இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

டீனேஜ் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலுமே சிக்கலான மற்றும் அதிக சவால்கள் நிறைந்த பருவமாகும். அதாவது ஒருவரின் 13 முதல் 19 வயது வரையிலான காலகட்டத்தை டீனேஜ் என்பர். பெற்றோர்களுக்கும் தனது டீனேஜ் பிள்ளைகளை கையாள்வது என்பது மிகவும் சவாலான ஒன்றுதான். அதிலும் இந்த தலைமுறையினரின் மனநிலை மற்றும் சிந்தனை என்பது முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. டீனேஜ் பிள்ளைகளை கையாளும் முறை மற்றும் பெற்றோர்களுக்கான சில டிப்ஸ் இந்த பதிவில் பின்வருமாறு...

டீனேஜ் பிள்ளைகளுக்கும், பெற்றோர்களுக்கும் ஏற்படும் சிக்கல்களும் அதற்கான காரணங்களும்:

முதலாவதாக இன்றைய பரபரப்பான உலகில் தகவல் தொடர்பு சரிவர இல்லாததுதான் பல பிரச்சினைகளுக்கு அடித்தளமாக அமைகிறது என்பதே உண்மை. டீனேஜ் பிள்ளைகளைப் பொறுத்தவரையில், பல பெற்றோர் தங்கள் பிள்ளைகளை சரியான மனநிலையில் இல்லாதவர்களாகவும், முரட்டுத்தனம், பெற்றோரின் பேச்சுக்கு உடன்படாதவர்களாகவும்தான் பார்க்கின்றனர். அதோடு பல நேரங்களில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் தனியுரிமைகளில் தலையிடும்பட்சத்தில் அந்த பிள்ளைகளுக்கும், பெற்றோர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் மற்றும் மோதல்கள் ஏற்பட காரணமாக அமைகிறது.

இரண்டாவதாக தேவையற்ற அறிவுரைகளை வழங்குதல். பொதுவாகவே டீனேஜ் பிள்ளைகளுக்கு பெற்றோரின் அறிவுரை பிடிக்காது. அதேசமயம் தங்கள் பிள்ளைகள் அவர்களது சொந்தப் பிரச்சினைகளை தனியாக நின்று சமாளிக்கும் திறன் இல்லதவர்களாகவே பெற்றோர்கள் கருதுகின்றனர். பெற்றோர்களின் இந்த எண்ணம்தான் பிள்ளைகளுக்கு தேவைக்கும் அதிகமான, அதாவது சில நேரங்களில் தேவையற்ற அறிவுரைகளை வழங்க வழிவகை செய்கிறது. இது பிள்ளைகளின் மன உறுதியைக் குறைக்கும். மேலும், ஒருவித எரிச்சலை உண்டுபண்ணும்.

மூன்றாவதாக தேவையற்ற ஒப்பீடுகள். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சக நண்பர்களுடனோ அல்லது உடன் பிறந்தவர்களுடனோ ஒருபோதும் ஒப்பிடக் கூடாது. ஏனெனன்றால் அது பிள்ளைகளின் தன்னம்பிக்கையை சீர்குலைப்பதோடு, சக நண்பர்களையும் விரோதிகளாக பார்க்கும் வாய்ப்பும் அதிகம் இருக்கிறது.


குழந்தைகள் முன் பெற்றோர் சண்டையிடுதல்

நான்காவதாக பிள்ளைகளைப் பற்றிய புகார்கள். தங்கள் பிள்ளைகளைப் பற்றி பெற்றோர்கள், அவர்களுடைய நட்பு மற்றும் உறவினர் வட்டாரங்களில் தொடர்ந்து புகார் செய்வதும் புலம்புவதும் டீனேஜ் பிள்ளைகளுக்கு நச்சு சூழலை ஏற்படுத்தும். இதனால் பிள்ளைகள் மன உளைச்சலுக்கு ஆளாகும் வாய்ப்புகள் அதிகம்.

உளவியலாளர் கூறும் வழிமுறைகள்

டீனேஜ் பிள்ளைகளுக்கு ஏற்படும் சிக்கல்கள், பெற்றோர்கள் அவர்களை கையாளும் விதம் மற்றும் சில அறிவுரைகளை வழங்குகிறார் உளவியலாளர் சரண்யா ஜெயக்குமார்.

1. பிள்ளைகளை சரியான முறையில் வளர்ப்பது பற்றிக் கூறுங்கள்?

முதலில் பிள்ளைகளின் உலகத்தை பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அடுத்ததாக குடும்பச் சூழல். என்னதான் பரபரப்பான சமூகம், கணினி போன்றவற்றோடு வாழ்க்கை பிணைக்கப்பட்டு இருந்தாலும் குடும்பச் சூழல் மற்றும் பழக்கவழக்கங்களை குழந்தைகளுக்கு சொல்லி வளர்ப்பது நல்லது. அதுமட்டுமின்றி தற்போது மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது நீண்ட தலைமுறை இடைவேளைதான். பெற்றோர்களே முன்வந்து பிள்ளைகளுக்கும், தங்களுக்குமான இடைவெளியை சரிசெய்வது அவசியமாகும்.


குழந்தைகளுக்கு பெற்றோரின் அரவணைப்பு தேவை

பெற்றோர் ஒற்றுமையாக இருந்து தங்களது குழந்தைகளை சீரான பாதையில் அழைத்துச் செல்வது அவர்களது கடமை. எனவே சிறுவயதிலிருந்தே ‘நோ’ சொல்லி வளர்ப்பது கட்டாயமாகும். அதில், மிக முக்கியமான ஒன்று பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது. ஆனால் இங்கு சில பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கின்றனர். அவ்வாறு இல்லாமல் அவர்களது வாழ்க்கையை வாழ பெற்றோர் இடம்கொடுக்க வேண்டும்.

