இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

மழைக்காலம், குளிர்காலம் என்றாலே குளிர்ச்சியான காலநிலையை அனுபவித்து மகிழ்வதோடு இருமல், சளி, காய்ச்சல் போன்ற உடல்நல பிரச்சினைகளும் சேர்ந்தே வருகிறது. குறிப்பாக, குளிர்காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர். இதுபோன்ற உடல்நல பிரச்சினைகளுக்கு சித்த மருத்துவத்தில் என்னென்ன தீர்வுகள் இருக்கின்றன என்பது குறித்து விவரிக்கிறார் சித்த மருத்துவர் வீரபாபு.

சளி மற்றும் இருமலுக்கு வீட்டிலேயே காணக்கூடிய தீர்வுகள் என்னென்ன?

சளி மற்றும் இருமலுக்கு முதலில் எளிய தீர்வு கொடுப்பது தூதுவளை. இதனை இஞ்சி, பூண்டு, மஞ்சள், சீரகம் சேர்த்து சூப் வைத்தோ, அல்லது தோசை மாவுடன் கலந்து தோசையாகவோ, துவையலாகவோ தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதனால் நுரையீரல் பாதுகாக்கப்படுவதுடன், நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். அடுத்து கற்பூரவல்லியை மிளகு, சீரகம் சேர்த்து ரசம் வைத்து சாப்பிடலாம். இதனுடன் துளசியையும் சேர்த்துக்கொள்ளலாம்.


சளி, இருமலுக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய மூலிகைகள்

நிறையப்பேருக்கு இருக்கக்கூடிய ஆஸ்துமா பிரச்சினையை கட்டுப்படுத்துவது எப்படி?

காடுகளில் அதிகம் கிடைக்கக்கூடிய முசுமுசுக்கை இலையைக் கொண்டு அடை செய்து சாப்பிடலாம். இதனை கிராமங்களில் அதிகம் செய்து சாப்பிடுவார்கள். இந்த இலையில் குழம்பு அல்லது தோசை செய்து சாப்பிடலாம். அதேபோல் ஆடாதோடை இலை ஒன்றை பறித்து அதனுடன் மிளகு, மஞ்சள் சேர்த்து கசாயம் செய்தும் குடிக்கலாம். இதனை பெரியவர்கள் 40 - 50 மி.லி அளவிலும், சிறியவர்கள் 20 மி.லி அளவிலும், குழந்தைகள் 5 - 10 மி.லி அளவிலும் தினசரி குடித்துவர, ஆஸ்துமா படிப்படியாக குறையும்.

ஒற்றை தலைவலியை குறைக்க என்ன செய்யலாம்?

தலையில் நீர்கோர்க்காமல் இருக்கவும், அப்படி நீர் கோர்த்துவிட்டால், அதனை மூக்கின் வழியாக வெளியேற்றவும் ஆவி பிடிக்கலாம். நீரில், வேப்பிலை, ஆடாதோடை, கற்பூரவல்லி, துளசி, மஞ்சள், நொச்சி இலை அனைத்தையும் போட்டு கொதிக்கவைத்து அதில் ஆவிபிடித்து, மூக்கு வழியே சுவாசிக்கும்போது, அது தலையில் கோர்த்திருக்கும் நீரை வெளியே கொண்டுவந்துவிடும். இதனால் தலைவலி குறையும். அடுத்து தலைவலி ஆரம்பிக்கும்போதே நடுவிரல்கள் இரண்டையும் நெற்றியின் நடுப்புள்ளியில் வைத்து, தலைக்கு பின்புறம்வரை நீவியபடியே கொண்டுசென்று கழுத்தின் நடுவே விடவேண்டும். இப்படி செய்வதால் தலைவலி குறையும்.

அடுத்து நல்வேளை செடியை ஆவி பிடிக்கவும் பயன்படுத்தலாம் அல்லது அம்மியில் அரைத்து நெற்றியில் பற்றாகவும் போட்டுக்கொள்ளலாம். இவை தவிர, நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கக்கூடிய நீர்க்கோவை மாத்திரைகளை வாங்கி, அதனை உரசி நெற்றியில் தடவினாலும் படிப்படியாக தீர்வு கிடைக்கும். இவற்றில் பக்கவிளைவுகள் இருக்காது என்பதால் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.


தலைவலி நீங்க ஆவி பிடித்தல்

செரிமான கோளாறை சரிசெய்ய தினசரி காலை என்ன பானம் குடிக்கலாம்?

வயிற்றுப்புண் இல்லாதவர்கள் காலை இஞ்சி சாறு குடிக்கலாம். காலையில் இஞ்சி, நண்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் என்ற அடிப்படையில் காலையில் இஞ்சிச் சாறும், மதிய உணவில் முதல் கைப்பிடி உணவுடன், சுக்குப்பொடி, நெய் சேர்த்தும், மாலையில் கடுக்காய் பொடியை வெந்நீரில் கலந்தும் சாப்பிட வேண்டும். இப்படி செய்தாலே செரிமான பிரச்சினைகள் இருக்காது. நன்றாக பசி எடுக்கும். இஞ்சி சாறு குடிக்க முடியாதவர்கள் பிரண்டை துவையல் செய்து சாப்பிடலாம். அதில் இஞ்சியை சற்று அதிகமாக சேர்த்துக்கொள்வது நல்லது.

சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியாத நோய் என்று இருக்கிறதா?

