இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

அழகு, உணர்ச்சி, தத்ரூபம் போன்றவற்றை தூரிகைகள் மூலம் வெளிப்படுத்துவது ஓவியம். பெரும்பாலானோரால் ரசிக்கப்படும் கலைகளில் ஒன்றும்கூட. பொறுமை, நேரம் செலவழித்தல் மற்றும் மனநிலையை ஒருமுகப்படுத்துதல் போன்றவை ஓவியத்தில் முக்கியமானவை. பண்டைகாலந்தொட்டே பல்வேறு விதமான ஓவியங்கள்மூலம் அரசர்கள் தங்கள் வாழ்க்கைமுறை மற்றும் கலாசாரத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அப்படி பலராலும் ரசிக்கப்படுகிற ஒருவகை ஓவியம்தான் கேரளா மியூரல் கலை என்கிற சுவரோவியம். இதுகுறித்து பேசுகிறார் கேரளா மியூரல் ஆர்டிஸ்ட் சுசீலா பிரகாஷ்.

கேரளா மியூரல் கலை என்றால் என்ன? அதன் பூர்விகம் எது?

அஜந்தா, எல்லோரா குகைகளைப் பற்றி பெரும்பாலானோருக்குத் தெரியும். எட்டாம் நூற்றாண்டுகளில் தொடங்கிய இந்த கேரளா மியூரல் கலையானது, அஜந்தா ஓவியங்களில் இடம்பெறும் சில தனித்துவத்தையும், சிறப்பையும் கொண்டுள்ளது. குறிப்பாக மியூரல் ஓவியங்களில் பிரதானமாக பார்க்கப்படும் மீன் கண்கள், கூர்மையான மூக்கு போன்ற சிறப்பம்சங்கள் அனைத்துமே அஜந்தாவில் இருந்து தழுவிய சில அம்சங்கள். முன்பெல்லாம் இயற்கை சார்ந்த நிறங்கள்தான் பயன்படுத்தப்பட்டது. ஆனால் ஓவியங்கள் துடிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே தற்போது அக்ரலிக் நிறங்கள் பயன்படுத்தப்படுகின்றன.


கேரளா மியூரல் ஓவியம்

கேரளா மியூரலுக்கும் சராசரி ஓவியங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன?

கேரளா மியூரல் என்பது தனிப்பட்ட வடிவம் அமைத்து வரையப்படுவது. சராசரி ஓவியங்களில் மனதிற்கு பிடித்தாற்போல ஓவியங்களை வரைந்துகொள்ளலாம். ஆனால் கேரளா மியூரல் வரைவதற்கென்றே ஒரு சில அளவீடுகள் இருக்கின்றன. இதில் தியான ஸ்லோகம் மற்றும் ஷில்பசாஸ்த்ரா என்று சொல்லக்கூடிய அளவீடுகளை வைத்து குறிப்பிட்ட கோட்பாடுகளின் அடிப்படையில் கேரளா வரைபடங்கள் வரையப்படுகின்றன. அதாவது, எந்த மாதிரியான ஓவியங்களுக்கு என்ன மாதிரியான அளவீடுகள் வைக்கவேண்டும் என்பது மட்டுமல்லாமல், தெய்வத்தின் வடிவம் வரையும்போது எந்த திசையில் தெய்வ ஆயுதத்தை வரைய வேண்டும் என்பனவையும் இதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவைகளை சரிவர பயன்படுத்துவதன்மூலம் சரியான அளவீடுகளுக்குள் உண்டான சித்திரம் நமக்கு கிடைக்கும்.

சுவர் தயாரிப்பு மற்றும் இயற்கையான நிறங்கள் பயன்படுத்துவது என்பது கேரளா மியூரல் கலையில் எத்தகைய சிறப்பை உடையது?

கேரளா மியூரல் ஓவியத்திற்கென்றே பிரத்யேகமான சுவரை தயார் செய்யவேண்டும். `சுவர் தயாரிப்பு’ என்பது மிகவும் சிரமமான வேலையாகும். சுண்ணாம்பு, தேங்காய்த் தண்ணீர், பஞ்சு, கடுக்காய் போன்றவற்றை நன்றாக அரைத்து தேய்க்க வேண்டும். இதேபோல் சுவர் மீது முப்பத்தைந்து முதல் நாற்பது கோட்டிங்குகள் கொடுத்து காயவிட வேண்டும். இப்படி முழுமையாக சுவரைத் தயார் செய்தபிறகே அதன்மீது வரைவர். இதனை முறையாக வரைவதன்மூலம் பூச்சிகளால் ஓவியம் பாதிப்படையாது.


மியூரல் ஓவியத்திற்கு தயாரிக்கப்படும் இயற்கை நிறங்கள்

அடுத்ததாக கற்களில் இருந்து எடுக்கப்படும் இயற்கையான நிறங்கள். கற்களை அரைத்து, பின்னர் வெயிலில் காயவைத்து, வடிகட்டி, மரத்திலிருந்து எடுக்கப்பட்ட பசையோடு கலந்து செய்யப்படுவதுதான் இந்த இயற்கையான நிறங்கள். இவ்வாறு எடுக்கப்பட்ட நிறங்களை அக்கரலிக்கோடு கலந்து பயன்படுத்துவதன்மூலம் இயற்கையான நிறத்தின் அம்சங்கள் அனைத்தும் முழுமையாகக் கிடைக்கும்.

