இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

குளிர்காலம் வந்தாலே நோய்த்தொற்று குறித்த அபாயமும் கூடவே வந்துவிடும். அதிலும் குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட கொரோனா தொற்றின் தாக்கத்தால் சாதாரண சளி, காய்ச்சல் என்றாலும்கூட பயம் சற்று அதிகமாகத்தான் இருக்கிறது. மீண்டும் தற்போது புதிய வகை கொரோனா தொற்று பரவிவரும் நிலையில் இந்த தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருப்பது பற்றியும், குளிர்கால நோய்கள் குறித்தும், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விளக்குகிறார் சித்த மருத்துவர் மீனாகுமாரி.

கொரோனாவிலிருந்து முழுமையாக மீள சித்த மருத்துவத்தில் வழி இருக்கிறதா?

கொரோனா என்பது ஒரு வைரஸ் தொற்று. இதன் பாதிப்பு குளிர்காலம் தொடங்கியதிலிருந்து, குறிப்பாக செப்டம்பர் மாதத்திலிருந்து அதிகமாகவே இருக்கிறது. காய்ச்சல், சளி போன்ற தொற்றுகளில் ஒன்று கொரோனா என்பதால் இதிலிருந்து எப்படி நம்மை தற்காத்து கொள்ளவேண்டும் என்பதில்தான் நாம் கவனம் செலுத்தவேண்டும்.

ஜே.என்.1 புதிய வகை கொரோனாவின் அறிகுறிகள் என்னென்ன?

ஜே.என்.1 ஒரு உருமாறிய கொரோனா. இதுகுறித்த ஆய்வுகள் நடந்துகொண்டே இருக்கின்றன. சளி, காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, வாசனைத்தன்மை மற்றும் சுவை இழத்தல், வயிற்றுப்போக்கு, தசை வலி போன்றவை இந்த கொரோனா தொற்றின் அறிகுறிகள். இந்த புதிய வகை கொரோனாவால் பாதிப்படையாமல் இருக்க வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் கண்டிப்பாக எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். குறிப்பாக நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், கேன்சர், NCDs என்று சொல்லக்கூடிய இணை நோய்கள் உள்ளவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.


சித்த மருத்துவமும் கொரோனாவும்

இதுதவிர, முகக்கவசம் அணிதல், சமச்சீர் உணவு எடுத்துக்கொள்ளுதல் போன்றவையும் அவசியம். கூடவே வேகவைத்த காய்கறிகள், முளைகட்டிய பயறு வகைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். கடந்த கொரோனா தொற்றின்போதே அமக்கரா சூரணம், கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் போன்றவற்றை அரசாங்க அறிவுரைப்படி எடுத்துக்கொண்டோம். அதையே இப்போது மீண்டும் எடுத்துக்கொள்ளலாம்.

கொரோனா அலையின் தாக்கம் எப்போதுவரை இருக்கும்?

இந்த கொரோனா அலையின் தாக்கமானது இருந்துகொண்டேதான் இருக்கும். ஆனால் மக்களிடையே அது ஏற்படுத்தும் தாக்கத்தை பொறுத்துதான் அலைகளின் அளவை கணக்கிட முடியும். வைரஸ் உருமாறிக்கொண்டே இருப்பதால் அதன் தாக்கமும் மாறும். எனவே ஒவ்வொருவரும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், Herd immunity என்று சொல்லக்கூடிய கூட்டு நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க வேண்டும். இதன்மூலம் கொரோனா தொற்றுப் பரவலை தடுக்கலாம்.

குளிர்காலத்தில் தற்போது நிறையப்பேருக்கு சளி பிரச்சினை இருக்கிறது. எனவே கொரோனா தொற்று வந்துவிடுமோ என பயப்படுகிறார்கள். இதனை எப்படி கையாள்வது?

