இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

மணப்பெண்கள் என்றாலே தனித்துவமாக தெரியவேண்டும் என்ற ஆசை கட்டாயம் இருக்கும். அதிலும் குறிப்பாக திருமணக் கோலத்தில் மேக்-அப் சற்று அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை என்றுதான் சொல்வார்கள். ஆனால் இப்போதுள்ள பெரும்பாலான பெண்கள் மேக்-அப் போட்டாலும் போட்டமாதிரி தெரியக்கூடாது என்றுதான் கேட்கிறார்கள். பளிச்சென்ற மேக்-அப் லுக்கைவிட மேக்-அப் போட்டும் போடாத மாதிரி, அதேசமயம் முகம் முழுக்க ஒரேமாதிரி தெரியக்கூடிய லுக்கை உருவாக்குவதற்குத்தான் அதிக நேரம் தேவைப்படுகிறது. திருமணத்தின்போது நேர்த்தியாகவும், அழகாகவும் தெரியும் மணப்பெண் அலங்காரம் செய்வது எப்படி என விளக்குகிறார் அழகுக்கலை நிபுணர் லலிதா.

வறண்ட சருமமாக இருப்பின் முதலில் முகம் முழுவதும் ஒரே அளவில் (even) மாய்ச்சுரைஸர் தடவவேண்டும்.


கன்சீலர் பூசுதல் - புருவங்களுக்கு அவுட்லைன் வரைதல்

கண்களுக்கு கீழ்ப்பகுதியில் கருமை இருப்பின் அதனை மறைக்க கன்சீலர் பயன்படுத்த வேண்டும். கன்சீலர் தடவும்போது கண்கள் மேல்நோக்கி பார்த்தவாறு, ப்ரஷ்ஷால் கண்களுக்கு கீழ்ப்பகுதியில் சரிசமமாக பூசவேண்டும். முகத்தில் வாய், மூக்கு மற்றும் பிற பகுதிகளில் கருமை அல்லது தழும்புகள் இருந்தால் அந்த இடத்திலும் கன்சீலர் தடவி அதை மறைக்கவேண்டும். கன்சீலர் தடவும்போது ப்ரஷ்ஷை வைத்து அழுத்தி தேய்க்காமல் டேப் (tap) செய்யவேண்டும்.

அடுத்து புருவங்கள் வரையவேண்டும். புருவம் ஷேப்பாக இருக்க வெளிப்புறத்தில் அவுட்லைன் வரைந்து, அதன்பிறகு உள்ளே இருக்கும் இடைவெளியை நிரப்பவேண்டும். இப்படி புருவங்கள் வரையும்போது கன்சீலர் கலைந்துவிட்டது போன்று தோன்றினால் லூஸ் பவுடரைக் கொண்டு முகம் முழுக்க கொஞ்சம் டேப் செய்யவேண்டும்.

அடுத்து கண்களுக்கு மேல் ஐஷேடோ போடவேண்டும். ஐஷேடோவை ப்ரஷ்ஷால் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து கண்களின் வடிவத்திலேயே முதலில் மேற்புறத்தில் அவுட்லைன் வரைந்து பின்னர் உள்பகுதியை நிரப்பவேண்டும். உடையின் நிறத்திற்கு ஏற்ப ப்ரான்ஸ், கோல்டு அல்லது மெரூன் போன்ற நிறங்களை பயன்படுத்தலாம்.


மல்டி கலர் ஐஷேடோக்களை ப்ளெண்ட் செய்தல் - மேல் இமைப்பகுதியில் ஐலைனர் போடுதல்

உள்பகுதியில் கொடுக்கப்படும் நிறமானது பளிச்சென தெரியவேண்டுமானால், அங்கு சிறிது கன்சீலரை டேப் செய்து அதன்மீது விருப்பமான ஐஷேடோ கலரை பூசிக்கொள்ளலாம். உள்பகுதியில் உடைக்கு மேட்ச் ஆகும் நிறத்தை பளிச்சென கொடுத்துவிட்டு, ஓரங்களில் அதைவிட அடர் நிறத்தை பயன்படுத்தி அவுட்லைன் மற்றும் உள்ளே இருக்கும் கலர்கள் அனைத்தையும் சேர்த்து ப்ளெண்ட் செய்யவேண்டும்.

புருவங்கள் மற்றும் கண்களுக்கு இடைப்பட்ட பகுதியில் ஹைலைட்டர் பயன்படுத்தவேண்டும். அந்த பகுதியில் வெள்ளை நிறத்தைப் பயன்படுத்தாமல் ஐவரி நிறத்தைப் பயன்படுத்தி நிரப்பவேண்டும். புருவம் மற்றும் ஐஷேடோவிற்கு இடையே கோல்டு, ப்ரான்ஸ் போன்ற பளிச் நிறங்களை பயன்படுத்தினால் பார்ப்பதற்கு நன்றாக இருக்காது.

