இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

காவேரி ஆறு உற்பத்தியாகும் இடமான கூர்க் எனப்படும் குடகு மலை கர்நாடக மாநிலத்தில் இருக்கும் அற்புதமான மலை வாசஸ்தலங்களில் ஒன்றாகும். பெங்களூரு மற்றும் மைசூரு நகரங்களில் இருந்து எளிதில் சென்றடையக்கூடிய தூரத்தில் இருக்கும் கூர்க்கில் நாம் அனுபவிக்க ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. இந்த எழில்மலைப் பிரதேசத்தில் என்றும் பசுமையான காடுகள், வளப்பமான பசுமை பள்ளத்தாக்குகள், பனி படர்ந்த மலைகள், பரந்து காணப்படும் காபி மற்றும் தேயிலைத் தோட்டங்கள், ஆரஞ்சு தோப்புகள், விண்ணைத் தொடும் சிகரங்கள் மற்றும் சலசலவென ஓடும் ஓடைகள் என்று பல விதமான இயற்கை அம்சங்கள் நிறைந்து காணப்படுவதால் இது 'கர்நாடகாவின் காஷ்மீர்' என்றும் 'இந்தியாவின் ஸ்காட்லாந்து' என்றும் அழைக்கப்படுகிறது. அந்த வகையில் எத்தனையோ சுற்றுலாப் பகுதிகள் இருந்தாலும் சில இடங்களை நாம் கூர்க் செல்லும்போது கண்டிப்பாக தவறவிட்டுவிடக்கூடாது. அப்படிப்பட்ட சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த கூர்க் நகரிலுள்ள அழகிய இடங்களையும், அதன் சிறப்பம்சங்களையும் இக்கட்டுரையில் காணலாம்.


துபாரே யானை பயிற்சி முகாமில் யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் காட்சி

யானைகள் பயிற்சி முகாம் - துபாரே :

கூர்கிலிருந்து 24 கி.மீ தொலைவில் துபாரே பகுதியில் அமைந்துள்ள யானைகள் பயிற்சி முகாம், கூர்க்-ல் தவறாமல் பார்த்து ரசிக்க வேண்டிய இடம். இங்கு யானைகளை கொண்டு நடத்தப்படும் முகாம்கள் பயணிகளுக்கு நல்ல பொழுதுபோக்காக இருப்பதோடு, அவர்களுக்கு இந்த விலங்குகளை பற்றி நன்கு தெரிந்து கொள்ளவும் உதவுகிறது. இதன் மூலம் யானைகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு எவ்வளவு அவசியம் என்பதை முகாம்களில் கலந்துகொள்ளும் மக்கள் நன்கு அறிந்து கொள்வார்கள். அதோடு யானைகளை எவ்வாறு பயிற்றுவிக்கிறார்கள் என்பதை கண்கூடாக பார்ப்பதுடன், பயணிகளே தங்கள் கைகளாலேயே யானைகளுக்கு உணவும் கொடுக்கலாம். அத்துடன் வனத்துறையினர் ஏற்பாடு செய்யும் யானைச் சவாரியிலும், பரிசல் பயணத்திலும் மகிழ்ச்சியுடன் பொழுதை கழிக்கலாம்.

அபே நீர்வீழ்ச்சி :

கூர்க் நகரிலிருந்து 23 கி.மீ தொலைவில் உள்ள அபே நீர்வீழ்ச்சி அடர்த்தியான காபி மற்றும் ஏலக்காய் தோட்டங்களின் நடுவே அமைந்துள்ளது. மலைகளுக்கு நடுவே ஒரு குறுகிய பாதையின் முடிவில் திடீரென்று தோன்றி நம்மை பிரமிக்க வைக்கும். இந்த நீர்வீழ்ச்சியை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்க வசதியாக தொங்கு பாலம் ஒன்று அருவிக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு பாலத்தின் மறுபுறத்தில் அமைந்துள்ள காளி மாதா கோவிலும் பயணிகள் தவறாமல் பார்க்க வேண்டிய இடமாகும்.