கேரளா சுவரோவியத்தில் முகங்களை மட்டும்தான் வரைய இயலுமா?

அப்படி எந்த வரம்பும் இல்லை. ஒரு பொம்மையைக்கூட வரையலாம். பூக்கள், மயில், விலங்குகள் என பல மாதிரியாகவும் வரையலாம். நிறங்களினால் அதனை வேறுபடுத்தியும் காட்ட இயலும். அதாவது நீர் என்றால் ஊதா நிறம் பயன்படுத்துவதன் மூலம் எளிதில் உணர முடியும்.


மியூரல் ஓவியம் vs சுவரோவியம்

கேரளா மியூரல் ஓவியத்தில் தேர்ச்சிப்பெற எவ்வளவு நாட்கள் தேவை?

1989 ஆம் ஆண்டு முதல் `ஸ்கூல் ஆப் மியூரல்’ என்று சொல்லக்கூடிய நிறுவனம் ஒன்று குருவாயூரில் இயங்கி வருகிறது. அங்கு ஐந்து வருட டிப்ளோமா கோர்ஸாக இந்த மியூரல் கலைக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளில் முதல் மூன்று ஆண்டுகள் கலையை பற்றிய சில பொதுவான பாடங்கள் மட்டுமே கற்பிக்கப்படும். இறுதி இரண்டு ஆண்டுகள் மியூரல் கலையைப் பற்றிய தெளிவான பாடங்களும், மற்ற கலைக்கும் மியூரலுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகளையும் தெளிவாக கற்பிப்பர். இந்த மியூரலில் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. நான் இந்த கலையில் பதிமூன்று ஆண்டுகள் இருந்தாலும் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நிறையவே இருக்கிறது.

மியூரல் கலையை பிறருக்கு கற்றுக்கொடுக்கும் ஆர்வம் உங்களுக்கு இருக்கிறதா? அப்படி இருந்தால் எத்தனை ஆண்டுக்குள் கலையை கற்பிப்பீர்கள்?

மியூரல் கலையை பிறருக்கு கற்பிப்பது மிகவும் பிடித்தமான ஒன்றே. நான் தற்போது ஆரம்பநிலை மியூரல் கலையை கற்பித்து வருகிறேன். பெரும்பாலான மாணவர்களுக்கு இருக்கும் பொதுவான சந்தேகம், “நான் இந்த ஆரம்பநிலை மியூரல் கலையை கற்றால் பெரிய அளவிலான மியூரல் வேலைபாடுகளில் இணையலாமா?” என்பதுதான். இந்த சிந்தனை மிகவும் தவறானது. ஒரு கலையின் ஆரம்பத்தை மட்டுமே படித்துவிட்டு, முழுவதும் கற்றுவிட்டோம் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்வது கலையை தங்களுக்குள் வளரவிடாமல் தடுத்துவிடும்.


கேரளா மியூரல் வகுப்புகள்

கேரளா மியூரல் கலை எங்கெங்கு கற்பிக்கப்படுகிறது?

முக்கியமாக இரண்டு இடங்களில் இருக்கிறது. ஒன்று குருவாயூர். 1980-இல் குருவாயூரில் நடந்த தீ விபத்தில் ஏராளமான பழங்கால மியூரல் - சுவரோவியங்கள் எரிந்து நாசமாகின. ஆனால் இந்த கலையின் முக்கியத்துவத்தை அறிந்த நம்போதிரி ஒருவர், இதனை அழியவிடக்கூடாது என்ரு எண்ணி, 1989ஆம் ஆண்டு மியூரல் பயிற்சியகம் ஒன்றைத் தொடங்கினார். தொடங்கிய காலத்தில் ஆண்கள் மட்டுமே அதிகமாக இருந்தனர். ஆனால் தற்போது பெண்களும் அதிகமாக இந்த கலையை கற்க முன்வந்துள்ளனர். மற்றொரு மியூரல் பயிற்சியகம் காலடியில் இயங்கி வருகிறது.

ஒரு கேரளா மியூரல் வரைபடத்தின் விலை பற்றி கூறுங்கள்

விலை என்பது முழுவதுமாக அதன் கலைஞர்களை பொறுத்தே முடிவு செய்யப்படும். தேர்ந்த கலைஞர்களின் வேலைபாடுகள் என்பது அவர்களின் ஓவியத்தில் அறியலாம். பெரும்பாலும், மூன்றுக்கு இரண்டு என்ற அளவில் இருக்கும் ஓவியங்கள் 15,000 முதல் 16,000 ரூபாய் வரை இருக்கும். அதுவே பிரபலமான ஓவியம் என்றால் 50,000 ரூபாய் அளவிற்கு இருக்கும். இன்னும் சில சமயங்களில் அவரவர் வாழ்வாதாரத்திற்கு ஏற்றாற்போல முடிவு செய்வர். எனவே ஒரு கலைஞனின் உழைப்பை நன்கு உணர்ந்த பிறகு பேரம்பேசாமல் வாங்குவது அவர்களின் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும்.

Updated On 18 Sep 2023 6:52 PM GMT
ராணி

ராணி

Next Story