இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

ஒரு படத்தின் கதாநாயகன், கதாநாயகி, அவர்களின் நடிப்பு, குரல், நடனம் மூலம் பேசப்படுவது போல, அவர்கள் படத்தில் அணியும் ஆடை மூலமும் ‘பேசப்படுகிறார்கள். குறிப்பாக படத்தில் வரும் அதே ஆடையை வாங்க வேண்டும் என்று எண்ணுபவர்களும் பலர். அப்படி ஒரு படத்தில் ஆடையானது பெரும் பங்கை பெறுகிறது. ஆடை பற்றி பேசப்பட்டாலும் அதை வடிவமைத்த ஆடை வடிவமைப்பாளர்கள் பற்றி நாம் பேசுவதில்லை. அவர்களை அவ்வளவு எளிதில் கௌரவிப்பதும் இல்லை. அவ்வகையில் சமீபத்தில் வாசு இயக்கத்தில் லாரன்ஸ், கங்கனா நடிப்பில் வெளியான ‘சந்திரமுகி 2’ படத்திற்கு ஆடை வடிவமைத்தவர் டோரதி ஜெய். இவர் ‘சந்திரமுகி 2’ படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்ததை தவிர ‘வுல்ப்’, ‘போகன்’ போன்ற திரைப்படங்களிலும் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்திருக்கிறார். அவர் அளித்த பிரத்யேக நேர்காணலை இங்கு பார்ப்போம்.

ஆடை வடிவமைப்பில் உங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

சிறு வயதில் ஆடை வடிவமைப்பாளராக வேண்டும் என்று நான் ஆசைப்படவில்லை. எனக்கு எப்படியாவது நான் பிரபலமாக வேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் இருந்தது. நான் மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியில் பி.எஸ்.சி விஷுவல் கம்யூனிகேஷன் படிக்கும்போது இன்டெர்ன்ஷிப் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. அப்போது எனக்கு இந்த டிசைனிங் துறையில் மட்டும்தான் வாய்ப்பிருந்தது. சொல்லப்போனால் நான் மிகவும் அழகாக ஸ்கெட்ச் செய்வேன். அப்படி டிசைனிங் தொடங்கப்பட்டு ஆடை வடிவமைப்பில் மிகவும் பிரபலமான அனு வர்தனிடம் நான் செய்த டிசைனிங் எல்லாம் அனுப்பி பின்னர் கபாலி, காஷ்மோரா ஆகிய திரைப்படங்களில் அவரின் உதவியாளராக பணிபுரிந்தேன். என் கல்லூரி படிப்பு முடிந்தவுடன் இந்த துறையில் என்னை முற்றிலும் ஈடுபடுத்திக்கொண்டேன்.


ஆடை வடிவமைப்பாளர்கள் டோரத்தி ஜெய் மற்றும் அனு வர்தன்

நீங்கள் அனு வர்தனிடம் பெற்ற முதல் பாராட்டு என்ன?

முதலில் நான் நகை வடிவமைப்பாளராகதான் பணிபுரிந்தேன். அப்போது அனு வர்தன் காஷ்மோரா பட கிளைமாக்ஸில் நயன்தாராவுக்கு இதுவரை இல்லாத புதிய வகை நகையை வடிவமைக்க வேண்டும் என்று 10 விதிமுறைகள் கூறி வடிவமைக்க சொன்னார். அதுவே என் முதல் வடிவமைப்பு என்று சொல்லலாம். இந்த வடிவமைப்பிற்காக நான் அனு வர்தனிடம் பாராட்டு பெற்றேன்.

பாராட்டு வாங்கியது போல அனு வர்தனிடம் திட்டு வாங்கியதுண்டா?