அடுத்து கண்களுக்கு மேற்பகுதியில் ஐலைனரால் வரைந்து, கீழ்ப்பகுதியில் காஜல் கொண்டு வரையவேண்டும். மேற்பகுதியில் எந்தவகை லைனர் (Liquid, Gel or Pen) வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அதேபோல் கண்களுக்கு மேலும் கீழும் வாட்டர்லைனிலும் காஜல்கொண்டு வரையவேண்டும்.


ஃபவுண்டேஷன் ஸ்டிக்கால் முக அமைப்பிற்கேற்ப வரைதல் - இடையிடையே காண்டோர் செய்தல்

ஏற்கனவே ஐ-லேஷ் அடர்த்தியாக இருந்தால் மஸ்காரா மட்டும் பயன்படுத்தலாம். ஐ- லேஷ் குறைவாக இருப்பின் செயற்கை ஐ- லேஷ் பொருத்தலாம். அப்படி செயற்கையாக வைத்தாலும் முதலில் மஸ்காரா போட்டுவிட்டு பின்னர், செயற்கை ஐ- லேஷை பொருத்தவேண்டும். கண்கள் பளிச்சென தெரிய விரும்பும் மணப்பெண்கள் வேண்டுமானால் லென்ஸ் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இத்துடன் ஐ மேக்-அப் முடிந்துவிடும். முதலில் கண்களுக்கான மேக்-அப்பை முடித்துவிட்டு, பிறகு முகத்திற்கு போட்டால் மேக்-அப் அழியாமல் இருக்கும்.

அடுத்து முகத்திற்கான மேக்-அப்பை போடலாம். முதலில் ஃபவுண்டேஷன் ஸ்டிக் பயன்படுத்தி நெற்றி, கன்னம் மற்றும் வாயைச் சுற்றி வரையவேண்டும். அதற்கு இடைப்பட்ட இடங்களில் காண்டோர் கொண்டு வரையவேண்டும். எப்போதும் சரும நிறத்தைவிட ஒரு ஷேட் ப்ரைட்டாக பயன்படுத்துவது நல்லது.


ஃபவுண்டேஷன் மற்றும் காண்டோரை ஸ்பான்ச் பயன்படுத்தி ப்ளெண்ட் செய்தல்

நெற்றி பெரிதாக இருப்பவர்களுக்கு காண்டோர் கொண்டு சற்று சிறிதாக்கி காட்டலாம். முகம் முழுவதும் தேவையான இடங்களில் காண்டோர் ஸ்டிக்கால் கோடுகள் வரைந்து பின்னர் ப்ரஷ் பயன்படுத்தி ஃபவுண்டேஷன் மற்றும் காண்டோரை ப்ளெண்ட் செய்யலாம்.

அடுத்து காம்பாக்ட் பவுடரை ப்ரஷ்ஷால் எடுத்து ஏற்கனவே போட்டிருக்கும் ஃபவுண்டேஷனை செட் செய்யுமாறு பூசவேண்டும். அதன்மீது லூஸ் பவுடரை ப்ரஷ் கொண்டு லைட்டாக பூசினாலே போதும்.


காம்பாக்ட் மற்றும் லூஸ் பவுடரை போட்டு செட் செய்தல்

கடைசியாக ப்ளஷ் அல்லது ஷிம்மர் கொண்டு கன்னங்கள்மீது ப்ளெண்ட் செய்தால் முகத்திற்கான மேக்-அப் முடிந்துவிடும்.

அடுத்து உதட்டில் லிப்-லைனர் அல்லது லிப்ஸ்டிக் கொண்டு அவுட்லைன் வரையவேண்டும். அவுட்லைனை பொருத்தவரை எப்போதும் உதடு முழுவதும் பயன்படுத்தும் கலரைவிட ஒரு ஷேட் டார்க்காக இருக்கவேண்டும். லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பு லிப் பாம் அல்லது லிப் மாய்ச்சுரைஸர் போட்டுவிட்டு அதன்மேல் லிப்ஸ்டிக் போட்டால் ஷேப் நன்றாக வருவதுடன் உதடு வறண்டும் போகாது. அதேபோல் கருத்தும்போகாது.


லிப் லைனர் வரைந்து சரிசெய்து லிப்ஸ்டிக் போடுதல்

சிலருக்கு உதடு சிறிதாக இருந்தால் அதை மேக்-அப் மூலம் சற்று பெரிதாக்கியும் காட்டலாம். முகத்திற்கு காண்டோர் செய்வதன்மூலம் நெற்றி மற்றும் டபுள் - சின்னை மறைத்தும் காட்டமுடியும்.

ஹெவியான மேக்-அப் விரும்பாத, அதே சமயம் முகம் பளிச்சென தெரியவேண்டும் என விரும்புகிறவர்களுக்கு இதுபோன்று மேக்-அப் போட்டால் ப்ரைடல் லுக் நேர்த்தியாகவும், அழகாகவும் இருக்கும்.

Updated On 8 April 2024 6:25 PM GMT
ராணி

ராணி

Next Story