அபே நீர்வீழ்ச்சி மற்றும் காளி மாதா கோவில்

பைலாகுப்பே :

பைலாகுப்பே என்பது இந்தியாவிலேயே தர்மசாலாவிற்கு அடுத்தபடியாக 2-வது பெரிய திபெத்திய குடியேற்ற ஸ்தலமாகும். இது கூர்க் நகரிலிருந்து 52 கி.மீ தொலைவில் உள்ளது. பைலாகுப்பேயின் சிறப்பம்சம் இங்குள்ள தங்கக்கோயில். அதாவது ‘நம்ட்ரோலிங்' என்று அழைக்கப்படும் திபெத்திய மடாலயமாகும். இந்த திபெத்திய மடாலயத்தின் உள்ளே இருக்கும் தங்க நிறத்தில் ஜொலிக்கும் பத்மசாம்பவா, புத்தா, அமிதாயுஸ் போன்ற சிலைகள் மற்றும் நுட்பமான அலங்கார வேலைப்பாடுகள் பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன.

தலைக்காவேரி :

தலைக்காவேரி இந்துக்களின் முக்கியமான புனித யாத்ரீக ஸ்தலமாக விளங்குகிறது. கடல் மட்டத்திலிருந்து 1,276 மீ உயரத்தில் உள்ள இந்த ஸ்தலம் காவேரி ஆறு உற்பத்தி ஆகும் இடமாக கருதப்படுகிறது. காவேரி பிறந்த இடமாக கருதப்படும் இடத்தில் தற்போது ஒரு குளம் (தீர்த்தவாரி) அமைந்துள்ளது. இந்த குளத்திற்கான நீரை கொண்டுவரும் சிறு பொய்கையாக காவேரி பிறக்கின்றது. பின்னர் அது தரைக்கடியில் கீழிறங்கி வெகு தூரத்திற்கு அப்பால் காவேரி எனும் ஆறாக வெளிப்படுகிறது. புனிதமான இந்த காவேரி தீர்த்தவாரியில், சுப தினங்களில் மூழ்கி எழுந்தால் எல்லா துன்பங்களும் பறந்தோடும் என்பது ஐதீகமாகும்.


பைலாகுப்பே (திபெத்திய மடாலயம்) மற்றும் காவேரி ஆறு உற்பத்தியாகும் தலைக்காவேரி

நிசர்கதாமா :

கூர்க் மாவட்டத்தில் உள்ள குஷால் நகரிலிருந்து 3 கி.மீ தொலைவிலும், கூர்கிலிருந்து 39 கி.மீ தூரத்திலும், காவேரி ஆற்றில் அமைந்துள்ள ஒரு சிறு தீவு நிசர்கதாமா. இங்கு காவேரி ஆற்றை கடந்து தீவுக்குள் செல்வதற்காக 90 மீட்டர் நீளத்துக்கு மரத் தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தீவு. மூங்கில் தோப்புகள், சந்தன மரங்கள், தேக்கு மரங்கள் மற்றும் ஆற்றின் இருபுறமும் தெரியும் அருவிகள் என்று இயற்கை அழகோடு மனதை மயக்குகிறது. இங்குள்ள வன விலங்கு சரணாலயம் பயணிகளை பெரிதும் கவரும் அம்சமாக விளங்குகிறது. இதில் மான்கள், யானைகள், முயல்கள் மற்றும் மயில்கள் போன்றவற்றை காணலாம். அதுமட்டுமல்லாமல் யானைச்சவாரி மற்றும் படகுச்சவாரி போன்ற பொழுதுபோக்கு வசதிகளும் இங்கு இருக்கின்றன.