எல்லா சளியும் கொரோனாவாகத்தான் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. காய்ச்சல், அலர்ஜி, ஆஸ்துமா போன்றவற்றாலும் சளி பிரச்சினை ஏற்படுவதால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதிப்பது நல்லது. வீட்டிலேயே சுக்கு, மிளகு, திப்பிலி என்று சொல்லக்கூடிய திரிகடுகத்தை தேன் கலந்து சாப்பிட்டால் சளி, இருமல் நீங்கும். குழந்தைகளுக்கு கற்பூரவல்லி, துளசி போன்றவற்றை பிட்டவியல் செய்து சாறு எடுத்து அதில் தேன் கலந்து கொடுக்கலாம். இதுதவிர, அமக்கரா கிழங்கு பொடி அல்லது சூரணத்தை அரை கிராம் அளவில் காலை, மாலை இருவேளையும் பாலில் சேர்த்து குடிக்கலாம். நிலவேம்பு, கபசுர குடிநீரை 60 மி.லி அல்லது 30 மி.லி அளவில் தற்காப்புக்காக மருத்துவர் அறிவுரைப்படி எடுத்துக்கொள்ளலாம்.


குளிர்காலமும் கொரோனா பரிசோதனையும்

குளிர்காலத்தில் அதிகமாக வரக்கூடிய ருமட்டாய்டு ஆர்த்ரிட்டிஸ் பிரச்சினைக்கு சித்த மருத்துவத்தில் என்னென்ன தீர்வுகள் உள்ளன?

வாதம் அதிகரிப்பதால் வரக்கூடியதுதான் மூட்டுவலி. பொதுவாகவே, குளிர்காலத்தில் வாதம் அதிகரிக்கும். எனவே அதிகப்படியாக குளிரில் செல்வதை தவிர்ப்பது நல்லது. டைல்ஸ் போன்ற குளிர்ந்த தரை இருக்கும் வீடுகளில் வசிப்பவர்கள் வீட்டிற்குள்ளேயே செருப்பு அல்லது சாக்ஸ் அணிந்துகொள்ள வேண்டும். 2 அல்லது 3 விரிப்புகளை போட்டு, அதன் மேல்தான் படுக்கவேண்டும். காலை எழுந்தவுடன் எளிய பயிற்சிகளை மூட்டுக்கு கொடுப்பதுடன், சூடான தண்ணீரை குடிப்பதும், அதில் குளிப்பதும் அவசியம்.

குளிர்காலத்தில் என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும்? என்னென்ன உணவுகளை தவிர்க்க வேண்டும்?

வீட்டில் சமைத்த சமச்சீர் உணவை எப்போதும் சூடாக எடுத்துக்கொள்ள வேண்டும். வெளியில் சாப்பிடுவதை அறவே தவிர்க்கவேண்டும். எண்ணெய் பதார்த்தங்கள் மற்றும் வாயுவை அதிகரிக்கும் கிழங்கு வகைகளை தவிர்ப்பது நல்லது. எளிதில் ஜீரணமாகக்கூடிய ஆவியில் வேகவைத்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது நல்லது.


சாப்பிட வேண்டிய உணவுகள் - தவிர்க்க வேண்டிய உணவுகள்

நாள்பட்ட ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் குளிர்காலத்தில் தங்களை எப்படி பாதுகாத்துக்கொள்வது?

ஆஸ்துமா ஒவ்வாமையால் வரக்கூடியது. ஒவ்வொருவருக்கும் எதனால் ஒவ்வாமை ஏற்படுகிறது என்பதை கண்டறிந்து அதனை தவிர்க்கவேண்டும். மூச்சு பயிற்சி அல்லது பிராணயாமத்தை தினசரி காலையில் செய்வது அவசியம். இது தவிர எளிய யோகாசனங்களையும் செய்யலாம். கூடவே வெதுவெதுப்பான தண்ணீரை குடித்தல், ஆவி பிடித்தல் போன்றவையும் அவசியம்.

மருத்துவமனைக்கு செல்லக்கூடிய சூழ்நிலை இல்லாதவர்கள் வீட்டிலேயே எப்படி உடல்நல பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்?

