்டிருக்கிறது. சிறுமியோ, தனக்கு அதிகம் தாகம் எடுப்பதாகவும், வாய் வறட்சியாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார். அதன் பிறகு உறங்க சென்றிருக்கிறார். மறுநாள் காலையில், சிறுமியின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, அவரை தூக்கிக்கொண்டு பெற்றோர் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். ஈசிஜி உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, ஆக்சிஜன் மாஸ்க் உதவியுடன் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். அதே பிறந்தநாள் கேக்கை சாப்பிட்ட சிறுமியின் சகோதரிகள் இருவர், அன்று இரவே வாந்தியெடுத்துள்ளனர். இதனால் அவர்களுக்கு ஒன்றும் ஆகவில்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் சிறுமியின் உயிரிழப்புக்கு, அவர் சாப்பிட்ட கேக்கே காரணம் என்றும், அதில் கலந்திருந்த ஏதோ ஒரு பொருள் விஷமாக மாறி உயிரை பறித்திருப்பதாகவும், பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, அந்த பேக்கரி உரிமையாளர் மீது பாேலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்காெண்டு வருகின்றனர்.

வைரல் வீடியோ

இதனிடையே உயிரிழந்த சிறுமியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகிவுள்ளது. வீடியோவில் சிறுமி, முகம் நிறைய புன்னகையுடன் தனது பெற்றோர் மற்றும் சகோதரிகளுக்கு கேக் ஊட்டி ஆனந்தப்படும் காட்சி இடம் பெற்றிருக்கிறது. மரணிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அந்த பெண் குழந்தை சிரித்துக்கொண்டிருக்கும் வீடியோ காண்போரை சோகத்தில் ஆழ்த்துகிறது.


உயிரிழப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன் தந்தைக்கு கேக் ஊட்டி மகிழ்ந்த சிறுமி

தென்காசி சம்பவம்

பாவூர்சத்திரம் அருகே சிவநாடானுர் கிராமத்தைச் சேர்ந்த மோகன் என்பவர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பழக்கடை வைத்துள்ளார். அவருக்கு 14, 13 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், அண்மையில் ஊருக்கு சென்ற அவர், மீண்டும் சென்னைக்கு திரும்ப பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் வந்தபோது, அங்கு எதிரே உள்ள பேக்கரியில் தனது மூத்த மகளின் பிறந்தநாளுக்காக கேக் வாங்கி கொடுத்துவிட்டுள்ளார். மறுநாள் காலையிலேயே சிறுமிகள் இருவரும், தந்தை வாங்கிக்கொடுத்த பிறந்தநாள் கேக்கை வெட்டி சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரம் கழித்து அந்த கேக்கின் உள்ளே பார்த்தபோது கேக் முற்றிலும் கெட்டுப்போய் இருந்ததை கண்ட, சிறுமிகளின் தாய் அதிர்ச்சி அடைந்தார். அதற்குள் சிறுமிகள் இருவருக்கும் உடல்நலம் பாதிக்கப்படவே, பாவூர்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சென்னை வந்த தனது கணவர் மோகனுக்கு தொலைபேசியில் அழைத்து மனைவி தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக கேக் வாங்கிய பேக்கரிக்கு ஃபோன் செய்த மோகன், அங்கு வேலை செய்பவரிடம் தனது குழந்தைகள் இருவரும் கேக் சாப்பிட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள சம்பவத்தை கூறி ஆதங்கப்பட்டுள்ளார். ஆனால் பேக்கரி நபரோ, "இது குறித்து வெளியில் யாரிடமும் சொல்லி விடாதீர்கள், கடைக்கும் நேரில் வந்து சத்தம் போட்டு விடாதீர்கள், பேக்கரிக்கு கெட்ட பெயர் வந்துவிடும்" என்று கூறியுள்ளார். அத்துடன் இந்த தவறுக்கு "எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன்" என்றும் மன்றாடியுள்ளார்.

அந்த ஆடியோ பதிவு மற்றும் கெட்டுப்போன கேக்கின் புகைப்படங்களுடன் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் மோகன் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, அந்த பேக்கரிக்கு விரைந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், பேக்கரியில் இருந்த காலவதியான தின்பண்டங்கள், கலப்பட உணவுகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றியதுடன், அபராதம் விதித்து எச்சரிக்கை செய்தனர்.


பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் எதிரே உள்ள பேக்கரியில் விற்பனை செய்யப்பட்ட கெட்டுப்போன கேக்

இதேபோன்று, ஊட்டியிலும் கெட்டுப்போன கேக்கை விற்பனை செய்த பேக்கரி மீது, பாதிக்கப்பட்ட தேயிலை தொழிலாளி அளித்த புகாரின் பேரில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துவரும்போதிலும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகியே வரும் சூழலில், குழந்தைகளை காக்க என்னதான் செய்வது என்ற கேள்வி அனைவரிமும் எழுகிறது.

என்ன செய்யலாம்?

குழந்தைகள் மட்டும் என்றில்லை பெரியவர்களும்கூட பேக்கரி அயிட்டங்களை தவிர்த்து விடுவதே உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர். இருந்தபோதிலும், தவிர்க்க முடியாத சூழலில், எப்போதாவது அவற்றை ருசி பார்த்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கின்றனர். ஆனால், அப்படி கேக் உள்ளிட்ட பேக்கரி உணவுப் பொருட்களை குழந்தைகளுக்கு வாங்கித்தரும் போது, அந்த தின்பண்டத்தின் தரம், சுகாதாரம், அவற்றில் கலக்கப்பட்டுள்ள பொருட்கள் என்னென்ன? அதன் காலாவதி தேதி என்ன? போன்றவற்றை நன்கு அறிந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். ஏனென்றால், பேக்கரி உள்ளிட்ட தின்பண்ட கடைகளை நடத்தும் பெரும்பாலானோர், தங்களிடம் உள்ள சரக்கை எப்படியும் விற்றுவிட வேண்டும் என்பதில் மட்டுமே அதிக கவனம் செலுத்துவதால், அதனை வாங்கி குழந்தைகளுக்கு கொடுக்கும் பெரியவர்கள், மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

Updated On 15 April 2024 6:19 PM GMT
ராணி

ராணி

Next Story