இவர்களிடம் மட்டுமல்ல நான் பணிபுரிந்த மற்ற வடிவமைப்பாளர்களிடமும் அதிகமாக திட்டு வாங்கியுள்ளேன். ஒருமுறை போலோ டி - ஷர்ட் கொண்டுவர சொன்னார்கள். நானோ சாதாரண ஒரு ரவுண்டு காலர் வெள்ளை டி - ஷர்ட் கொண்டு சென்றேன். மொத்த குழுவினரின் முன்னாள் திட்டு வாங்கி தேம்பி தேம்பி அழுதேன். இது போல நிறைய திட்டு வாங்கிய சம்பவங்களும் உண்டு.

இதுவரை நீங்கள் வடிவமைத்ததிலேயே நீங்கள் அதிக பாடுபட்டு பணிபுரிந்த திரைப்படம் எது?

நிச்சயமாக ‘சந்திரமுகி 2’ திரைப்படம்தான்.


'சந்திரமுகி 2' திரைப்படத்தில் ராகவா லாரன்ஸிற்கு டோரத்தி ஜெய் வடிவமைத்த ஆடை

நீங்கள் வடிவமைத்த உடை அணிந்த கதாநாயகன் யாராவது உங்களை பாராட்டியதுண்டா?

கதாநாயகன் யாரும் பாராட்டியதில்லை. ஆனால், நான் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்த ‘வுல்ப்’ படத்தின் தயாரிப்பாளர் பாராட்டினார். இத்திரைப்படத்தின் மொத்த குழுவும் கன்னடம் தெரிந்தவர்கள். அதனால் அவர்கள் என்னை திட்டுகிறார்களா? பாராட்டுகிறார்களா? என்பதே தெரியாது. தயாரிப்பாளர் கூப்பிட்டவுடன் ஐயோ என்ன திட்ட போகிறாரோ என்று கண்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் அளவுக்கு பயமிருந்தது. பொதுவாகவே ஒரு ஆடை நல்லா இல்லை என்றால் முகத்தில் அடித்தவாறு கூறிவிடுவார்கள். ஆனால் அதுவே நன்றாக இருந்தால் அதை பாராட்டி பேசுவது கடினமே. அதுவும் குறிப்பாக நம்முடன் பணிபுரியும் தொழில்நுட்ப வல்லுநர்கள் பாராட்டுவது மிகவும் அரிது.

அதேபோல் சமீபத்தில் நான் பணிபுரிந்த ‘சந்திரமுகி 2’ ஆடைக்காகவும் பாராட்டு வாங்கினேன். கதாநாயகி கங்கானாவுக்கு வேறு வடிவமைப்பாளர் ஆடை வடிவமைத்தார்கள். அதேபோல் கதாநாயகன் லாரன்ஸ் மாஸ்டருக்கும் வேறு வடிவமைப்பாளர்தான் வடிவமைப்பதாக இருந்தது. ஆனால், திடீரென்று அவர் விலகிக்கொள்ள என்னை தொடர்புகொண்டு மாஸ்டருக்கு வடிவமைக்க சொன்னார்கள். கங்கனாவுக்கு ஏற்கனவே ஆடை தயாராக இருந்த நிலையில், லாரன்ஸ் மாஸ்டருக்கு ஆடை வடிவமைக்க வெறும் 1 வாரம் மட்டுமே இருந்தது. பசி, தூக்கம், தாகம் என்று எதுவும் பாராமல் அதிக உழைப்பு போட்டு வெறும் 1 வாரகால அளவில் வெற்றிகரமாக ஆடை வடிவமைத்தேன். அதுவும் இப்படத்தின் இயக்குநர் உங்களை நம்பி இருக்கிறேன் என்று கூற, பொறுப்பும் பயமும் வழக்கத்தை காட்டிலும் மிக அதிகமாகிவிட்டது. மாஸ்டரின் இடை, உயரம், ஆம்ஸ் என்று அவருக்கு ஏற்றபடியும், கங்கனாவின் ஆடைக்கு ஏற்றபடியும் பார்த்து பார்த்து வடிவமைக்கப்பட்டது. அதுவும் இந்த திரைப்படத்தின் ஆடையானது வரலாறு சார்ந்ததாக இருக்க வேண்டும். கங்கனா தனது ஆடையை அணிந்து மிகவும் ஜொலி ஜொலிப்புடன் தயாராக இருக்க, மாஸ்டர், நான் வடிவமைத்த ஆடையை அணியும்வரை, தேர்வெழுதி மதிப்பெண்ணுக்கு காத்திருப்பது போல மிகவும் பதட்டமாக இருந்தது. இறுதியில் படக்குழுவினர் அனைவரும் ஆடை வித்தியாசமாக அழகாக இருக்கு என்று பாராட்டினார்கள். அந்த உடையே படத்தின் போஸ்டரில் வெளிவந்தது.