2. டீனேஜ் பிள்ளைகளுக்கு இருக்கும் பொதுவான பிரச்சினைகள் என்னென்ன?

இப்பொழுது இருக்கும் பெரும்பாலான பிள்ளைகளுக்கு எதிர்காலம் சார்ந்த குறிக்கோள்கள் பெரிதாக இல்லை. படிப்பு சார்ந்த துறைகளை தேர்வு செய்வதில் குழப்பம், காதல் மற்றும் உறவுகளுக்குள் சிக்கல் போன்ற பல பிரச்சினைகள் இருக்கின்றன. உளவியல் ரீதியாக பார்த்தால் டீனேஜ் பருவம்தான் சிக்கலான மற்றும் மன அழுத்தம் நிறைந்த பருவமாகும்.


டீனேஜினருக்கு ஏற்படும் மன அழுத்தம்

3. பிள்ளைகளுக்கு சிறுவயதிலேயே மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணம் என்ன?

டீனேஜ் பிள்ளைகளுக்கு கண் இமைகள் அழகாக இல்லாததும், ஆடைகள் பத்தாததும், இரு சக்கர வாகனங்கள் இல்லாதது போன்ற சிறு பிரச்சினைகள்கூட மன அழுத்தத்திற்கு காரணமாக இருக்கிறது. இவை அனைத்திற்கும் காரணம் அவர்களால் குழப்பங்களுக்கு எளிதில் தீர்வுகாண இயலாததும், அதிகமாக குடும்பத்தைச் சார்ந்தே இருப்பதும்தான்.

4. 13 முதல் 19 என்ற டீனேஜ் பருவமானது பிள்ளைகளுக்கு எவ்வளவு முக்கியமானது?

இளம் பருவத்தில் கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட, அன்பு, மரியாதை, அரவணைப்பு போன்ற விஷயங்களுக்குத்தான் முதன்மை முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். ஏனென்றால் ஒருவரது அன்பு மற்றும் பழக்கவழக்கம்தான் நல்லதொரு எதிர்கால சமூகத்தை உருவாக்கும்.


பெற்றோர்கள் குழந்தைகளிடம் கண்டிப்பாக நடந்துகொள்ளுதல்

5. பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளுக்கு இடையே அதிக மோதல்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளுக்கு இடையே மோதல்கள் ஏற்படுவது என்பது சாதாரண ஒன்றுதான். பெற்றோர்களின் சிந்தனைகளுக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது அவர்களது பிள்ளைகளின் சிந்தனைகளும் செயல்பாடுகளும். அப்படியே இருவருக்குமிடையே மோதல்கள் ஏற்பட்டாலும் அங்கு மரியாதை மிகவும் முக்கியமான ஒன்றாகும். நாட்கள் கடந்தாலும் அவமரியாதைக்கு உட்பட்ட சொற்கள் தீய விளைவை ஏற்படுத்தும்.

6. பிள்ளைகள் வளர வளர பெற்றோர்களிடமிருந்து சில விஷயங்களை மறைப்பது ஏன்?

முதலில் பெற்றோரிடம் உண்மையை சொல்லும்போது அவர்கள் குழந்தைகளிடம் கடினமாக நடந்துகொள்வதால் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். அடுத்தடுத்து வரும் விஷயங்களை பெற்றோர்களிடமிருந்து மறைக்கத் தொடங்குகின்றனர். எனவே பெற்றோர்கள் சின்ன சின்ன விஷயங்களுக்காக கடிந்த சொற்கள் பயன்படுத்துவது அல்லது தண்டனைகள் வழங்குவதுதான் பிள்ளைகள் சில விஷயங்களை மறைக்க முக்கியக் காரணமாக இருக்கிறது.


போதைப்பழக்கம் மற்றும் செல்போனுக்கு அடிமையாதல்

7. இப்போது போதைப் பழக்கம் மற்றும் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அதிகபடியான டீனேஜ் பிள்ளைகள் அடிமையாகி இருப்பது ஏன்?

ஒரு பொருள் அதிக அளவில் கைக்கு கிடைக்கும் என்ற பட்சத்தில்தான் அது அதிகளவில் புழக்கதிற்கும் வரும். தற்போது சாதரணமாக பள்ளி மாணவர்களின் கைகளிலே போதைப்பொருட்கள் கிடைப்பதுதான் அதிர்ச்சி அளிக்கிறது. அதனாலேயே சிறுவயதிலேயே போதைப்பழக்கத்திற்கு அடிமையாவதும் அதிகரித்திருக்கிறது.

8. டீனேஜ் பிள்ளைகளின் கைப்பேசி பயன்பாடு எந்த அளவில் இருப்பது நல்லது?

பிள்ளைகளின் படிப்பு நேரத்திற்கு சரிபாதியான அளவு மட்டுமே கைப்பேசியைப் பயன்படுத்த வேண்டும். படிப்பு மட்டுமில்லாமல் ஏதேனும் ஒரு கலையை சரிவர ஆர்வத்தோடு கற்று தேர்ச்சி பெற வேண்டும். அதிகநேர கைபேசி பயன்பாடுதான் மாணவர்கள் படிப்பதை மறப்பதற்கும் காரணமாக இருக்கிறது.

Updated On 20 Nov 2023 6:27 PM GMT
ராணி

ராணி

Next Story