வாலனூர் பிஷிங் காம்ப் :

கூர்கிலிருந்து 30 கிலோ மீட்டருக்குள் துபாரெவுக்கு வெகு அருகில் வாலனூர் பிஷிங் காம்ப் அமைந்துள்ளது. வாலனூர் பிஷிங் காம்ப்பிலிருந்து துவங்கும் இந்த முகாம்கள் அங்கிருந்து காவேரி ஆற்றின் போக்கில் அமைந்துள்ள தொட்டம்கலி, பீமேஸ்வரி போன்ற இடங்களுக்கு சென்று இறுதியாக கலிபோரே பகுதியில் முடிவடைகிறது. இந்த முகாமில் தூண்டிலில் மீன் பிடிக்க வனத்துறை அலுவலகத்தில் அனுமதிச்சான்று பெற்றிருக்க வேண்டும்.


அழகிய வாலனூர் பிஷிங் காம்ப் மற்றும் நிசர்கதாமா

பாகமண்டலா :

இந்துக்களுக்கான ஒரு புனித யாத்ரீக ஸ்தலமாக பாகமண்டலா விளங்குகிறது. காவேரி ஆறு தன் துணை ஆறான கன்னிகே ஆற்றுடன் சங்கமிக்கும் இவ்விடத்தில் தெய்வீக ஆறான சுஜ்யோதி ஆறும் தரைக்கடியில் இவற்றோடு கலப்பதாக சொல்லப்படுகிறது. எனவே மூன்று ஆறுகள் ஒன்றாக கலக்கின்ற காரணத்தால் இந்த இடம் திரிவேணி சங்கமம் என்றும் அழைக்கப்படுகிறது. துள சங்கிரமண திருவிழாவின்போது பக்தர்கள் தலைக்காவேரிக்கு செல்லும் முன்னர் இந்த திரிவேணி சங்கமத்தில் மூழ்கி எழுகின்றனர்.

தடியாண்டமோல் :

கூர்கிலிருந்து 37 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தடியாண்டமோல், கர்நாடக மாநிலத்தின் 3-வது உயரமான மலைச் சிகரமாகும். தடியாண்டமோல் எனும் இந்தப் பெயர் மலையாள மொழியிலிருந்து பிறந்துள்ள ஒரு சொல்லாகும். இதற்கு பெரிய மலை என்ற அர்த்தத்தை கொள்ளலாம். கடினமான மலையேற்றத்துக்கு தயக்கம் காட்டும் பயணிகள் பாதி தூரம் வரை வாகனத்தில் பயணிக்கலாம். இருப்பினும் மீதி தூரத்தை மலையேற்றம் மூலமாக கடக்க வேண்டியிருக்கும். உச்சியில் ஏறிய பின் காணக்கிடைக்கும் காட்சி எல்லா சிரமங்களையும் மறக்க வைத்துவிடும்.


எழில்மிகு தடியாண்டமோல், பாகமண்டலா மற்றும் ராஜா சீட்

ராஜா சீட் :

கூர்க் மாவட்டத்தின் மடிக்கேரி பகுதியில் உள்ள ராஜா சீட் மிக பிரசித்தி பெற்ற ஒரு சுற்றுலா தலமாகும். இந்த இடம் முன்பு மஹாராஜாக்கள் அடிக்கடி வந்து ஓய்வெடுக்கும் இடம் என்பதால் இப்பூங்காவிற்கு ராஜா சீட் என்று பெயர் வந்துள்ளது. அடுக்கடுக்காக அமைந்துள்ள பூங்கா தோட்டங்களும், சரிந்து கிடக்கும் பள்ளத் தாக்குகளும், பனிபடர்ந்த மலைக்காட்சிகளும் நிரம்பி வழியும் இந்த இடத்தை இயற்கை அழகை ரசிப்பதற்கென்றே மஹாராஜாக்கள் தேர்ந்தெடுத்ததில் எந்த வியப்பும் இல்லை. மேலும் சூரிய உதயத்தையும், சூரிய அஸ்த்தமனத்தையும் இந்த பள்ளத்தாக்கின் பின்னணியில் பார்த்து ரசிக்கும் அனுபவத்தை மறக்கவே முடியாது.

Updated On 15 April 2024 6:20 PM GMT
ராணி

ராணி

Next Story