உங்களுக்கு பிடித்த கதாநாயகனுக்கு இதுவரை நீங்கள் ஆடை வடிவமைத்தது உண்டா? உங்களுக்கு பிடித்த கதாநாயகன் யார்?

எனக்கு பிடித்த கதாநாயகன் ரன்பீர் கபூர். இதுவரை அவருக்கு வடிவமைத்ததில்லை ஆனால் வரும் காலங்களில் நிச்சயம் அவருக்கு ஆடை வடிவமைப்பேன் என்று நம்புகிறேன்.


வித்தியாசமான போஸ்களில் ஆடை வடிவமைப்பாளர் டோரத்தி ஜெய்

ஆடை வடிவமைப்பு ப்ராஜெக்ட்கள் வருவது எப்படி?

முதல் காலகட்டங்களில் நாம்தான் வாய்ப்பு தேடி அலைய வேண்டும். நம் வேலைகளை பார்த்து அது அவர்களுக்கு பிடித்திருந்தால் அவர்களே நமக்கு வாய்ப்பு கொடுப்பார்கள். அதனால் ஆடை வடிவமைப்பாளர்களுக்கு பொறுமை என்பது மிக மிக அவசியம். படத்தின் படப்பிடிப்பு முதல் படப்பிடிப்பின் வெளியீடு வரை காத்திருக்க வேண்டும். அதற்கு பின்னரே அந்த ஆடை மக்களை எந்த அளவிற்கு கவர்ந்திருக்கிறது என்பது தெரியும். அதை கருதியே மற்ற திரைப்படங்களுக்கு வடிவமைக்க வாய்ப்புகள் வருவதுண்டு.

நீங்கள் ஆடை வடிவமைப்பை தாண்டி நன்றாக நடனம் ஆடுவீர்கள் என்று கேள்விப்பட்டோம். அது குறித்து சில வார்த்தைகள்.

நடனம் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் கிளாசிக்கல் நடனம் பயின்றிருக்கிறேன். ஆனால், இந்த சினிமா துறையில் ஆடை வடிவமைப்பாளராக அறிமுகமான நான் கடைசி வரை ஆடை வடிவமைப்பாளராகவே இருக்க விரும்புகிறேன். நான் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்த கதாநாயகர்கள் பலரும் நன்றாக நடனம் ஆடுபவர்களே. பிரபு தேவா மாஸ்டர் கூலஸ்ட் நபர் என்று சொல்லலாம். லாரன்ஸ் மாஸ்டர் மிகுந்த பொறுமை மிக்கவர், வீட்டில் ஒருவராக நடத்துபவர், வேலையில் மிக ஆர்வமாகவும் நேர்மையாகவும் இருப்பவர். சாண்டி மாஸ்டரை கிரியேட்டிவ் நபர் என்று சொல்லலாம். இவருடைய ஒரு பாடலுக்கு ஆடை வடிவமைத்த போது அந்த பாடலுக்கு ஏற்றது போல் இப்படி இப்படி இருக்க வேண்டும் என்று வித்தியாசமான ஆடையை பரிந்துரைத்தார்.

Updated On 27 Nov 2023 6:47 PM GMT
ராணி

ராணி

Next Story