ஒவ்வொருவர் வீட்டிலிருக்கும் அஞ்சறைப்பெட்டியே மருந்து பெட்டகம்தான். அதிலிருக்கும், சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், ஏலம், கிராம்பு என ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு மருத்துவ குணம் இருக்கிறது. சுக்கு செரிமானத்திற்கு உதவுகிறது. சீரகம் வயிறு சம்பந்தமான அழற்சியை போக்கும். சளி, இருமல், ஆஸ்துமா இருப்பவர்கள் மிளகு பொடியை தேனில் கலக்கி சாப்பிடலாம். தொண்டைக்கட்டு, கரகரப்பு இருப்பவர்கள் திப்பிலியை எடுத்துக்கொள்ளலாம். கிராம்பு பல் வலிக்கும், ஏலக்காய் செரிமானக் கோளாறு, பித்தத்தால் வரக்கூடிய தலைச்சுற்றலுக்கும் மருந்தாகிறது. வெந்தயம் மதுமேக நோய்க்கு நல்ல மருந்து.


சிறியவர்களின் சளிக்கு மருந்தாகும் துளசி, கற்பூரவல்லி மற்றும் கற்பூராதி தைலம்

குளிர்காலங்களில் சிறுவர், சிறுமிகளுக்கு வரக்கூடிய நோய்கள் என்னென்ன? அதிலிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?

சிறுவர்களுக்கு குளிர்காலங்களில் அதிகமாக வரக்கூடிய நோய்கள் சுவாச பிரச்சினை மற்றும் வயிற்றுப்போக்கு. எனவே காய்ச்சி ஆறவைத்த நீரை குடிக்கவேண்டும். வீட்டு உணவுகளை சாப்பிடவேண்டும். சுவாச பிரச்சினைகளுக்கு துளசி, கற்பூரவல்லி, வெற்றிலை சேர்த்த கசாயம் அல்லது சித்தரத்தை கசாயத்தை குழந்தைகளுக்கு குடிக்க கொடுக்கலாம்.

இதுதவிர, கற்பூரம் சேர்த்த தேங்காய் எண்ணெயை (கற்பூராதி தைலம்) வீட்டிலேயே தயாரிக்கலாம். தேங்காய் எண்ணெயை லேசாக சூடாக்கி, அதில் சிறிது கற்பூரம் சேர்த்து மூடிவைத்துவிடலாம். இந்த எண்ணெயை வெதுவெதுப்பான சூட்டில் குழந்தையின் மார்பில் தடவி விட்டால் சளி குறையும்.


சளியை குணப்படுத்தும் உணவுகள் (உணவே மருந்து)

கொரோனாவிலிருந்து விடுபட எந்த மருத்துவம் சிறந்தது?

சித்த மருத்துவம், ஆயுர்வேதம், ஆங்கில மருத்துவம் என பிரிக்க தேவையில்லை. கொரோனாவை பொருத்தவரை ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவத்தைத்தான் இப்போது பயன்படுத்தி வருகிறார்கள். எந்த நிலைக்கு எந்த மருத்துவம் சிறந்ததோ அதனை பயன்படுத்துவதுதான் சிறந்தது. நோய் தடுப்புக்கு சித்த மருத்துவம், அவசர சிகிச்சைக்கு ஆங்கில மருத்துவம் எடுத்துக்கொள்வது தீர்வை கொடுக்கும்.

தொடர் இருமல், சளி மற்றும் காய்ச்சலுக்கு சித்த மருத்துவத்திலுள்ள எளிமையான பாதுகாப்பு வழிமுறைகள் என்னென்ன?

எப்போதுமே இதுபோன்ற பிரச்சினை இருப்பவர்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, நெல்லிக்காயை தேனில் ஊறவைத்து சாப்பிடலாம். கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்ந்த திரிபலா சூரணம் சாப்பிடலாம். சளிக்கு திரிகடுகு சூரணம் சாப்பிடலாம். சளிக்கட்டு இருந்தால் தாளிசாதி வடகம் என்ற சப்பி சாப்பிடும் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.

Updated On 8 Jan 2024 6:37 PM GMT
ராணி

ராணி

Next Story