ஆங்கில மருத்துவத்தை மட்டுமே நாடிச்சென்ற நிறைய நோயாளிகள் இப்போது சித்த மருத்துவம் பக்கம் திரும்பியுள்ளனர். உதாரணத்திற்கு, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் ப்ளேட்லெட் (தட்டணுக்கள்) எண்ணிக்கை படிப்படியாக குறைந்து 30 ஆயிரத்துக்கும் கீழே சென்றுவிட்டால் ரத்தக்கசிவு ஏற்படும். இதனால் செயற்கை ப்ளேட்லெட்டுகள் ஏற்றப்பட்டாலும் அது தோல்வியில் முடிந்து சில நோயாளிகள் இறந்துவிடுகிறார்கள். இதற்கு முழுமையான தீர்வு சித்த மருத்துவத்தில் இருக்கிறது. அதேபோல் ஆரம்பகட்ட புற்றுநோயாளிகள் ஆங்கில மருத்துவத்துடன் சித்த மருத்துவத்தையும் பின்பற்றினால் 100 சதவீதம் குணம் பெற முடியும்.


வைரஸ் தொற்றுகளிலிருந்து பாதுகாப்பாக இருக்க நோயெதிர்ப்பு சக்தி அவசியம்

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்யலாம்?

வைரஸ் உடலை தாக்காமல் இருக்க அரசின் அறிவுரைப்படி, மாஸ்க் அணிதல், விலகியிருத்தல், பொது இடங்களுக்கு செல்லாமல் இருத்தல் போன்ற விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அப்போதுதான் வைரஸ் தொற்று தாக்காமல் இருக்கும். நோயெதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தாலும் வைரஸ் தொற்று தாக்கத்தான் செய்யும். ஆனால் அதன் தாக்கம் என்பது குறைவாக இருக்கும். உதாரணத்திற்கு, நோயெதிர்ப்பு குறைவாக உள்ளவர்களுக்கு காய்ச்சல் ஒரு வாரத்தில் சரியாகிறது என்றால், நோயெதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளவர்களுக்கு 3 நாட்களில் சரியாகும்.

கிட்டத்தட்ட ஆறு அல்லது ஏழு ஆண்டுகள் வித்தியாசத்தில் புதுபுது வைரஸ் தாக்குதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு சிக்குன்குனியாவின் தாக்கம் அதிகமாக இருந்தது. அடுத்த 7 ஆண்டுகள் கழித்து டெங்கு பரவல் அதிகமாக இருந்தது. அடுத்த 7- 8 ஆண்டுகள் கழித்து கொரோனா தொற்று பரவல் மிகவும் அதிகமாக இருந்தது. இவை ஒவ்வொன்றின் தாக்கமும் வேறு வேறு. எனவே ஒரு நோயாளிக்கு அந்த நேரத்தில் என்ன பாதிப்பு என்பதை கண்டறிந்து அதை பொருத்துதான் சிகிச்சை அளிக்கமுடியும். எனவே பொதுவான மருத்துவம் என்பது இல்லை.

சிலருக்கு மூக்கிலிருந்து ரத்தம் வடிதல் போன்ற பிரச்சினைகள் இருக்கிறதே... அதற்கு என்ன தீர்வு?

சிலருக்கு ஏற்கனவே மூக்கில் புண் இருந்து, அதன்மேல் பந்து போன்று ஏதேனும் பொருள் பட்டு ரத்தம் வடிந்தால் அதுவே தானாக சரியாகிவிடும். ஆனால் ரத்தம் வடிந்துகொண்டே இருந்தால் தலையை ஸ்கேன் செய்து ரத்தக்குழாய்களில் ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா என்பதை கண்டறியவேண்டும். இதுபோன்ற சிகிச்சைகளை மருத்துவர் பரிந்துரையின்றி எடுத்துக்கொள்ளக் கூடாது. ஏனெனில் மருந்தின் அளவு சற்று அதிகரித்தாலும்கூட மூக்கில் ரத்தம் கட்டியதைப் போன்று மூளையிலும் ரத்தம் கட்ட வாய்ப்புகள் உள்ளது.


கர்ப்பிணிகள் தங்களை பராமரிக்கும் முறை

கர்ப்பிணிகள் எப்படி தங்களை பராமரித்துக்கொள்ளலாம்?

கர்ப்பிணிகள் ஒவ்வொருவரும் சித்த மருத்துவர்களை அணுகி, அவர்களுடைய பிரச்சினைகளுக்கு ஏற்ப சிகிச்சை எடுத்துக்கொள்வதுதான் சரியாக இருக்கும். ஏனெனில் ஒரு கர்ப்பிணிக்கு ஹீமோகுளோபின் அளவு எவ்வளவு இருக்கிறது? வலி இருக்கிறதா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா? என்பதை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதுதான் நல்லது.

தினசரி பின்பற்றக்கூடிய உணவுமுறை பற்றி கூறுங்கள்...

தினசரி காலை உணவில் ஏதேனும் ஒரு மூலிகையை எடுத்துக்கொள்வது நல்லது. இது பல நோய்களை தடுக்க உதவும். உதாரணத்திற்கு அதலைக்காய் பொரியல் சாப்பிட்டு வந்தால், கல்லீரல், கணையம், சிறுகுடல் போன்றவற்றை பாதுகாப்பதுடன் வயிற்றுப்புண்ணையும் ஆற்றுகிறது. மேலும் சர்க்கரை நோயையும் படிப்படியாக குறைக்கிறது. அதேபோல் மகிலிக்கீரை (பண்ணைக்கீரை) பல்வேறு நோய்களை தடுக்கிறது. மேலும் பாவட்டங்காய் (சீயப்பட்டுக்காய்‌) குழம்பும் உடலுக்கு நல்லது. குறிப்பாக, வெயில்காலங்களில் சோற்று கற்றாழையை உணவில் கட்டாயம் சேர்க்கவேண்டும்.

Updated On 1 Jan 2024 6:26 PM GMT
ராணி

ராணி

Next Story